பெண்கள் அன்றும் இன்றும்
பேராசிரியர் அ. முஹம்மது அபூதாஹிர்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின்
பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
சாந்தியும் சமாதானமும் அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மத்
(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் பரிசுத்தமான குடும்பத்தார் மீதும், அவர்களின் கண்ணியமிக்க
தோழர்களின் மீதும் மேலும் அவர்களின் தூய வழியில் நடந்த ,நடக்கின்ற அனைவர் மீதும் உண்டாவதாக!
இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கமாகும்.அவனால்
அருளப்பட்ட நிறைவான மார்க்கமாகும் . குர்ஆனும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சொல்லும் செயலுமான
ஹதீஸும் இஸ்லாமிய வாழ்க்கை நெறிகளாகும்.
யார் இதன் படி நடக்கிறார்களோ அவர்களின்
இவ்வுலக வாழ்க்கை சமாதானமாக அமையும் மறு உலக வாழ்க்கையும் சந்தோஷமானதாக அமையும்.
இஸ்லாத்தின் வழி நின்று
ஆண்களில் இறைநேசர்களாக அறிஞர்களாக,
தியாகிகளாக, கொடையாளிகளாக பலர் வாழ்ந்து
வழிகாட்டியது போல் பெண்களிலும் பலர் அல்லாஹ்வின் அருள் பெற்ற
மகத்தான மக்களாக வாழ்ந்துள்ளார்கள்
முஸ்லிம் பெண்களின் முன்னோடிகளாக
திகழ்ந்த சஹாபாப் பெண்மணிகள் அனைத்து நற்குணங்களும், ஆற்றலும் அறிவும் உடைய மக்களாக திகழ்ந்தார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நாம்
அனைவரும் அறிந்த சஹாபாப் பெண்மணி.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி கூறும் போது எனக்கு இறைவனின்
புறத்திலிருந்து வரும் வஹியை பற்றி உள்ள பாதி ஞானத்தை என்னுடைய தோழர்கள் அனைவர்களிடத்திலும்
தேடி கொள்ளுங்கள் மீதி பாதி ஞானத்தை ஆயிஷா
ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபியவர்கள்
மரணித்த போது வயது பதினெட்டுதான். .
பெண்களைப் பற்றிய சிக்கலான பிரச்சனைகளுக்கு
தீர்வு சொன்னவர்கள் மட்டுமல்ல பொதுவான
மார்க்க விஷயங்களுக்கும் விளக்கம் கூறியவர்கள் அவர்கள் . மிக அதிக ஹதீஸ்களை
அறிவித்த பெண்மணியும் அவர்கள்தான் ஆனால் இன்றைய காலத்தில் 18 வயது பெண்ணின் நிலை என்ன? ஆயிஷா அவர்கள்
போல வர முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பெண்கள்
அவர்களுக்குரிய மார்க்க அறிவை மட்டுமாவது
பெற வேண்டாமா ? பின்பற்றி நடக்க வேண்டாமா?
இஸ்லாமிய மார்க்கம் வளர்வதற்கு முக்கிய
காரணமாக இருந்த அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை யாராலும் மறக்க முடியாது,ஹிரா
குகையிலிருந்து வஹீ வந்த முதல் நாள் இரவன்று திடுக்கமுற்று உடல் நடுக்கத்தோடு வந்த
நபியிடம் ஆறுதல் கூறி அரவணைத்தார்கள். அவர்களின் மார்க்கத்தை முதல் ஆளாய்
ஏற்றார்கள்.
அது மட்டுமல்ல, தன் செல்வத்தை எல்லாம் நபி (ஸல்) அவர்களுடைய
காலடியில் வைத்து இஸ்லாத்துக்காக அர்ப்பணம் செய்தார்கள் .. அவர்கள் கடைசி காலத்தில் போர்த்த எதுவுமின்றி குளிரில் நடுங்கிய வரலாறு நம் நமக்கு
கண்ணீரை வர வைக்கும்.
இன்று பெண்களிடம் தரும சிந்தனை என்பதே
மிகவும் அரிதாகி விட்டது. கணவனுக்கு தான் கொண்டு வந்த நகைகளை மார்க்கத்திற்க்காக அள்ளிக்
கொடுக்கும் கதீஜாக்கள் அல்ல சிறிய உதவிக்காக நாடி வரும் மக்களுக்கு பணத்தை கிள்ளி கொடுக்கும் அளவுக்கு கூட நமது கதீஜாக்களும்
பாத்திமாக்களும் இல்லை. நேர்ச்சைக்காக மட்டுமே கொஞ்சம் தருமம் செய்வது அங்கொன்றும்
இங்கொன்றுமாய் காணப்படுகிறது.
அன்னை பாத்திமா (ரலி) நபிமார்களின்
தலைவரின் மகள், அறிவில் சிறந்த அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி இமாம் ஹசன்
மற்றும் ஹுசைனின் அன்புத்தாய் எல்லாவற்றுக்கும் மேலாக சுவனத்தின் தலைவி. அவர்கள்
எப்படி வாழ்ந்தார்கள்?
வீட்டு வேலைக்கு தனக்கு பணியாள் வேண்டுமென்று தம்
தந்தையான நபியிடம் கேட்ட போது அவர்கள் ஒரு
தஸ்பீஹை சொல்லிக் கொடுத்து இதை ஓதிக் கொண்டு வேலை செய்யுங்கள் வேலை இலகுவாக
இருக்கும் என்ற அவர்கள் சொன்னார்கள். .அவர்களும் தந்தை சொன்னதற்கு ஏற்ப
அந்த தஸ்பீஹை செய்தார்கள் தம் குடும்ப பணியை தாமே செய்தார்கள்.
எளிமையாக வாழ்ந்தார்கள். ஏழ்மையை
விரும்பி ஏற்று வாழ்ந்தார்கள்.ஒழுக்கமாக வாழ்ந்தார்கள்
மிக்ஸி, கிரைண்டர், சிலிண்டர் என நவீன சாதனங்கள் வந்த போதும் கூட சரியான நேரத்தில்
சமைக்காமல் கடமையான தொழுகையை கூட நிறைவேற்றாமல் சாட்டிலும் ,யூடியூபிலும் நேரத்தை கழித்து
விட்டு ஆன்லைனில் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்து சாப்பிடும் இன்றைய பெண்கள் அன்னை
பாத்திமாவின் எளிய வரலாற்றை படித்து பயன் பெற வேண்டும்.
இன்று கஷ்டங்கள் வந்தால்
அல்லாஹ்வுக்கு கண் இல்லையா? என்று புலம்பி தலையில் அடித்து கதறும் பெண்களை
பார்க்கிறோம்.மார்க்கம் இறை நம்பிக்கையை மட்டும் போதிக்க வில்லை சகிப்புத்தன்மை
மற்றும் பொறுமையை அது போதிக்கிறது.
தன் குழந்தையை இழந்த சோகத்திலும்
வேகமாக எந்த வார்த்தையும் சொல்லாமல், எழும்பி வரும் கண்ணீரைக் கூட பொறுத்து பொறுமை
ததும்பிய ஒரு சஹாபாப் பெண்மணி குறித்தே இங்கே நான் சொல்லப் போகிறேன்
நபித்தோழர் ஹஜ்ரத் ஜாபிர் ரலியல்லாஹு
அன்ஹு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருந்தது
அக்குழந்தை நோயுற்றது இந்த இக்கட்டான நேரத்தில்
ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முக்கியமான பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள நேர்ந்தது அப்போது
தன் மனைவியிடத்தில். குழந்தையை நன்றாக கவனித்துக்
கொள் விரைவில் வந்துவிடுவேன் என்று கூறி சென்று விட்டார்கள்.அவர் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது குழந்தை இறந்துவிட்டது
இந்த நிலையில் ஹஜ்ரத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் கணவரை அவர்களின் மனைவி வரவேற்றார்கள் ஜாபிர் ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள் தம் மனைவியிடம் குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது நன்றாக இருக்கிறது
என்று பதில் கூறினார்கள் பிறகு ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கையை கழுவி சாப்பிட்டார்கள்
பின்னர் அவர்களின் மனைவி நான் உங்களிடத்தில்
ஒரு கேள்வி கேட்கட்டுமா? என்று கேட்டபோது ஜாபிர் அவர்கள் சரி என்றார்கள் அதற்கு அப்பெண்மணி
யாராவது ஒரு மனிதர் நம்மிடம் அமானிதமாக ஒரு பொருளை கொடுத்து ஒரு நேரத்தை குறிப்பிட்டு
அந்த நேரத்தில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டு பின்னர் திரும்பி வந்து அந்த பொருளை கேட்டால் கொடுக்க வேண்டுமா? இல்லையா?
என்று கேட்டார்கள் அதற்கு ஜாபிர் ரலியல்லாஹு அவர்கள் சரியான நேரத்தில் திருப்பிக் கொடுப்பது
அவசியம் என்றார்கள் அப்படியானால் குழந்தையும் ஒரு அமானிதம்தான் அதை
நமக்கு இறைவன் கொடுத்தான். நம்மிடத்தில் இருந்தது
மறுபடியும் அதனை அவன் எடுத்துக் கொண்டான் என்று
பதில் கூறினார்கள். அதைக் கேட்ட ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒன்றும் சொல்லாமல்
மனைவியின் கையில் முத்தமிட்டு அல்லாஹ் நல்ல கூலியை கொடுப்பானாக என்று துஆ செய்தார்கள்
இன்று உள்ள பெண்கள் எப்படி என்றால்
ஆண்கள் வீட்டை விட்டு வெளியில் சென்று அடுத்த கணமே ஒரு கால் வரும் அந்த சமயத்தில்
வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அது நல்லதோ கெட்டதோ விடாமல் ஒப்புவித்து
விடுவார்கள் அதனால் வெளியில் சென்ற ஆண்கள்
அங்கே நிம்மதி இழந்து வேலையை பார்ப்பதா இல்லை தன் வேலையை விடுவதா என்ற குழப்பத்திற்கு
உட்பட்டு விடுவார்கள். சகிப்புத்தன்மையும் சமாளிப்புத்திறனும் உள்ள மனைவியால்தான் தானும் சந்தோஷமாக வாழ முடியும், குடும்பத்திற்கும் நிம்மதி தர முடியும் குழந்தை இறப்பு என்பது அவர்கள் வாழ்வின்
மிகப்பெரும் இழப்பு அதை கூட எப்படி பக்குவமாக
எடுத்துச் சொன்னார்கள்? பாருங்கள் ! உடனே அவர்களுக்கு பாசம் இல்லை என்று அர்த்தம் கிடையாது
அந்த பாசத்துடன் பக்குவம் சகிப்புத்தன்மை பொறுமை இதை அனைத்தையும் மனதிலே வைத்து மற்றவர்களுக்கு
முன் உதாரணமாக வாழ்ந்தார்கள்
நாம் நினைவில் கொள்ள வேண்டும் ஆன்மீகத்தில் மட்டுமல்ல
அன்றைய பெண்மணிகள் தியாகத்திலும் முன்னுதாரணமாக இருந்தார்கள் தன் குழந்தைகளை மட்டுமல்ல
தன் உயிரையும் கொடுக்க முன் வந்தார்கள் அதற்கு உதாரணமாக உம்மு அம்மாரா ரலியல்லாஹு அன்ஹா
சபியா ரலியல்லாஹு அன்ஹா இன்னும் பல சஹாபா பெண்மணிகள் திகழ்ந்துள்ளார்கள்,
அன்று உள்ள ஸஹாபா பெருமக்கள் மார்க்கத்திற்காக
அனைத்தையும் தியாகம் செய்து வாழ்ந்தார்கள் ஆனால் இன்று உள்ள பெண்கள் உலக வாழ்க்கைக்காக
மார்க்கத்தை தியாகம் செய்கிறார்கள்
இது அட்மிஷன் காலம் எந்த படிப்பு
படித்தால் நல்ல பதவி நம் கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று தேடி தூர இடங்கள்
சென்று மக்கள் உலக கல்வி கற்கிறார்கள். அருகில் எண்ணற்ற மார்க்கக் கல்வி கூடங்கள் இருந்தும் அரிதான பெண்கள்தான் வருகிறார்கள். உலக கல்வி வேண்டாம்
என்று சொல்லவில்லை,அதை கற்றுக் கொள்ள வேண்டும்.அது உலகில் நாம் பிழைக்க
அவசியம் அதே நேரத்தில் இந்த உலகில் பிறப்பு முதல் இறப்பு வரை எப்படி வாழ
வேண்டும் பெற்றோருடன் உற்றாருடன்
மற்றோருடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று
கற்றுதரப்படுவது மார்க்க கல்வியில்தான், எனவே
அதனையும் அவசியமாக மிக அவசியமாக கற்க வேண்டும்.
இன்று நம் வீடுகளில் உள்ள ஆண்கள் பெண்கள் யாருமே முழுமையாக மார்க்கத்தை
கற்றுக் கொள்ளவில்லை.இன்னும் சொல்லப் போனால் பலர் மார்க்க அடிப்படை கல்வி கூட கற்க
வில்லை .அதற்கான சிறு முயற்சி கூட செய்ய வில்லை ஆண்களே கூட கற்று இருந்தால்தானே சமூகத்தில் சரி பாதியாக உள்ள பெண்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்?.
ஆப்புகள் டவுன்லோட் செய்ய
.ஆன்லைனில் ஆர்டர் செய்ய என உலக விஷயத்தில் நுனி விரலில் அறிவு கொண்டவர்கள்,
மார்க்க நெறிமுறைகள் ,கொள்கை பற்றிய அறிவில் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள்.
கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் காலச்சக்கரத்தில் தறிகெட்டு ஓடிக் கொண்டு
எவையெல்லாம் மார்க்க நெறிக்கு முரணோ அதையே
தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சுனாமி வந்து ஊர்களும் உயிர்களும் சுக்கு
நூறாய் போனது முதல் கொரோனா வந்து கொத்துக்கொத்தாய் எவ்வளவோ பேரை அள்ளிக் கொண்டு போனது வரை தெரிந்து இருந்தும் மார்க்கத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் நம் நிலை எண்ணி வருந்த
வேண்டும்.நாம் திருந்த வேண்டும்.சகோதரிகளே! தாய்மார்களே! நான் ஒன்று சொல்கிறேன் உங்களுக்கு
தெரிந்த விஷயம்தான் ஒரு பெண் திருந்தினால் ஒரு சமுதாயமே திருந்தி விடும். பித்அத்
அனாச்சாரம் பற்றி விழிப்புணர்வை பெற்ற உங்களில் ஒருவரால் ஒரு குடும்பமே சீர்திருத்தம் அடையும் முதலில்
நீங்கள் உங்களை செம்மைப்படுத்துங்கள் உங்கள் வாரிசுகள் அவர்கள் செம்மைப்படுத்தப்படுவார்கள்
நீங்கள் வீட்டில் தொடர் நாடகங்களை குடும்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தால் உங்களுடைய
குடும்பம் சமுதாயம் எதன் பக்கம் போகும் என்பதை பற்றி சிறிது சிந்தித்து பாருங்கள்!
சமூகத்தின் சரிபாதியாகவும்
எங்களின் சகோதரர்களாகவும் இருக்கும் ஆண்களே உங்களை பார்த்து கேட்கிறேன். சமையல் சரியில்லை
சோற்றில் உப்பு இல்லை என்றெல்லாம் கோபப்படும் நீங்கள் உங்கள் தாய் மனைவி சகோதரி அவர்கள் தொழுகாமல் நரகத்திற்கு
செல்லப் போவது பற்றி கவலைப்படாதது ஏன்? சுபுஹு
தொழுகைக்கு எழுப்பி விட்டால் உங்கள் மனைவி கோபப்படுவாளே என்று நினைக்கும்
நீங்கள், நீங்கள் மட்டும் நரகத்தை விட்டு தப்பித்து சொர்க்கம் சென்று விடலாம் என
நினைக்கிறீர்களா? நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பை
விட்டும் பாதுகாத்து கொள்ளுங்கள் என்ற குர்ஆனின் வசனத்தை நீங்கள் படித்ததில்லையா?
நீங்கள் உங்கள் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப் படுவீர்கள் என்ற நபிமொழியை
கேட்டதில்லையா?
அன்புக்குறிய சகோதரிகளே ! பர்தா அல்லாஹ்வின்
கட்டளை. தொழுகை எப்படி குர்ஆனின் கட்டளையோ பர்தாவும் குர்ஆனின் கட்டளையாகும்.
தொழுகை மானக்கேடான விஷயங்களை விட்டும் நம்மை தடுக்கிறது. பர்தாவும் மானக்கேடான
விஷயங்கள் நிகழ்வதை விட்டும் நம்மை தடுக்கிறது.பர்தா பெண்ணுக்கு நிம்மதி, தைரியம்,
கண்ணியம் மற்றும் பாதுகாப்பை அது உறுதி செய்கிறது. அது குறித்து கூறப்படும்
குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முஸ்லிம் வெறுப்பாலும் , முஸ்லிம்களிடையே உள்ள
அறியாமையாலும் சொல்லப் படுகிறதே தவிர அதில் எந்த உண்மையுமில்லை. பர்தாவின்
காரணத்தாலேயே இஸ்லாத்தை ஏற்ற நடிகைகள் எங்கே? சினிமா பார்த்து சீரழிந்து பர்தாவை
விட்ட நம் முஸ்லிம் பெண்கள் எங்கே?
நல்ல பெண்களுக்கு அல்லாஹ் பிர்அவ்னின்
மனைவியை உதாரணம் சொல்கிறான் கெட்ட பெண்களுக்கு அல்லாஹ் லூத் அலைஹிஸ்ஸலாம் மனைவியை உதாரணம் சொல்கிறான். பாருங்கள்.
இரு பெண்களை அல்லாஹ் குர்ஆனில் தூய்மைப் படுத்துகிறான். .ஈஸா
அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் மற்றும் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது
சொல்லப் பட்ட அபாண்டங்களை அல்லாஹ்
தகர்த்து அவர்கள் பரிசுத்தமான மக்கள் என்று அவனே சாட்சி சொல்கிறான்.
இந்த வரலாறுகள் நம்
பெண்களுக்கு தெரியுமா? இனிமேலாவது நம் சந்ததிகளுக்கு குர்ஆனை சொல்லிகொடுங்கள்
ஹதீஸை சொல்லிக் கொடுங்கள் நபி யார் ரசூல் யார், சஹாபாக்கள் யார் அவர்கள்
எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கற்றுக் கொடுங்கள் நாம் கண் மூடியப் பின் நம்மை மண்
மூடியப் பின் உள்ள வாழ்க்கையே உண்மையான வாழ்க்கையாகும். நிலையற்ற
இவ்வுலகை விட்டும் நிரந்தரமான மறு உலக உலகை நோக்கி பயணிக்கும்
நாள் மிகவும் இரகசியமானதாகும். அதற்கு தயாரிப்பு செய்வது அன்றாட வாழ்க்கையில்
மிகவும் அவசியமானதாகும்
எனக்கு வாய்ப்பு கொடுத்த
அனைத்து உஸ்தாதுமார்களுக்கும் நன்றியை கூறி விடைபெறுகிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
வபரக்காத்துஹூ
கருத்துகள்
கருத்துரையிடுக