உமது கைகள் பிடித்துதான்!

பாசமிகு என் தந்தை பற்றி



திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
தோஹாகத்தர்
thahiruae@gmail.com


Ø  முதலில் எனக்கு
நடக்க மட்டும்தான்
தெரிந்திருந்தது!
பின்னர் எனக்கு
நீங்கள்தான் எங்கு நடந்து செல்லவேண்டுமென
வழி காட்டினீர்கள்!
Ø  வீட்டின்
வாசல்படியில்தான்
நான் அமர்ந்திருந்தேன்!
நீங்கள்தான் என்னை
பள்ளிவாசலுக்கு
அழைத்து சென்றீர்கள்!
Ø  உமது கைகள் பிடித்துதான்
முதலில் நான் உலகுக்கு அறிமுகமானேன்!
உமது தோள்களில்தான்
முதலில் நான் பயணம் செய்தேன்!
Ø  திண்ணையில்தான்
நான்
அமர்ந்திருந்தேன்!
என்னை
நீங்கள்தான்
பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றீர்கள்!
Ø  எனக்கு
நடக்க மட்டும்தான்
தெரிந்திருந்தது!
நீங்கள்தான்
பாதைகளை
கடக்க வழி காட்டினீர்கள்!
Ø  வாசிக்க
பள்ளியில் கற்றுக் கொண்டேன்!
யோசிக்க
நீங்கள்தான்
வீட்டில் கற்று கொடுத்தீர்கள்!


Ø  எனது
அன்புத்தந்தையே
நீர்தான்!
முதல்
எனக்கு ஆசிரிய தந்தையும்
நீர்தான்!
Ø  தந்தை கடமையாய்
மகன் என்னை
“மக்தப்” பள்ளிக்கு அழைத்துச் சென்றீர்!
ஆசிரிய கடமையாய்
மாணவனான எனக்கு
அங்கே மாமறை குர்ஆன் ஒத கற்று தந்தீர்!
Ø  பேனா மை வாங்கி
தந்தீர்
பேசும்போது உண்மையே பேச வேண்டுமென
சொல்லி தந்தீர்!
Ø  நேர்மை
கற்று தந்தீர்!
நேரம் தவறாமை
சொல்லி தந்தீர்!
Ø  விழாக்களில்
நான் பரிசு வாங்க
முதலில் கைத்தட்டியது நீர்தான் !
பல தடவை
கீழே விழாமல் இருக்க
முதுகில் தட்டிக் கொடுத்ததும் நீர்தான்!
Ø  நீர் பேச
பொதுமக்கள்
கேட்பார்கள்!
நீர் உன் மக்கள் பேச
பொறுமையாய்
கேட்பீர்!
உனக்கு
தெரிந்ததையே
பேசினாலும்
தெரியாதது போல் கேட்பீர்!
Ø  இரவுகளில்
பிள்ளைகள் தூங்கும் போது
இளைத்திருப்பதாக
இரக்கத்தோடு அம்மாவிடம் கூறுவீர்!
பகலில்
பள்ளி விட்டு வந்ததும்
களைத்துப் போயிருப்பதாக
கவலைப்படுவீர்!
Ø  கண்ணும் காதும்
எங்களுக்கு இருந்தாலும்
நீர்தான் எம்மை
கண்ணும் கருத்துமாய் வளர்த்தீர்!
Ø  கண் இமையாய்
எம்மை வளர்த்தீர்!
கண்ணியமாய்
எம்மை வளர்த்தீர்!
Ø  புத்தகம்
வாங்கி கேட்டால்
உடன் வாங்கி கொடுப்பீர்!
காசு இல்லாவிட்டாலும்
கடன் வாங்கியாவது
வாங்கி கொடுப்பீர்!
Ø  உமது கால்களில்
வெடிப்பு!
அது எமக்கான
உமது உழைப்பு!
உமது உடலில்
உள்ள
சர்க்கரையை விட
கவலை
உம் பிள்ளைகள்
மீதான அக்கறைதான்!
Ø     அன்னை
ரொம்ப காலம்
வீட்டை விட்டே
வெளியே வந்ததில்லை!
அன்பு தந்தையே நீங்கள்
இது வரை
நாட்டை விட்டே
வெளியே வந்ததில்லை!
Ø  வாழ்க்கையில்
சாதனை புரிய
வழிகளை காட்டினீர்கள்!
நீங்கள்
வேதனையையும்
வலிகளையும் தாங்கிக் கொண்டு!

Ø  இன்னும்
நடக்கிறது! நடக்கிறது!
உங்கள் கால்கள்
எங்களுக்காக!
Ø     பணம் தந்து
உதவியவனுக்கு
திருப்பி தந்து கடன் தீர்த்திட முடியும்!
படிப்பு கற்று
தந்தவனுக்கு
பண முடிப்பு தந்து கடன் தீர்த்திட முடியும்!
நீர் காட்டிய
அளவிலா உதவிக்கு
எதை திருப்பி தந்து விட முடியும்!
Ø     பெற்றீர் !
பேரன்புடன் வளர்த்தீர்!
மீண்டும்
பெற்றோராகியா உம்மை
வளர்க்க முடியும்?
Ø  படிக்க வைத்தீர்!
படித்தோர்தானே நீங்கள் !
உங்களை நான்
படிக்க வைக்கவா முடியும்?
Ø  நடக்க
கற்று கொடுத்தீர்!
மீண்டும் உமக்கு
நடையா கற்று கொடுக்க முடியும்?
Ø  நீங்கள்
எம்மை  பெற்றோர்!
எமது
அன்பு பெற்றோர்!
நாங்கள் உங்கள்
அன்பை பெற்றோர்!
உதவி பெற்றோர்!
Ø    ஊனமான
எனது கால்கள்
இன்றும் கூட
ஊனமில்லை என்றே உணர்கிறேன்!
உங்கள் உதவியுடன்
நம்பிக்கையோடு  நகர்கிறேன்!
Ø  இளம் பிள்ளை வாதம்
ஆம்
எனக்கு ஊனமில்லை 
இது
உங்கள்
இளம் பிள்ளையின் வாதம்!
Ø  நிர்வாணமாய் பிறந்தோம் !
ஆடை அணிவித்தீர்!
மானம் காக்க
ஆடை வாங்கி கொடுத்தீர் !
தன்மானமாய் வாழ
தனயனுக்கு கற்று கொடுத்தீர்!

உணவு அளித்தீர்!
நல்ல உணர்வுகளை அளித்தீர்!

வீட்டில்
வைத்து காத்தீர் !
வழிகேட்டில்
விழுவதை விட்டும்
பாதுகாத்தீர்!
Ø  எனக்கு
முகம் மட்டும்தான்
இருந்தது!
முகவரி தந்தது
நீங்கள்!

Ø  எனக்கு
வெறும் முகம் மட்டும்தான்
இருந்தது!
இவ்வுலகில் நீங்கள்தான்
என்னை அறிமுகம்
செய்து வைத்தீர்கள்!
Ø  எனக்கு
வெறும் கைகள் மட்டும்தான்
இருந்தது!
நீங்கள்தான்
இறை நம்பிக்கையையும்
சேர்த்து கொடுத்தீர் !
Ø  பயணம்
எம்முடையது!
பாதை
உம்முடையது!
Ø  பயணம்
எம்முடையது!
நடப்பது
உமது கால்கள்தான்!
Ø  சுமைகள்
எம்முடையது!
சுமப்பது
உமது
தோள்கள்தான்!

(இன்னும் யோசிக்கிறேன்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !