அரபுத் தமிழில் அருள்மறை குர்ஆனின் விரிவுரைகள் ஓர் ஆய்வு

 

அரபுத் தமிழில் அருள்மறை குர்ஆனின் விரிவுரைகள்  ஓர் ஆய்வு


Dr.A.Mohamed Abdul Khader Hasani,

Assistant Professor, Department of Arabic,

Jamal Mohamed Collge(Autonomous)

 

முனைவர்.அ.முஹம்மது அப்துல் காதர் ஹசனி

உதவிப்பேராசிரியர், அரபு & ஆய்வுத்துறை,

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி)

 

Abstract

In this topic, a view of the rules of the Holy Quran in Arab Tamil, I have shared only a few things about Arab Tamil and mentioned how many  Explanation  of The Holy Quran  in  Arabic Tamil have been published, who did it first and where it was published. And I have shared some things about itself and I have taken some things about the influence of Arabic Tamil Quran explanations in The Islamic society at that period. I mentioned how they imparted Islamic culture with its basic features through Arabic Tamil, and the importance of religious education for women. I quoted  how the Arabic  Tamil admired  Tamil Muslim at that  time.

Key words :

 தப்ஸீர் - interpretation, ஃபதஹுர் ரஹ்மான் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன் - Fath al-Rahman in the interpretation of the Qur'an, புதூஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீரி கலாமிர் ரப்பானிய்யா - The Rahmani conquests in the interpretation of the words of God, தப்ஸீருல் குர்ஆன் பி அஹ்ஸனில் புர்ஹான் - Interpretation of the Qur'an in the best proof, தப்ஸீர் பத்ஹுர் ரஹீம்  - Interpretation of the Merciful Conquest, தப்ஸீரே பத்ஹுல் கரீம்  - Interpretation of the Noble Conquest, அட்சரம் - எழுத்துரு – font

ஆய்வுச்சுருக்கம்

அரபுத்தமிழில் அருள்மறை குர்ஆனின் விரிவுரைகள் ஒரு பார்வை என்கிற இந்த தலைப்பில் அரபுத்தமிழ் பற்றி ஒரு சில விஷயங்களை மட்டும் பகிர்ந்து விட்டு அரபு தமிழ் விரிவுரைகள் எத்தனை வெளிவந்திருக்கிறது என்பதை பற்றியும், யார் அதை முதலில் செய்தார்கள் என்பதை பற்றியும், எங்கெல்லாம் வெளிவந்தது என்பதை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறேன் அதேபோன்று அரபுத்தமிழ் மொழியின் மொழியாக்க விதம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை பற்றியும் எவ்வாறு வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது என்பதை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன் மேலும் இஸ்லாமிய சமூகத்தில் அரபுத்தமிழ் திருக்குர்ஆன் விரிவுரைகளில் தாக்கம் என்ன என்பது பற்றியும் சில விஷயங்களை எடுத்துத்துரைத்திருக்கிறேன். அரபுத்தமிழ் வாயிலாக இஸ்லாமிய கலாச்சாரத்தை அதன் அடிப்படை அம்சத்தோடு கற்றுத்கொடுத்தார்கள் என்பது பற்றியும்  மேலும் பெண்களுக்கான மார்க்ககல்வி அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் குறித்திருக்கிறேன். அரபி  எழுத்துருவான அரபுதமிழில் படிக்கும் போதுதான்  அரபிமீதான பற்றும் தமிழ் மீதான ஈர்ப்பும் ஒருங்கே வெளிபடுகிறது என்பதையும் கூறியிருக்கிறேன்.

முன்னுரை

இறைவனால் வழங்கப்பட்ட வேதத்தில் திருமறை குர்ஆன் மனித வரலாற்றில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது இருபத்தி மூன்று ஆண்டுகள் பகுதி பகுதியாக தேவைக்கு ஏற்ப முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட மனித வாழ்வியலுக்கான ஒரு மாபெரும் வழிகாட்டி தான் இந்த குர்ஆன்.

நபிக்கு அருளப்பெற்ற இந்த திருக்குர்ஆன் இறங்கி 1400 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்றின் வழிநெடுகிலும் ஏற்படுத்திய  நேர்மறை விளைவுகளும் கலாச்சாரத் தாக்கங்களும் எண்ணிலடங்காதவை.

அரபு நாட்டிற்கும்  தமிழ் நாட்டிற்குமான தொடர்பு என்பது தொன்று தொட்டு விளங்கும் ஒரு வரலாற்று சிறப்புவாய்ந்த தொடர்பாகும். வணிகத்தால் கால் ஊன்றி கலாச்சார பண்பாட்டால் தடயம் பதித்து மொழியால் நீட்சி பெற்றது அதன் பெரும் அடையாளம் தான் அரபுத்தமிழ். இதைப்பற்றி பேசவேண்டும், கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற அவா அவ்வபோது வந்து போவதுண்டு. ஆனால் இந்த கருத்தரங்கம் மூலம் அது கைகூடி இருக்கிறது. 

தமிழ் நாட்டிற்கும்  அரபு தேசங்களுக்குமான தொடர்பை பாரதியார் குறிப்பிடும் பொழுது,

"சீனம் மிசிரம் யவனரகம்-

இன்னும் தேசம்பலவும் புகழ்வீசக்-

கலை ஞானம் படைத்தொழில்

வாணிபமும் நன்று வளர்த்த தமிழ்நாடு

எனப் பாடி மகிழ்கிறார்.[1]

'மிஸ்ரு' (எகிப்து) என்பது 'மிசிரம்' என மறுவி வந்துள்ளது.

தமிழகத்தில் தமிழை தாய்மொழியாகக்கொண்ட  முஸ்லிம்களால் உருப்பெற்று  இலங்கை முஸ்லிம்கள்  வரை விரிவடைந்த  பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மொழி மரபே அரபுத்தமிழ் எனப்படுகின்றது. அர்வி மொழி என்றும் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் மார்க்க விழுமியங்களின் தேவை கருதிதான் இம்மொழி உருவாக்கப்பட்டது. சமய மரபு மொழியாக அரபி மொழி இருப்பதால்தான் சமய, பண்பாட்டுத் துறைசார்ந்த அநேக  சொற்கள் அரபுமொழியில் பயன்படுத்தப்படுகின்றன.

முனைவர் எஸ் எம் எஸ் மஸாஹிர்[2] கூறும்பொழுது இரண்டு  வரைவிலக்கணங்களை அரபு தமிழுக்கு ஒரு கூறுகிறார்.

Ø  தமிழை அரபு அட்சரங்களில் எழுதுதல் அரபுத்தமிழாகும். பொதுவாக அரபுத் தமிழ் எனும் போது இவ்வரைவிலக்கணமே வழங்கப்படுகின்றது. இதுவே அடிப்படையான கருத்தாகும். தமிழ் மொழியை அரபு வரிவடிவத்தில் எழுதும் போது அரபு தமிழாகிறது. பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா, அ.மா.சாமி, மயிலை சீனி வேங்கடசாமி போன்ற அறிஞர்கள் இவ்வரைவிலக்கணத்தையே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

Ø  அரபு வரிவடிவத்தை போலவே,  தமிழ் வரிவடிவத்தில் அரபுச் சொற்களைக் கலந்து எழுதுதலும் அரபுத்தமிழாகும். முன்னைய வரைவிலக்கணத்தையும் உட்படுத்திய இந்த வரைவிலக்கணத்தின்படி சாதாரணமாக தமிழ் மொழியில் எழுதும் போது அரபுச்சொற்களைக் கலந்து எழுதுவதும் கூட  அரபுத்தமிழாகிறது. இதனைக் கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி,  ஏ.எம்.ஏ அஸீஸ். எம்ஐஎம் அமீன் போன்ற ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளார்கள். ஆனால் அது பொருண்மையில் மாறுபடுகிறது.

அரபு தமிழ் விரிவுரைகள்

கி.பி. 1874 - ஃபதஹுர் ரஹ்மான் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன்

இலங்கை பேருவளை என்ற ஊரைச் சேர்ந்த ஷேகு முஸ்தபா வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி ஹிஜ்ரி ஒன்பதாம் நூற்றாண்டை சார்ந்த முஜீருதீன் அல் ஹன்பலி எழுதிய ஃபதஹுர் ரஹ்மான் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆன் என்ற தஃப்ஸீரைத்தான் அதே பெயரோடு ஹிஜ்ரி 1291 (கி.பி 1874)இல் அரபி தமிழ் தஃப்ஸீராக வெளியிட்டார்கள்.[3]

இது பற்றி ஆய்வாளர் ப.சீனிவாசன்  இவ்வாறு கூறுகிறார்.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் மிகச் சிறப்பாக கைகொள்ளப்பட்ட அரபுத் தமிழ், அதன் பழங்கால மொழிநடை மற்றும் பேச்சுவழக்குத் தமிழ் காரணமாக 20-ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களால் வன்மையான கண்டனத்திற்குள்ளானது. இதனால் தமிழகத்தில் வழக்கொழிந்தது. எனினும் இலங்கையில் நடைமுறையில் இருந்து வருகிறது என்பதற்கு இவ்விரிவுரையே சான்றாகும்.

திருவாளர் ஷைகு முஸ்தபா ஆலிம் என்ற இலங்கை முஸ்லிமால் எழுதப்பட்ட இந்த அரபுத் தமிழ் விரிவுரையில் அல்குர்ஆனின் முதல் ஐந்து அதிகாரங்கள் மட்டுமே அச்சில் வந்ததாகத் தெரிகிறது.  இந்த பத்ஹுர் ரஹ்மான் ஃபீ தப்ஸீருல் குர்ஆன்  கி.பி. 1981-க்கு முன் (ஹிஜ்ரி - 1402க்கு முன்) எழுதப்பட்டதாக குறிப்பிடுகிறார்.[4]

கி.பி.1878 -  ஃபதஹுர் ரஹ்மான் (புதூஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீரி கலாமிர் ரப்பானிய்யா)

பின்னர் காயல் பட்டிணத்ததைச் சேர்ந்த ஷேகு ஹபீப் முஹம்மது (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 1296 கி.பி.1878 " புதூஹாதுர் ரஹ்மானிய்யா பீ தப்ஸீரி கலாமிர் ரப்பானிய்யா எனும் பெயரில் அரபு தமிழில் தப்ஸீர் எழுதினார்கள். இது புதூஹாதுர் ரஹ்மான்  என்ற பெயரிலும்  அழைக்கபட்டிருக்கிறது.

இம்மொழிபெயர்ப்பு 1878 ல்  பம்பாய் ஹுசைனி அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இதன் பிரதி கொழும்பு ஜாஹிரா கல்லூர் நூலகத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, தமிழ் நாட்டில் வெளியான   முதல்  அரபுத்தமிழ் விரிவுரை இதுதான். திருமறை வசனங்கள் அரபியிலும் பெரிய எழுத்திலுமாக எழுதப்பட்டு தமிழுரையும் விளக்கவுரையும் சிறு எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த தஃப்ஸீர் என்னிடம் இருக்கிறது என்று தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம்கள்என்ற நூலின் ஆசிரியர் மௌலவி ஆலிம் அப்ஸலுல் உலமா பி.ம்.கலீலுர்ரஹ்மான் மன்பஈ அவர்கள் கூறுகின்றார்கள்.[5]

கி.பி.1885 - தப்ஸீருல் குர்ஆன் பி அஹ்ஸனில் புர்ஹான்

அது போல் வாணியம்பாடி ஆம்பூர் அருகே உள்ள குடியாத்தம் எனும் ஊரைச் சேர்ந்த மவ்லானா புர்ஹானுத்தீன் (ரஹ்) அவர்கள் கி.பி.1884க்கு பிறகு "தப்ஸீருல் குர்ஆன் பி அஹ்ஸனில் புர்ஹான்" எனும் பெயரில் அரபு தமிழில் தப்ஸீர் வெளியிட்டுள்ளார்கள் .

கி.பி. 1887  -  தப்ஸீர் பத்ஹுர் ரஹீம்

அல்குர்ஆனுக்கு அரபுத் தமிழில் முதல் விரிவுரை வழங்கிய அதே காயல்பதி ஹபீப் முகம்மது ஆலிம்தான் இந்த விரிவுரையையும் எழுதியுள்ளார். இது புதிய விரிவுரையா, முந்தைய விரிவுரையின் மறுபதிப்பா என்பதை அறிய இயலவில்லை திருவாளர் ஆர்.பி.எம் கனி முதலியோர் இதனை மற்றொரு விரிவுரையாகவே குறிப்பிடுகின்றனர்.

கி.பி. 1899 - தப்ஸீரே பத்ஹுல் கரீம்

இந்த விரிவுரையும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த திருவாளர் அப்துல் காதர் அவர்களின் திருமகனார். திருவாளர் நூஹ்லெப்பை ஆலிம் அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். இதனுடைய மறுபதிப்புக்களும் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. கி.பி. 1911-இல் ஒரு பதிப்பு வெளியிடப்பட்டிருந்ததாக மதுரை வி.எம்.ஏ. பாட்சாஜான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டை அரபு தமிழின் பொற்காலம் என்று எழுத்தாளர் அ.ம.சாமி குறிப்பிடுகிறார்[6]. இந்த நூற்றாண்டில் தான் பெரும்பாலான திருமறை விரிவுரைகள் வெளிவந்துள்ளது.

கி.பி.1923 (ஹிஜ்ரி 1342) - தூர்ரருத் தபாஸீர்

புதுநகரம் கதீப், ஸயீத் முகம்மது ஆலிம் ஸாஹிப் அவர்களால் குர்ஆனின் முதல் ஐந்து பகுதிகள் (ஜுஸ்வு) மட்டும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. மற்ற பகுதிகள் வெளியிடப்பட்டதா என்பதை அறிய இயலவில்லை.

மேலும் தமிழகத்தில்  இன்னும் பல அறிஞர் பெருமக்களால்  ஃபுதூஹுல் கரீம், தப்ஸீர் ஃபுதூஹுர் ரஹீம், என்று பல்வேறு  பெயர்களிலும் அரபு தமிழில் தஃப்ஸீர்கள் வெளிவந்தன.[7]

அரபுத்தமிழ் மொழியின் மொழியாக்க விதம்

அரபுத் தமிழ் மொழியின் மொழியாக்க விதம் இரண்டு  விதமாக கையாளப்பட்டது முதலாவது சில அரபு மொழி வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே கையாளப்பட்டது.

இரண்டாவதாக சமகால தமிழ் நடையிலே அரபுத்தமிழின் மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது.

இது பற்றி முனைவர் நிஃமத்துல்லாஹ்[8] அழகுற விவரித்துள்ளார்.

அரபுத்தமிழ் மொழிபெயர்ப்பில் அரபிமொழி வாக்கிய அமைப்பு பெரும்பாலும் கடைப்பிடிக்கப்பட்டது. அரபிச் சொற்கள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன; சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கப்பட்டது என்று கூறுகிறார்.

உதாரணமாக,

ما أنت بنعمة ربك بمجنون[9] 68:2

நீராகுறவர் உம்முடைய நாயனுடைய நிஃமத்தைக் கொண்டு, நீர் பைத்தியக்காரனல்லை (பத்ஹூர் ரஹ்மான் 403 - 404)

அதே வேறு ஒரு அரபுத்தமிழ் மொழிபெயர்ப்பில்

(நபியே!) நீர் உமதிறைவனருளால் பைத்தியக்காரரல்லர்

இதற்கு அடுத்து வெளிவந்த இரண்டு அரபுத்தமிழ் மொழிபெயர்ப்புகளுமே தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களால் இயற்றப்பட்டவை.

புதுஹாதுர் ரஹ்மானிய்யத்தி பீ தர்ஜமதி தப்ஸீரி கலாமிர் ரப்பானிய்யா என்கிற தலைப்பில் ஹபீப் முஹம்மது ஆலிம் செய்த இந்த அரபுத்தமிழ்

இம் மொழிபெயர்ப்பின் தலைப்பிலும் "திருக்குர்ஆன் விரிவுரையின் மொழிபெயர்ப்பு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நடையிலும் தொனியிலும் ஷெய்க் முஸ்தபா (1874)வின் மொழிபெயர்ப்பை ஒத்து ஹபீப் முகம்மது ஆலிம் 1878) அவர்களின் மொழிபெயர்ப்பு அமைந்திருப்பதைக் காணலாம்,

 எ.கா. 2:20 [10]ان الله على كل شيء قدير என்ற வசனத்திற்கு

ஷெய்க் முஸ்தபாவின் மொழிபெயர்ப்பில்.

அவனாகிறவன் வஸ்தடங்களின் பேரிலும் வலிமை உள்ளவனாயிருக்கும். என்று கூறுகிறார்

இதே வசனத்திற்கு  ஹபீப் முஹம்மது அவர்கள் மொழிபெயர்க்கும் போது,

அவனாகிறது வஸ்தடங்களின் பேரிலும் குத்ரத்து (ஆற்றல்) உடையவனாயிருக்கும்.

இதில் ஷெய்க் முஸ்தபா அவர்கள் கதீர் என்ற பதத்திற்கு வலிமையுள்ளவன் என்று மொழிபெயர்த்துள்ளார்.  ஆனால் ஹபீப் முஹம்மது அவர்கள் மொழிபெயர்க்கும் போது குத்ரத்து உடையவன் என்று மொழிபெயர்த்து அதை விளங்குவதற்கு ஆற்றல் என்ற வார்த்தையை  அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளார்.

அதே போன்று, ولكن كثيرا منهم فاسقون[11]

ஷெய்க் முஸ்தபா அவர்களின்  மொழிபெயர்ப்பில்

அவர்களில் நின்றும் மிகுந்த பேர்கள் பாசிக் [பாவிகள்]கானவர்களாயிருக்கும். (5:81)

ஹபீப் முஹம்மது அவர்கள் மொழிபெயர்க்கும் போது, அவர்களில் நின்றும் மிகுந்தவர்களும் பாசிக் [பாவிகள்) கானவர்களாயிருக்கும்.

ஹபீப் முஹம்மது ஆலிம் குர்ஆனின் அரபி வரிக்குக் கீழே நேரடியான பக்கக் குறிப்புக்களில் மறைமுகமான பொருளையும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காயல்பட்டினத்தைச் சேர்ந்த நூஹ் லெப்பை ஆலிம் என்பவர் பத்ஹுல் கரீம் என்ற தலைப்பில் செய்த அரபுத் தமிழ் குர்ஆன் மொழிபெயர்ப்பும் ஷெய்க் முஸ்தபாவுடைய மொழிபெயர்ப்பும் ஏறத்தாழ ஒத்திருந்தது. மேலும்  ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்) அவர்களின்  தப்ஸீர் போன்றுதான் அமைந்துள்ளது.

அரபுத்தமிழுடைய மொழி நடையைப் பொறுத்தவரை ஒரு சில வார்த்தைகள் இயல்பான தமிழ்குர்ஆன் மொழிபெயர்ப்புகளில் இடம்பெறுவதில்லை உதாரணமாக அதாகப்பட்டது

அதாகிறது அவனாகிறவன், அதுவாயிருக்கும் அவர்களாயிருக்கும் இதுபோன்ற பத அமைப்பில்தான் அதன் மொழிநடை அமைந்திருக்கும்.

இந்த குர்ஆனின் அரபுத்தமிழ் மொழிபெயர்ப்புகள் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் தேவையை நிறைவேற்றிள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது என்று முன்னாள் முஸ்லிம் லீக் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மர்ஹூம் ஆகா.அ. அப்துஸ் ஸமத் கூறியுள்ளார்.

சமூகத்தில் திருக்குர்ஆன் விரிவுரைகளின் தாக்கம்

சமூகத்தில் திருக்குர்ஆன் விரிவுரைகளின் தாக்கம் என்று எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அது சில பல வார்த்தைகளை கொண்டு மாத்திரம் விவரித்து விட இயலாது பொதுவாகவே குர்ஆனுக்கும் குர்ஆனுடைய விரிவுரைக்கும் சமூகத்தில் மாபெரும் தாக்கம் உண்டு. அதை ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்டு இருக்கிறேன் அரபுத் தமிழ் விரிவுரைகள் மூலமாக என்னென்ன தாக்கங்கள் ஏற்பட்டது என்கிற அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக இதிலே சில பேசப்படும் பொருண்மைகள் உண்டு

இஸ்லாமிய கலாச்சாரத்தை அதன் அடிப்படை அம்சத்தோடு கொடுப்பது

குர்ஆன் என்பது இஸ்லாத்தில் அடிப்படை  கோட்பாடு என்றால் அதன் கலாச்சார பகுதியாக குர்ஆன் விரிவுரைகள் விளங்குகிறது. இதில் அரபு தமிழ் விரிவுரைகள் மட்டும் விதிவிலக்கல்ல.

பெண்களுக்கான மார்க்கக்கல்வி

அன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கான கல்வி என்பது பெரும்பாலும் எட்டா கனியாகவே இருந்திருக்கிறது தாய்மொழி தமிழ் கூட எழுத படிக்க தெரியாத பெண்கள் இருந்திருக்கிறார்கள். ஏனென்றால் ஆண்களை போன்று பெண்களும்  பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று கல்வி கற்றுக் கொள்ளக்கூடிய பொதுப்படையான வசதிகளும் குறைவாகவே  இருந்தது. இதல்லாமல் பெண்களுக்கான பாதுகாப்பும் ஒரு பெரும் கேள்வி குறியாக   இருந்தது. ஆங்கிலேயனுக்கு எதிரான சுதந்திர போரில்  புரட்சிகளும் போராட்டங்களும் சமூகத்தின் அன்றாட பொழுதுகளாய் மாறிவிட்டதனால் பெண் கல்வியின் மீது குறிப்பாக பெண்களுடைய மார்க்க விழுமியங்கள் மீது உண்டான அக்கறை மிகுந்த தேவையாக  இருந்தது. அந்த தேவையை யாருக்கும் இடர்யில்லாத வகையிலும்  அதே சமயம் போதுமான அளவிலும் அந்த தேவையை அரபுத்தமிழ் நிறைவேற்றியிருக்கிறது.

ஆகவே கல்லூரிக்கும் பள்ளிக்கூடத்திற்கும் செல்ல முடியாத பெண்களுக்கு கூட அரபுத் தமிழ் வாயிலாக மார்க்க சட்டங்கள் நடைமுறைகள் பயிற்றுவிக்கப்பட்டது.

அரபிமீதான பற்றும் தமிழ்மீதான ஈர்ப்பும்

அரபி மூலம் திருக்குர்ஆனின் விரிவுரைகள்,  நபிகளாரின் ஹதீஸ்களை படிக்கும் ஆலிம்கள் அதே அரபி  எழுத்துருவான அரபுதமிழில் படிக்கும் போதுதான்  அரபி மீதான பற்றும் தமிழ் மீதான ஈர்ப்பும் ஒருங்கே வெளிபடுகிறது.

முக்கியமாக கூறுவதாக இருந்தால் குர்ஆன் விரிவுரையின் மூலமாக சமூகத்தின் கடைக்கோடிவரை அன்று மார்க்கத்தை குர்ஆனுடைய விளக்கத்தை எடுத்து செல்ல முடிந்திருக்கிறது என்றால்  அது அரபுத்தமிழில் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

அரபுத்தமிழின் தோற்றமும் தொழிற்பாடும் பற்றி மொழியியல் நோக்கில் ஆராய்ந்த பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக் கருத்தரங்கிற் சமர்ப்பித்த கட்டுரையொன்றில் அரபுத்தமிழின் `தோற்றத்துக்கு எடுத்துச் சொல்லும் காரணங்களில் மூன்று முக்கியமானவை என்று கூறி அவற்றை எடுத்துக் கூறியுள்ளார். அவை பின்வருமாறு[12]:

(i)                  "தமிழ் எழுத்தறிவில்லாத பெரும்பாலான பாமர முஸ்லிம்களுக்குச் சமய அறிவை ஊட்டுவதற்கு அது வாய்ப்பாக இருந்தது மதக்கடமை காரணமாக அரபு எழுத்துக்களை வாசிக்கப் பலரும் அறிந்திருந்தனர். அவர்களுக்கு அறபு மொழி தெரியாது. ஆனால் அறபு எழுத்துத் தெரியும். தமிழ் தெரியும் ஆனால், தமிழ் எழுத்தும் தெரியாது ஆகவே தெரிந்த மொழியை, தெரிந்த எழுத்துக்களைக் கொண்டு வாசிக்கப் பயிற்றுதல் எளிதானது."

(ii) "குர்ஆன் விளக்கவுரைகள் (தப்ஸீர்கள்) அரபு எழுத்தில் மாத்திரமே எழுதப்பட வேண்டும் என்ற கருத்து சமய அறிஞர்கள் மத்தியில் நெடுங்காலம் நிலவி வந்தது.

(iii) "அறபுச் சொற்களை ஒலிச்சிதைவும் பொருட் சிதைவுமின்றி எழுதுவதற்கு அறபுத்தமிழ் வாய்ப்பாக அமைந்தது.

பின்னாட்களில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சியின் காரணமாக அரபுத் தமிழ் கண்டுகொள்ளப்படாமல் இருக்கலாம்.

முடிவுரை

அரபுத் தமிழின் இஸ்லாமிய இலக்கிய படைப்புகளை மீண்டும் அதே வடிவில் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக அரபுத் தமிழ் குர்ஆன் விதிமுறைகள் மூல அரபுத் தமிழோடு தனித்தமிழில் விரிவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.

அரபுத் தமிழை படிக்கத் தெரியாதவர் கூட அரபுத் தமிழோடு இருக்கக்கூடிய அந்த விரிவுரைகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு காலத்தில் தனித்தன்மையால் கோலோச்சி நின்ற அரபுத்தமிழை அருங்காட்சியகங்கலோடு நிறுத்திக் கொள்ளாமல், நூலகங்களோடு முடித்துக் கொள்ளாமல் இனிவரும் காலகட்டத்தில் அதை பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவது தான் இந்த அரபுத்தமிழ் கருத்தரங்கத்தின் நோக்கமாகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

உசாத்துணைகள்

1.      புனித அல்குர்ஆன்,

The Holy Quran

 

2.      மணவை முஸ்தபா, 1995, தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், மீரா பப்ளிகேஷன்ஸ், , மதராஸ், தமிழ்நாடு. 

Maavai Mustafā, 1995, tamiil islāmiya ilakkiya vaivaka, mīrā papikēas, , Madras, taminādu.

 

3.      மசாஹிர், எஸ்.எம்.எம்., 2016, அரபு தமிழ் மொழியில் தமிழ் இலக்கணத்தின் பயன்பாடு, (தமிழ்), பிரவாகம் ஆராய்ச்சி இதழ், மொழிகள் துறை, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

Mazāhir, S.M.M., 2016, Arabu tamiḻ moḻiyil tamiḻ ilakkaṇattiṉ payaṉpāṭu, (tamiḻ), Piravākam ārāycci itaḻ, moḻikaḷ tuṟai, ilaṅkai teṉkiḻakku palkalaikkaḻakam.

 

4.      பி.ம். கலீலுர்ரஹ்மான் மன்பஈ,  2013, தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம்கள், ஹமீதியா பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு.

P.M. Khaleelur Rahman Manbyee, 2013, Tamiḻakattiṉ talaiciṟanta ālimkaḷ, Hameediya Publishers, Tamiḻnādu.

5.       ப. சீனிவாசன் , 2008, இஸ்லாமிய தமிழ் இலக்கிய  முதல் மாநில மாநாடு- ஆய்வு

அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் – விரிவுரைகளும், ப. சீனிவாசன், இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், சென்னை,

P. Sreenivasan, 2008, islāmiya tamiḻ ilakkiya mutal mānila mānāṭu- āyvu alkur'āṉ tamiḻ moḻipeyarppukaḷum – virivuraikaḷum, pa. Cīṉivācaṉ, islāmiya tamiḻ ilakkiya kaḻakam, Chennai,

 

6.      முனைவர்.அ.நிகமத்துல்லாஹ் ,2021,  திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள், , சென்னை

Muṉaivar.A.Nikamattullāh,2021, tirukkur'āṉ tamiḻ moḻipeyarppukaḷ, , Chennai.

 

 

 

 



[1]தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், மணவை முஸ்தபா, , 1995 , பக்கம் - 194, மீரா பப்ளிகேஷன்ஸ், , மதராஸ், தமிழ்நாடு.   

[2] மசாஹிர், எஸ்.எம்.எம்., 2016, அரபு தமிழ் மொழியில் தமிழ் இலக்கணத்தின் பயன்பாடு, (தமிழ்), பிரவாஹம் ஆராய்ச்சி இதழ், மொழிகள் துறை, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், தொகுதி. 1, பக். 43-55

[3]தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம்கள், மௌலவி ஆலிம் அப்ஸலுல் உலமா பி.ம்.கலீலுர்ரஹ்மான் மன்பஈ. M.A, M.Phil. பக்கம் - 8 & 9, ஹமீதியா பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு.

[4] . ப.சீனிவாசன் , 2008, இஸ்லாமிய தமிழ் இலக்கிய  முதல் மாநில மாநாடு- ஆய்வு

அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் - விரிவுரைகளும்,  பக்கம் : 390-401இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், சென்னை

[5] தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம்கள், மௌலவி ஆலிம் அப்ஸலுல் உலமா பி.ம்.கலீலுர்ரஹ்மான் மன்பஈ. M.A, M.Phil. பக்கம் - 8 & 9, ஹமீதியா பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு.

[6] அ.ம.சாமி, 2008, இஸ்லாமிய தமிழ் இலக்கிய  முதல் மாநில மாநாடு- ஆய்வுக்கோவை,

அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகளும் - விரிவுரைகளும்,  பக்கம் : 305, இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், சென்னை

[7] தமிழகத்தின் தலைசிறந்த ஆலிம்கள், மௌலவி ஆலிம் அப்ஸலுல் உலமா பி.ம்.கலீலுர்ரஹ்மான் மன்பஈ. M.A, M.Phil. பக்கம் - 8 & 9, ஹமீதியா பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு.

[8] முனைவர்.அ.நிகமத்துல்லாஹ் ,2021,  திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள், பக்கம் 22,23 , சென்னை.  

[9] புனித அல்குர்ஆன், அல் கலம் அத்தியாயம் – 68 வசனம் - 2

[10] புனித அல்குர்ஆன், அல் பகரா அத்தியாயம் – 2 வசனம் - 20

[11] புனித அல்குர்ஆன், அல் மாயிதா அத்தியாயம் – 5 வசனம் - 81

[12] பேராசிரியர் எம்.எம். உவைஸ் நினைவு மலர்.( தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கையில் வெளியிடபட்டுள்ளது. வருடம் குறிப்பிடப்படவில்லை.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !