நன்றிக் கடனை மகன் தீர்த்துக் கொண்டான்
| திருச்சி A .முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com |
Ø வரலாற்றின் சாட்சியாம் அருங்காட்சியகங்களில்
பழைய பொருட்களை கூட
பாதுகாக்கிறார்கள் !
சமூகத்தின்
சாட்சிகளான
முதியவர்களை இவர்கள்
ஒதுக்குகிறார்கள்!
Ø நவீனம்
அதி நவீனம்
உயரமான கட்டிடங்கள் !
ஈனம்
மிக ஈனம்
முதிவர்கள் அங்கு
இல்லை, அவை வெற்றிடங்கள்!
Ø கொஞ்சி கொஞ்சி உணவூட்டிய அன்னை
ஒரு வேளை உணவுக்கு
கெஞ்சுகிறாள்!
அன்போடு அரவணைத்த
அன்னை
அவனிடமே பேச
அஞ்சுகிறாள்!
Ø குட்டி தாய் பசுவை விட்டு
பிரிக்கப்பட்டது!
குழந்தைகள்
தாயை விட்டுப் பிரிந்து விட்டார்கள்!
Ø பத்து மாதம்
கருவில் சுமந்து
பெத்தவள்!
இன்றுதான் வலியை உணர்ந்தாள்!
தான் தெருவில்
விரட்டப்பட்டபோது !
Ø அவனுக்கு
பாலும் அமுதும்
அன்னை அளித்த சொத்து!
வீடு வாசல்
தந்தை கொடுத்த
சொத்து!
நன்றிக்கடனை மகன் தீர்த்துக்
கொண்டான்
முதியோர் இல்லத்தில்
சேர்த்து !
Ø நடக்கக் கற்றுக் கொடுத்தவளுக்கு
இன்று நடக்க
முடியவில்லை!
பேசக் கற்று
கொடுத்தவளுக்கு
இன்று பேச
முடியவில்லை!
எனினும் நன்றிக்
கெட்ட மகன்
உதவ முன் வர வில்லை!
Ø எத்தனையோ தடவை மகனின் அழுகையை
சேலைத்தலைப்பால்
துடைத்தவள் இன்று அழுகையோடு !
அவனின் துணிகளை
துவைத்தவள்
இன்று துணி அழுக்கோடு!
மகன் உதறி தள்ளினான்
மனைவியோடு சேர்ந்து மிடுக்கோடு
!
Ø நாய் வாலாட்டி நன்றி தெரிவிக்கிறது
இவன் போட்ட ஒரு
எலும்புக்கு!
தாய்க்கு நன்றி பகர
மறந்தான்
பாலூட்டி அவள் வலு
சேர்த்த இவன் உடம்புக்கு !
Ø பொறு சிறிது காலம் வரைக்கும்!
ஆம் உனது முடிகள் நரைக்கும்!
அப்போது உனக்கும்
உரைக்கும்!
Ø அப்போது நீ உணருவாய்!
உன்னால் எதுவும்
செய்ய முடியாமல் திணருவாய்!!
v
கருத்துகள்
கருத்துரையிடுக