இந்தி தெரியாது போடா

 

                                                பேராசிரியர் . அ   முஹம்மது அபூதாஹிர் 

 

தரணியில்

உயர்ந்து நின்ற தாய்த் தமிழே

நீ பரணியில்

படுக்க வைக்கப்பட்டிருக்கிறாய் !

 

உலகுக்கே

மூத்தவள் நீ

ஆனால் உன் வீட்டில்

உன்னை யாரும் மதிப்பதில்லை !

 

உன்னை தெரியாது என்பதுதான்

உன் மக்களுக்கே கவுரவமாம் !

ஆங்கிலத்தில் பேசுவதே

அவர்களுக்கு வரமாம்!

 

 முத்தமிழ் என்பதே

இங்கே

முத்த தமிழ் ஆகி விட்டது!

 

பாஞ்சாலி சபதத்தில்

உரித்து முடிக்க முடியாத  உன் சேலையை

திரைசீலை ஆபாசத்தில்

கிழித்துக் கொண்டிருக்கிறார்கள்!

 

 

கடல் கோளால்  கூட

அழிக்க முடியாதவளே

உன் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில்

உன்னை கொஞ்சம் கொஞ்சமாய்

அழித்துக் கொண்டிருக்கிறார்கள் !

 

இப்போதெல்லாம் உன்

குரல் கம்மியாகி விட்டது!

உன் பிள்ளைகள் முதல் வார்த்தை

மம்மியாகி விட்டது !

 

தமிழே உன்னையே

தமிழன் " டமில்" என்று சொல்கிறான்!

தமிழே உன்னை

தமிழன் டுமீல் என்று கொல்கிறான்!

 

தாய் தமிழே

இந்தி தெரியாது போடா என

அவன் சத்தமாக சொல்கிறான்!

சத்தியமாக அவனுக்கு

உன்னையும் தெரியாது!

 

அன்னைத் தமிழே

அரசுப் பள்ளிகளில்தான்  

நீ கொஞ்சம்  மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாய் !

அரசியல்வாதிகளின் பள்ளிகளில்

அன்னியவளான  ஆங்கிலத்திடம்தான்

கொஞ்சிப்பேசிக்கொள்கிறார்கள்!

 

உன் மீதெல்லாம்

யாருக்கும் எந்த பாசமும் கிடையாது!

கட்டாயம் பாடமாகத்தான்

கஷ்டப்பட்டு படித்துக் கொண்டிருக்கிறார்கள்!

 

உன் மீது அவனுக்கு

ஒரு மதிப்பும்  கிடையாது

ஆனால் அவன் உன்னை 

நூறு  மதிப்பெண்ணுக்காக படிக்கிறான்!

*********************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !