நீதியை நாம் நிலை நாட்டிட வேண்டும்,

                                                      பேராசிரியர் அ. முஹம்மது அபூதாஹிர்

 

மன்னனிடம் நீதி கேட்டு

மதுரையை  எரித்த கண்ணகி,

நீதிப்போராட்டத்தில் நின்ற வீரம்

நினைவிருக்கும்!

பசு மாட்டிற்க்காக தன்  மகனையே

தேரின் காலில் இட்டு கொன்ற,

மனு நீதி  சோழன் ஈரம்

நம் மனதில் நிலைத்து நிற்கும்.!

 

ஆங்கிலேயரின் அநீதி பீரங்கி முன்

அங்குலம் கூட அசையாமல் நின்ற

அண்ணல் காந்தியின் தீரம்

நம் கண் முன் நிற்கும்.!

 

சாதி சகதியில் வீழ்ந்து கிடந்தவர்களின்

சமூக நீதிக்காக நின்ற

அம்பேத்கார் விவேகம்

இன்றும் நிமிர்ந்து  நிற்கும்!.

 

தாழ்த்தப்பட்டவர்கள் சமநீதி பெற

தள்ளாடிய போதிலும் தளராமல் நின்ற

பெரியாரின் தியாகம்

என்றும் நிலைத்து நிற்கும்.!

 

வழக்காடு மன்றத்திற்கு மட்டும்

உரியதல்ல நீதி,

அது வழக்கத்தில்

அனைவருக்கும் அவசியமாகும்!

 

வாதத்தில் அடிப்படையில் மட்டுமே

சாத்தியமானதல்ல நீதி,

சத்தியமாகவும் அது

 சமர்ப்பிக்கப் பட வேண்டும்!

 

 

 

நீதி

வலிமையுள்ளோர் பக்கம்  மட்டுமே

வளைந்து நின்றால்

அநீதி!

 

நீதி

பணக்காரர் பக்கம் மட்டுமே

பக்கச் சார்பாய் போனால்

அது படு அக்கிரமம்!.

 

 

நீதி தராசு நிறைய காசின் பக்கம்

சாய்ந்து விடக்கூடாது!

நீதி தேவதை பெரிய மனிதர் முன்

பணிந்து விடக்கூடாது!

 

குற்றவாளி நீதி முன்

தப்பித்து விடக்கூடாது

நிரபராதி நிச்சயம்

தண்டிக்கப் படவே கூடாது!

 

நீதியை நிலை நாட்டிட வேண்டும்

அது நமக்கு பிடிக்காதவர்க்கு

சாதகமாய் இருந்தாலும்!

 

நீதியை நிலை நாட்டிட வேண்டும்

அது நம் அன்பானவர்களுக்கு

பாதகமாய் இருந்தாலும்!

 

நீதியை நாம் அனைவரும்

நிலை நாட்டிட வேண்டும்,

என்ன விலை கொடுத்தேனும்

ஏன்? தலை கொடுத்தேனும்!

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !