அரபுத்தமிழ் - உருவாகியதும் சருகாகியதும்!

 

அ. முஹம்மது அபூதாஹிர்,

உதவிப் பேராசிரியர், அரபித்துறை , ஜமால் முகமது கல்லூரி, திருச்சி-20


 முன்னுரை:

தமிழ் அமிழ்து ,பல்லாயிரமாண்டுகால விழுது மிக நீண்ட நெடிய பாரம்பரியமும் நிறைய நீதி நெறி நூல்களையும் கொண்ட மொழி, கீழடி வரலாற்றாய்வின் படி  கிமுவிற்கு முன்பு பிறந்த மொழி, திராவிடக் குடும்பத்தில் பிறந்து தென்னாட்டில் செழிப்போடும் இன்றும் இருக்கும் செம்மொழி.

அரபு நிலம் என்பது புல் பூண்டற்ற வறண்ட திடல். ஆனால் அரபு மொழி ஓர் அரபிக்கடல். செமிட்டிக் குடும்பத்தில் பிறந்து இன்றும் நீண்ட காலம் நெடு வாழ்வு கொண்ட மொழி, இஸ்லாத்தின் வருகைக்கு முன் அம்பும் காதலும் மதுவும் கவிதைகளில் கரை புரண்டோடிய மொழி இஸ்லாத்தின் பின்பு அன்பும், நீதியும் அறமும் அலைபாய்ந்து ஓடும் மொழி.

மிழகத்திற்கும்  அரபுலகத்திற்க்கும்  இடையே  நீண்ட நெடிய தூரம் இருந்தாலும்  அரபு தேசத்தின் கடலோடிகள் இந்த இரு பகுதிகளையும் இஸ்லாம் தமிழகம் வருவதற்கு முன்பே கடல் பயணத்தின் மூலம் ஒன்றிணைத்திருந்தார்கள்.இஸ்லாத்தின் வருகைக்குப் பின்பு  ஏற்கனவே  சமத்துவம் சமூக நீதியின் விழுமியங்கள் கொண்ட  தனது கொள்கைகளான  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளீர், ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஆகியனவற்றில் தம்மை ஒத்த  கொள்கை கொண்ட இஸ்லாத்தை  தமிழகம் ஆமோதித்து வரவேற்றது,  அன்போடு அரவணைத்தது.

 

தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளான கீழக்கரை , காயல்பட்டினம், பரங்கிப்பேட்டை ஆகியவற்றில்  அரபு தேசத்தின் வணிகச் செல்வர் கூட்டமும், இஸ்லாத்தை பரப்ப வந்த இறை நேசச் செல்வர் கூட்டமும் வந்தனர். சேரரும் பாண்டியரும் சோழரும் அவர்களுக்கு  இம்மண்ணில் அடைக்கலம் தந்தனர், தம் மக்களை அவர்களுக்கு மனம் முடித்தும்  தந்தனர்.

அரபு மொழியில் அளவளாவிய மேற்காசியாவின் மேன்மைமிகு மக்கள்  பிற்காலத்தில்   தமிழ் மொழியை நன்கு கற்று அறிந்தனர். அதனை தங்கள் மொழி வழியே எழுதினர். அங்கே ஒரு புதிய மொழி பிறந்தது.அரபு எழுத்துக்களும் தமிழ் வார்த்தைகளும் கொண்ட அம்மொழி அரபுத்தமிழ் அல்லது அர்வி மொழி என அழைக்கப் பட்டது.

அரபுத்தமிழின் பிறப்பு, அதன் சிறப்பு, அதில்  உருவான நூல்கள்  அவற்றின் குறிக்கோள்கள் ,அரபுத்தமிழ் வீழ்ச்சிக்கு  காரணம் அதன் மீட்சிக்கான வழிகள்  ஆகியன குறித்து ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

 

அர்வி மொழி உருவாகிய காரணம் :

மணவை முஸ்தபா, “… அண்ணல் நபிகள் நாயகம் காலத்துக்குப் பின்னர் தமிழகம் வந்த அராபியர்கள் இசுலாமியக் கருத்துக்களைத் தமிழ் மக்களிடையே எடுத்துக் சொல்லும் கட்டுப்பாடு உடையவர்களானார்கள் அப்போது இஸ்லாமியச் சிந்தனைகளை இங்குள்ள மக்களிடையே எடுத்துச் சொல்வதற்கு அரபிமொழி வரிவடிவத்திலிருந்து தமிழே அவர்களுக்குப் பெருந்துணையாக இருந்தது என்கிறார்.

 

அல்லாஹ் நபி, ரசூல், ஆகிரா, மலாஇகா, ஜின், ஸாத், ஸிபாத், வுஜுத் போன்ற அரபுப்பதங்களுக்கு இணையான சொற்கள் தமிழில் இல்லை. மேலும், இவைபோன்ற அரபு வார்த்தைகளில் பொதிந்துள்ள ஆழமானகருத்துக்களை இன்னொரு மொழியில் புலப்படுத்தலும் சாத்தியம் அன்று. இத்தகைய ஒரு வரலாற்றுச்சூழ்நிலையிலேயே முஸ்லிம்கள் தமிழ்மொழியை அதன் இலக்கண அமைப்பை முற்றிலும் பேணி அரபிலிபியில் எழுதும் முறையைத் தோற்றுவித்ததோடு இஸ்லாமிய கோட்பாடுகளுடனும் மதக் கிரியைகளுடனும்தொடர்புடைய அரபுப் பதங்களை தமிழ்மொழியோடு இணைத்து பிரயோகிக் ஆரம்பித்தனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்திற்கு வருகை புரிந்த அரேபியர்கள் தங்கள் கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கு மொழிமாற்றம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நூற்றாண்டிலேயே அரபுத்தமிழ் தோற்றம் பெற்றுள்ளது என்கிறார்  சையது ஹஸன்

தைக்கா ஸூஐபு ஆலிம்  கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே தோன்றியது என்றும், இலங்கையில் 15 ம் நூற்றாண்டிலிருந்து அரபுத்தமிழ் புழக்கத்திலிருந்தது என்பதைப் போர்த்துக்கீசியத் தளபதி ‘ஒடரடோபார்பசா’ என்பவர் எழுதி வைத்திருப்பதாகவும் மேற்கோள் காட்டுகிறார் செ. பசுலுமுகியித்தீன்

தமிழை அரபியில் பிழையின்றி வாசிப்பதற்கு   400 வருடங்களுக்கு முன்பு காயல்பட்டினத்தைச் சேர்ந்த அமீர்வலி என்ற இறைநேசச் செல்வர்  அரபுத்தமிழ் எழுத்துக்களை அறிமுகம் செய்துள்ளார்.இந்த எழுத்துக்களில் பிற்காலத்தில் இமாம் அல்அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தமிழ் எழுத்துக்களின்  ஒலி  வடிவத்தின் இயல்புகளை பிரதிபலிக்கும் வண்ணம்  சில மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும்  பேரா : கோகன்  கூறியதாகவும்  ஆனால் அவை எந்த மாற்றங்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லையென டோஸ்டன் சாச்சர்  என்ற ஜெர்மானிய அறிஞர் குறிப்பிடுகிறார்

தமிழ் கற்ற அரபிகள் அல்லது அரபு கற்ற தமிழ் முஸ்லிம்கள் அரபுத்தமிழைத் தோற்றுவித்தனர். தமிழைப் பேச மட்டுமே பழகிக் கொண்ட அரபிகளேத் தங்களுக்கு அரபி எழுத்துக்களைக் கொண்டு தமிழை எழுதத் தொடங்கியிருக்க வேண்டும். அதுவே அரபித் தமிழாக வளர்ச்சியடைந்திருக்கும் என அ. மா. சாமி கூறுகிறார்

 

 

அரபுத்தமிழ் அளித்த நூல்கள் !

அரபுத்தமிழில் குர்ஆன் மற்றும்  ஹதீஸ் (நபிமொழி) மொழிபெயர்ப்புகள், குர்ஆன் தப்சீர் (விளக்கங்கள் ), பிக்ஹ் இஸ்லாமிய சட்டங்கள் , வெண்பாக்கள் ஆகியன வெளிவந்துள்ளது. நிறைய நூல்கள் வெளிவந்துள்ளது  மாத இதழ்கள் வெளிவந்துள்ளது.மேலும் அன்றைய நாட்களில் கடிதப் போக்குவரத்துக்கூட அரபுத்தமிழில் நிகழ்ந்துள்ளது.கல்வெட்டுக்கள் கூட அரபுத்தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளதை கீழக்கரை ஜூம்ஆ பள்ளிவாசலில் இன்றும் பார்க்கலாம்.

 

அரபுத்தமிழில் வெளிவந்த சில நூல்களை நாம் இங்கு பார்ப்போம்.

 

·         அரபுத் தமிழில் எழுந்த தப்ஸீர்களின்முன்னோடியாக இலங்கையைச் சேர்ந்த ஷெய்க்கு முஸ்தபா அவர்கள் கருதப்படுகின்றார்கள். பத்ஹுர்ரஹ்மான்பீ தர்ஜமதி தப்ஸீரில் குர்ஆன் என்ற பெயரில் அரபுத் தமிழில் அவர்கள் இயற்றிய தப்ஸீர்நான்கு பாகங்களில் ஹி 1291– (1874) ல் பிரசுரிக்கப்பட்டது.

·         காயல்பட்டணத்தைச் சேர்ந்தஹபீப் முஹம்மத் ஆலிம் அவர்கள் 'புதுஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீர் கலாமிர் ரஹ்மானிய்யா' என்ற பெயரில் அரபுத்தமிழில் எழுதிய குர்ஆன் விரிவுரை நூல் ஹி. 1297 கி.பி. 1879 இல் பம்பாயில் பிரசுரிக்கப்பட்டது.

·         பத்ஹுர் ரஹ்மான் பீ தர்ஜுமதி தப்ஸீரில் குர்ஆன், புதூஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீரி கலாமிர் ரப்பானிய்யா,தப்ஸுர் பத்ஹுல் கரீம்,பத்ஹுர் ரஹீம் பீ தப்ஸீரி குர்ஆனில் கரீம் ,ரஹ்மதுல் மன்னான் அவல் முதஅல்லிமீன மினல் வில்தான் ,அல் மனாபிஉல் அதம பீ தப்ஸீரி அம்ம,அல் ஜவாஹிருஸ் ஸலீமா,தப்ஸுர் ஸுரதுல் அஸ்ர்,தப்ஸீரே அர்வி : ஜுஸ்உ அம்மயத்,துரருத் தபாஸீர் ஆகியன அரபித்தமிழில் வெளிவந்த  வெளிவந்த குர்ஆன் விரிவுரை (தப்ஸீர் ) நூல்களாகும்.

·         ஷாம் ஷஹாபுதீன் அவர்கள்1119 ஹதீஸ்களை இரண்டடியாய்கொண்ட செய்யுள்களின் அமைப்பில் மொழிபெயர்த்து பெரிய ஹதீஸ் மாலை என்னும் நூலைத் தொகுத்தார். 608 ஹதீஸ்கள் அவரால்'சின்ன ஹதீஸ் மாலை' என்ற பெயரில் தொகுக்கப்பட்டது.

·         அஹ்ஸனுல் மவாஇள் வ அஸ்யனுல் மலாபிள் ,மௌஇளதும் முஸையனா வ முலப்பளதுல் முஹஸ்ஸனா,ஷூஅபுல் ஈமான்

பத்ஹுல் மஜீத் பீ ஹதீதின் நபிய்யில் ஹமீது, நபாஹதுல்  இத்ரிய்யா பீ ஷரஹில் வித்ரிய்யா,நஸ்ஹுல் ஹதீது வ பத்ஹுல் மஜீத்,அர்பஈன ஹதீதும் உரையும் ஆகியன அர்வி  மொழியில் வெளிவந்த ஹதீஸ் நூல்களாகும்.


·         இமாமுல் அரூஸ் என அழைக்கப்படும்மாப்பிள்ளை ஆலிம் அவர்கள் (செய்யித் முஹம்மத் ஆலித்) மதீனதுந் நுஹாஸ் என்ற பெயரில்அரபுத் தமிழில் ஒரு நாவலை எழுதியுள்ளார்கள்.  பாக்கிர் யெஸீத் இப்னு மலிக் அர் - தாயீஎன்பார் பாரசீக மொழியில் எழுதிய நாவலைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளது. மாப்பிள்ளை ஆலிமின்இந்நூல் ஹி. 1318 கி.பி. 1900 ஆம் ஆண்டளவில் முஹம்மத்சுலைமான் என்பவரால் இலங்கையில் பிரசுரிக்கப்பட்டது. அரபுத் தமிழில் எழுதப்பட்ட இந்நாவலைஎம்.கே.ஈ மௌலானா என்பார் 1979ம் ஆண்டு தமிழில்வெளியிட்டார்.

 

·         இமாம் அல்அரூஸ் அவர்களின் இரு கவிதைகள் அஹ்சனுள் மவாயிஸ்  வ அஸ்யானுள் மலாபிஸ் என்னும் நூல்  அரபி மற்றும் அர்வியில் 380 வரிகளை கொண்டதாகும். இவை ஹதீஸ்களை சாராம்சமாக கொண்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

·         அரபு மொழியில் காணப்படும்பல்வேறு இஸ்லாமியக் கலைகளைத் தழுவிய நூல்கள் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன. இமாம்பய்ஹகீ (ரஹ்) எழுதிய 'கஃபுல் ஈமான்' என்னும் நூல் ஜமாலுத்தீன்ஆலிம் அவர்களால் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அரபியில் உள்ள புகழ்பெற்ற ஹதீஸ்தொகுப்பான மிஷ்காதுல் மஸாபிஹ் என்னும் நூல் ஹாபிஸ் அப்துர்ரஹ்மான் (ஹி. 1331) அவர்களால் 'மின்ஹாதில் மஸாபிஹ்பீ தர்ஜமத்தி மிஷ்காதில் மஸாபிஹ் என்ற பெயரில் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் 'இன்ஸானுல் காமில்' உட்பட எண்ணற்ற மூலநூல்கள்அரபியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. மிக ஆழமான தத்துவார்த்தங்களையும் விளக்கங்களையும்பதப் பிரயோகங்களையும் கொண்ட இத்தகைய நூல்கள் அரபுத் தமிழில் மொழிபெயர்க்கக் கூடிய அளவிற்கு  இம்மொழி மரபு சொல்லாட்சி மிக்கதாகவும் வளமுடையதாகவும்காணப்பட்டதையே இது குறிக்கிறது

 

·         1870ம் ஆண்டு சென்னையிலிருந்து'அஜாயிபுள் அக்பார்' (அற்புதச் செய்திகள்) என்ற பெயரில் அரபுத தமிழில் வாராந்தப் பத்திரிகையொன்று பிரசுரமாகியது.

·         'கவ்புர் ரான் அன்கல்பில் ஜான்' என்னும் பெயரில் ஓர்அரபுத் தமிழ் பத்திரிகை 1889,1890 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரசுரமாகியது. இலங்கையில் அரபு எழுத்தில் பிரசுரிக்கப்பட்டஒரே பத்திரிகையாக இது கருதப்படுகிறது.

 

·         கொழும்பு ஆலிம் அவர்கள் இளஞ்சிறார்களுக்கு சன்மார்க்கத்தின்அடிப்படைகளை விளக்கும் பல நூல்களை அரபுத் தமிழில் எழுதினார். இவற்றுள் 'துஹ்பதுல் அத்பால்', 'மின்ஹாதுல் அத்பால்' ஆகிய இரண்டு நூல்களும்குறிப்பிடத்தக்கன.

 

 

·         அரபுத்தமிழ் வழக்கொழிந்தபின்னரும்  அரபுத்தமிழ் மார்க்க  நூலான சிம்த்துஸ் ஸிபியான்   என்னும் ஹனபி மத்ஹபின் நூல் இன்றும் கூட  அம்மொழியிலேயே பிரசுரமாகி வருவதும் அதனை மக்கள் படித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்

 

·         நூறு மசாலா, ஆயிரம் மசாலா மார்க்க சட்டங்களையே வெண்பாக்களாக இயற்றப்பட்ட நூல்களாகும்.

 

·         பெண்புத்திமாலை பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக எழுதப்பட்ட  அறிவுரைகள் அடங்கிய அருமையான நூலாகும்.

·         அர்வி மொழியின் அருமை

அர்வி மொழி உலகின் பாரம்பரியமிக்க அரபி மற்றும் தமிழ் ஆகிய இரு செம்மொழிகளை சேர்த்திருக்கிறது. இரு சமூகங்களை ஒன்று சேர்த்திருக்கிறது.

தமிழில் குர்ஆன் மொழிபெயர்க்கப்படுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே அர்வி மொழியில்  குர்ஆன் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. எழுத்துக்கள் அரபியில் இருந்தாலும் அதன் வார்த்தைகள் தமிழில் இருப்பதால் உண்மையில் அது தமிழுக்கு செய்யப் பட்ட சேவையே ஆகும்.

அர்வி மொழி  பெண்ணியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. பெண்புத்தி மாலை இதற்கு சிறந்த உதாரணமாகும். இம்மொழியை ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் படித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரபி மொழியில் உள்ள தொழுகையில் ஓத வேண்டிய குர்ஆன் வசனங்கள், திக்ருகள், துஆக்கள் தமிழில் அதன் உச்சரிப்புடன் எழுதப் படுகிறது.தமிழில் அரபி மொழியில் உள்ள எழுத்துக்களில்  சிலவற்றின் ஒலிகள் இல்லாததால் தமிழிலேயே அரபி வார்த்தைகளை எழுதி படிப்பதன் மூலம் உச்சரிப்பு மாறுபாட்டால் வார்த்தைகளின் பொருளே தவறாக புரிந்துக் கொள்ளக் கூடிய நிலை ஏற்படுகிறது .தற்காலத்தில் தமிழில்  வெளியிடப்பட்டுள்ள தொழுகை மற்றும்  துஆக்களின் நூல்கள் இதற்கு சரியான உதாரணங்களாகும். இந்தப் பிரச்சினையை அர்வி மொழி தீர்த்திருக்கிறது. அர்வி மொழியில் அரபி வார்த்தைகள் அரபி உச்சரிப்பிலேயே படிக்கப்படுவது மட்டுமல்லாமல் சில அரபி வார்த்தைகளையும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யாமல் அப்படியே பயன்படுத்தப் படுவதன் மூலம் வார்த்தைகளின் பொருள் மாறுபடுவது தவிர்க்கப் படுகிறது.

அரபுத்தமிழ் வீழ்ச்சியின் காரணங்கள்!

பிற்கால முஸ்லிம் அறிஞர்கள் தமிழ் மொழியில் புலமை பெற்றமையினாலும் தமிழ் கலந்த அரபை ஒதுக்கிய தூய அரபுமொழியை விரும்பியமையாலும் அரபுத் தமிழை புறக்கணித்தனர்.

 

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட மதரஸாக்களில் அரபுமொழி ஒரு பாடமாகப் போதிக்கப்பட்டமையாலும் அரபுத்தமிழ் முஸ்லிம் மாணவர் மத்தியில் அறிமுகம் செய்யப்படவிலை

 

 எகிப்து,  சவூதிஅரேபியா போன்ற நாடுகளுக்குச் சென்று பட்டம் பெற்று வந்த உலமாக்கள் அரபுத்தமிழில் கருத்துப் பிழைகள் இருப்பதாகவும் தெளிவான மொழிகளிலேயே இஸ்லாமிய போதனைகள் நடத்தப்படவேண்டும் என்றும் கூறித் தமிழ் மொழியில் புத்தகங்கள் எழுத ஆரம்பித்தமையாலும் அரபுத்தமிழ் செல்வாக்கிழந்தது.

இலங்கை  அரசுப் பாடசாலைகளிலும் இஸ்லாமிய  பாடநூல் தமிழில் அறிமுகமாகியதாலும் அரபுத்தமிழ் செல்வாக்கு இழந்து விட்டது.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆங்கிலேயரின் காலனியாதிக்கத்தால்  அரபுத்தமிழின்  இடத்திற்கு ஆங்கிலம் வந்தது.

 

புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட அச்சியந்திரங்களில் அரபுத்தமிழ்  எழுத்துக்களை  அச்சிடுவதில் நிறைய குறைபாடுகள் ஏற்பட்டதால் அரபுத்தமிழ் நூல்களை வெளியிடுவதில்  தேக்கம் ஏற்பட்டது.

 

தமிழ்நாட்டில் இஸ்லாமியப்  பாடத்திட்டத்தில்   தெற்காசியாவின்  பெரும்பான்மையான கலாச்சாரமும்  பேச்சு வழக்குமுடைய உருது மொழி வைக்கப்பட்டதாலும்  குறிப்பாக தமிழ்நாட்டின் முஸ்லீம் ஆட்சியாளர்களான நவாபுகள் உருதுவை  பின்புலமாக கொண்டிருந்ததாலும்   அரபுத்தமிழ் புறக்கணிக்கப்பட்டது .

அரபுத்தமிழில்  வெளிவந்த  நூல்கள் தமிழில்  மட்டும் படிப்பவர்களுக்கு தனியாக அம்மொழியில் அச்சிடப்பட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே இது  அதிக செலவையும்  அனாவசிய நேர விரயத்தை யும் உண்டாக்கியது.

 

முடிவாக ..

உலகின் பல நாடுகளில் துருக்கி, ஜாவி, சுவாஹிலி  புஷ்து உட்பட பல மொழி பேசும் மக்களும் அரபி எழுத்துக்களையே பயன்படுத்தி வந்தனர்.பிற்காலத்தில் அரசியல் காரணங்களால் அரபி எழுத்து வடிவம் சில மொழிகளில் இருந்தும் நீக்கப்பட்டது.

இந்தியாவில் மலையாளம், சிந்தி மற்றும் வங்காள மொழி  பேசிய   முஸ்லிம்கள்  தங்கள் மொழிகளுக்கு அரபி எழுத்து வரிவடிவத்தையே     கொண்டிருந்தார்கள்.ஆனால் தற்காலத்தில் அம்முறை வழக்கொழிந்து தங்கள் மொழிகளின் எழுத்துக்களின் வரி வடிவங்களையே எழுதுவதற்கு பயன்படுத்துகின்றனர்.  இதற்கு தமிழும் விதிவிலக்கல்ல.முஸ்லீம் சமூகம் அரபுத்தமிழிலிருந்து மரபுத்தமிழுக்கு மாறி அதிலிருந்தும் நவீனத் தமிழுக்கு நகர்ந்து ஏறத்தாழ ஓரு நூற்றாண்டை கடந்து விட்டது.அரபுத்தமிழ் அது அன்று எழுந்த காலத்தின் சூழ்நிலைக்கும் காலத்திற்கும் அன்று பொருத்தமானதே ஆகும். இன்று பன்முக சமூகத்தில் வாழும் முஸ்லீம் சமூகம் பிறரிடம் பழக  ஒரு மொழியையும்  பாரம்பரியத்தை தொடர ஒரு மொழியையும்  வைத்திருப்பது  மற்ற சமூகத்தை விட்டு தனித்து இருக்கும் நிலையை  ஏற்படுத்தும் .அதனை தனியாக கற்க  நேரமும்  தமிழில் வெளியிடும் நூலை அரபுத்தமிழிலும் அடுத்து வெளியிடுவதால் நிதி பாரமும் ஏற்படுவது முஸ்லீம் சமூக அறிவுலகில் அது  தேக்கத்தை ஏற்படுத்தும்.தற்காலத்தில் ஒரு மொழியின் வார்த்தை உச்சரிப்பை வேறு மொழியில்  உச்சரிக்க உச்சரிப்பு வரி வடிவம் வந்து விட்டது .

 

திருக்குறள் போன்று புனிதமாக கருதப்படும் நூல்கள் அல்லது மிகவும் உயர்ந்த இலக்கிய நூலகளை அரபுலகில் அறிமுகப்படுத்த அரபுத்தமிழை பயன்படுத்தலாம். ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தின் முன்னாள் அரபுத்துறை தலைவர் முனைவர் பஷீர் அஹ்மது ஜமாலி அரபியில் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறளில் அரபு எழுத்து வரி வடிவில் தமிழ் மொழியில் உள்ள திருக்குறளை இடம் பெற செய்துள்ளது அரபுத் தமிழின் மீட்சியாகவே பார்க்கலாம்.எதிர்க்காலத்தின் அரபு இலக்கிய உலகம் தமிழ் இலக்கியத்தை வாசிக்க   அரபுத்தமிழை புதிய பரிணாமத்தோடு உருவாக்கினால் அது அரபுலகில் ஏற்புடையதாக இருக்கும் .அறிவுலகில் வரவேற்புடையதாக இருக்கும்..

------------------------------------------------------------------------------------------

மேற்கோள் காட்டப்பட்ட  நூல்கள்

1.       Arwi (Arabic-Tamil) — An  Introduction  - Torster  Tschacher

2.      திருக்குறள்  அரபி மொழிபெயர்ப்பு - முனைவர் பஷீர் அஹ்மது ஜமாலி

3.      தமிழகத்து ஆலிம்கள் - மௌலவி கலீலுர் ரஹ்மான் மன்பஈ

4.      திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்  ஓர் ஆய்வு - முனைவர் நிகமத்துல்லா

5.      திருக்குர்ஆன் தமிழ்மொழிபெயர்ப்புகள் - சீனிவாசன்

6.      தமிழில்  இஸ்லாமிய இதழ்கள் அ .மா. சாமி

7.       The Rise and Decline of Arabu Tamil Language for Tamil Muslims .Dr.K.M.A. Ahmed Zubair.Professor ,The New College ,Chennai

 

மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரைகள்

1.      அரபுத் தமிழின் பண்பாட்டுப் பாரம்பரியம் - கலாநிதி சுக்ரி (அதிரை போஸ்ட் இணையம் )

2.      அரபுத் தமிழ் இலக்கியங்கள்- ரஹ்மத் ராஜகுமாரன்  முகநூல் பதிவு  -16.6.22

3.      அரபுத்தமிழின் காலமும் கருத்தும்   பேராசிரியர் மு. அப்துல்காதர்

4.      ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி, உத்தமபாளையம்  (முத்துக்கமலம் இணையம் )

5.      அழிவின் விளிம்பில் ‘அரபுத் தமிழ் - தி ஹிந்து  -8.10.2015

 

 

இக்ரா என்று தொடங்கும் குர்ஆனின்    தொடக்கமும்  கற்க  என முழங்கும் திருக்குறளின் அடியும் கல்வியின் முக்கியத்துவத்தை மனித குலத்திற்கு உணர்த்துவதாக இருக்கிறது. மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும்  இந்த இரு நூல்களை தவிர வேறு புனித கருதப் படும் எந்த நூலும்  படிப்பைப் பற்றி பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !