என் அன்புள்ள அம்மா





திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹாகத்தர்
thahiruae@gmail.com


Ø  ஊனம் என் ஒருக்கால்
ஒருக்கால்
என்னை அவர் முக்கிமற்றவராக விட்டிருக்கலாம்!
எனினும் தன்பால்
மற்றும் அன்பால்
வளர்த்தார் என்னை,
என் அன்னை!
Ø  சிசுவாய் வயிற்றில்
என்னை அவர் சுமந்த போதும்
மழலையாய்  அவர் மடியில் நான் தவழ்ந்த போதும்
எனக்காக அவர் இழந்தது
எத்தனையோ நாள் தூக்கம்!
ஊரே பற்றி எரிந்த போது
நான் காணாமல் போன போது
கதறி அழுது
அவருக்கு வந்தது மயக்கம்!


Ø  பிள்ளைகளுக்கு உணவு பகிர்ந்து
அவர் பசியாக இருந்த நாட்கள் பல!
பிள்ளைகள் தூங்க
நடுநிசிகளில் அவர் விழித்திருந்த நாட்கள் பல!
Ø  இருபதுகளில் நான்
வெளிநாட்டுக்கு வந்து விட்டேன்!
அவர் நாற்பதுகள் வரை
வீட்டை விட்டே வெளியே வர வில்லை!
Ø  அவருக்கு இருப்பது
மூன்று கை!
அது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை!
அடுத்து வலது கை மற்றும் இடது கை!

Ø  சிமினி விளக்கு ராத்திரி!
சீமெண்ணெய் தீர்ந்து விட்டதால்
உறங்கி விட்ட திரி!
எனினும்
உறங்காமல் என்னை
பார்த்துகொண்ட என் அன்னை
ஓர் அழகிய முன்மாதிரி!

Ø  “அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா “ என நான் கேட்டதில்லை
அதற்கு முன்பே
எனக்கு அவர் முத்தம் கொடுத்தார்!

Ø  அம்மா !
உரை நடைக்கு முன்
உலகில் நீதான்
எனக்கு நடக்க கற்றுக் கொடுத்தாய்!
Ø  நாலடியாருக்கு  முன்
நீதான் எனக்கு
காலடி எடுத்து வைக்க
கற்று கொடுத்தாய்!
Ø  உன் குரல்தான்
எனக்கு
முதல் திருக்குறள்!
        நீ
பேச கற்று கொடுத்தப் பின்புதான்
நான்
படிக்க கற்றுக் கொண்டேன்!

Ø  எனது
தமிழ் தாய் நீதான் !
   உன் மொழி
தமிழ் மொழி!
தாய்
உன் மொழிதான்
என் தாய் மொழி !

Ø  தமிழன்னை
இருப்பது
பாட்டில் இல்லை!
என் வீட்டில்தான்
என் அன்னை
என் தமிழன்னை!

Ø  அன்னையே
எனது உடலிலும், உடையிலும்
அழுக்கையகற்றிய உமது கைகள்
தூய்மையானவை!
நான் கொடுத்த கஷ்டங்களை மறந்து
என் அழுகை மறக்க
புன்னகைத்த உன் அன்பு முகம்
மிகவும் அழகானது!
                      

Ø  எனக்கு கண்ணீர் வந்த போது
எனது கரங்கள் துடைக்கும் முன்
துடைத்தது உனது கரங்கள் !
என்னை பற்றி
நானே கவலைப்படாத போது
கண்ணீர் விட்டது உனது இதயம் !
Ø  மழலையாய்
நான் இருந்த போது
என்னை பேச விட்டு நீ ரசிப்பாய்!
குழந்தையாய்
நான் இருந்த போது
எனக்கு ஊட்டி விட்டு நீ புசிப்பாய் !
Ø  எனக்கு கைகள் இருந்தும்
   உனது கைகள்தான் 
   எனக்கு உதவின !
   என் கைகளைக் கொண்டு
   சாப்பிடவே
   உன் கைகள்தான் கற்று தந்தன!
   கால்கள் இருந்தும்
   உன் தோள்களில்தான்
   ரொம்ப காலம்
   நான் இருந்தேன் !

Ø  பள்ளிக்கூடம் போகும் போது
வாசலில் நின்று வழியனுப்புவாய்!
நான் தெருவை விட்டு போகும் வரை
உன் கண்கள் சிமிட்டாமல் பார்க்கும் !
சாலையை நான் எப்படி கடப்பேனோ என
உன் உள்ளம் பதைபதைக்கும்!
உன் திருவாயோ பத்திரமாய் நான் திரும்ப வேண்டுமென
பிரார்த்தனையை உச்சரிக்கும்!


Ø  நீங்கள்
   நடக்க கற்று கொடுத்திராமல் இருந்திருந்தால்
   நான்
   உட்கார்ந்தே இருந்திருப்பேன்!
   பேச கற்று தராமல் இருந்திருந்தால்
       நான்
   ஊமையாய் இருந்திருப்பேன்!
                                                                                      (இன்னும் யோசிக்கிறேன்)














           
























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !