உலக அரபி தினம் – டிசம்பர் 18

 

 


                     பேராசிரியர் அ. முஹம்மது அபூதாஹிர்
                        ஜமால் முஹம்மது கல்லூரி
                                 திருச்சி – 20


அரபு மொழி நாற்பது கோடி மக்களின் தாய் மொழியாகவும், ஏழுகோடி மக்களின் இரண்டாவது மொழியாகவும், ஏறத்தாழ இருநூறு கோடி முஸ்லிம்களின் மார்க்க மொழியாகவும், ஐநா சபையின் ஆறு அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.

இஸ்லாத்தின் வருகைக்கு முன்பு, அதாவது கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன், அரபு மொழி முக்கியமாக அரேபிய தீபகற்பத்தில், அதாவது ஹிஜாஸ், நஜ்த், யேமன், ஓமன் மற்றும் சிரியா, மெசபடோமியா உட்பட சில பகுதிகளில் மட்டுமே பேசப்பட்ட மொழி. இஸ்லாமிய வருகை தொடங்கி இன்று வரை, ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் பரந்த நிலப்பரப்பில் ஏறத்தாழ இருபத்து இரண்டு நாடுகளின் தாய் மண்ணின் மொழியாக, மனத்தின் மொழியாக மாறி விட்டது.

அரபு மொழி அரபு முஸ்லிம்களின் தாய் மொழியாக மட்டுமல்ல; அந்நாடுகளில் வாழும் சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களின் தாய் மொழியாகவும் இருக்கின்றது.

அரபு மொழி மனிதகுல நாகரிகத்திற்கு, அறிவியலுக்கு, மார்க்கத்திற்கு, இலக்கியத்திற்கு என பெரும் பங்களித்துள்ளது. அரபு மொழியின் வரலாறு இஸ்லாம் வருவதற்கு முன்பு தொடங்கினாலும், இஸ்லாத்திற்கு பின்னர் தான் அரபு மொழி செழிக்க தொடங்கியது.

இம்ரவுல் கைஸின் கவிதை வரிகளில் களிப்பின் மொழியாக இருந்த அரபு மொழி, குர்ஆன் இறக்கப்பட்ட பின் புனித மொழியாக புனர்நிர்மாணம் பெற்றது. சுவனத்தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகையால் அறிவுச் சுடர் வீசும் மொழியாக கவனம் பெற்றது.

பரிசுத்த குர்ஆனில் சூரா யூசுஃபில் அல்லாஹ் அரபு மொழி குறித்து இப்படி கூறுகிறான்:

اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ

நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்” என்று.

அரபு மொழியின் அருமை குறித்து நபி அவர்கள் இப்படி குறிப்பிட்டார்கள்:

تَعَلَّمُوا الْعَرَبِيَّةَ؛ فَإِنَّهَا تُثَبِّتُ الْعَقْلَ، وَتَزِيدُ فِي الْمُرُوءَةِ

அரபு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் அது மனதைப் பலப்படுத்துகிறது மற்றும் வீரத்தை மேம்படுத்துகிறது” என்று. இந்த ஹதீஸ் இமாம் பைஹகீ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

இரண்டாவது கலீபா உமர் இப்னுல்-கத்தாப் ஒருமுறை தங்களின் உரையில் சொன்னார்கள்:
அரபு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் அது உங்கள் மார்க்கத்திற்கு முக்கியமானது” என்று.

அரபு மொழி இஸ்லாத்தின் வருகையால் நம்பிக்கையின் மொழியானது, நம் பிரார்த்தனையின் மொழியானது, தொழுகையின் மொழியானது, மேலும் அது அன்றாடம் குர்ஆன் ஓதும் மொழியாக ஆனது. பாரக்கல்லாஹ் என்று வாழ்த்துக்களின் மொழியானது. ஜஸாக்கல்லாஹ் என்ற நன்றியின் மொழியானது. பிஸ்மில்லாஹ் தொடக்கத்தின் மொழியானது. இன்னாலில்லாஹ் என்ற ஆறுதலின் மொழியானது. அல்ஹம்துலில்லாஹ் என்ற ஆனந்தத்தின் மொழியானது.

இஸ்லாத்தின் வருகைக்கு பின்பு அரபு மொழி செழித்து வளர்ந்து மனித குலத்தில் மிகப்பெரும் முன்னேற்றம், நாகரிகத்தின் மொழியாக மாறியது. உலகம் அரபியால் பயன் பெற்றது, பலன் பெற்றது. அறிவியல் உலகின் அச்சாரமாய் விளங்கிய அரபு மொழியும் அதன் நாடி நரம்பாய் இருந்த இஸ்லாமும் நிகழ்த்திய விஞ்ஞான அற்புதம் நிறைந்த வரலாறும் “இருண்ட காலம்” என்று ஐரோப்பா சரித்திர ஆசிரியர்களால் மறைக்கப்பட்டது.

ஒரு காலத்தில் உலகில் அறிவியலில் ஆழத்தடத்தை பதித்து அதன் உச்சி வரை சென்ற அரபுகள், அரபு மொழியில் ஏராளமான நூல்களை எழுதி குவித்தார்கள். அவர்கள் தொடாத துறையே இல்லை.

இன்றைய மேற்கத்திய மருத்துவ அறிவியலின் முன்னோடி நூலானது “கானூன் அத்திப்” என்ற அரபு நூலாகும். அந்த நூல்தான் 19 ஆம் நூற்றாண்டில் மேற்கு நாடுகளில் விரிவுபடுத்தப்பட்டு இன்று வரை மருத்துவ பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றது. நீங்கள் மருத்துவத் துறையை சேர்ந்தவராக இருந்தால், அதன் ஆசிரியரான இப்னு சீனாவை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

இயற்பியலில் நியூட்டன், கெப்லர், கலிலியோவை பற்றி பேசும்போதெல்லாம், அவர்களுக்கே முன்னோடியான இப்னு அல் ஹைத் தமை நீங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.

நீங்கள் கணித துறையோ அல்லது கணிப்பொறி துறையோ சேர்ந்தவர்களாக இருக்கலாம். அல்ஜிப்ரா, அல்காரிதம் அறிந்து இருக்கலாம். ஆனால் அவை மூசா அல் குரவாரிஸ்மி என்ற அரபு விஞ்ஞான பொற்கால விஞ்ஞானியால் அளிக்கப்பட்டது என்பதை தெரிந்து இருக்க வேண்டும்.

அரபு மொழி வளமான மொழியாகும். ஒட்டகத்தை விவரிக்க அரபியில் 1000க்கும் மேற்பட்ட வார்த்தைகளும், காதலுக்கு 60க்கும் மேற்பட்ட வார்த்தைகளும் உள்ளன.

அரபு மொழி மற்ற மொழிகளில் பல வார்த்தைகளை கொண்டு விவரிப்பதை ஒரே வார்த்தையில்  சொல்லும் அளவுக்கு எளிய மொழியாகும். உதாரணமாக:

انلزمكموها
நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?

فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ
அவர்களைப்பற்றி உங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்

அரபும் தமிழும் தாய்–சேய் உறவு போன்று நிறைய வார்த்தைகள் ஒத்து வந்துள்ளன. தமிழ் மொழியில் நிறைய அரபி வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் என்று கருதும் அளவுக்கு கலந்து பேசப்படுகின்றன.

இஸ்லாமிய சட்ட வார்த்தைகளான பர்ளு, சுன்னத், நபில், ஜக்காத், ஸதகா, நிக்காஹ், தலாக், குலா, இத்தா, ஹிபா, ஹலால், ஹராம் ஆகிய வார்த்தைகள் கூட அரபு நூல்களில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் போது மாற்றம் செய்யப்படாமல் நேரடியாகவே தமிழில் இடம் பெறுகிறது.

வக்காலத்து, வக்கீல், மகசூல், ஹல்வா, அசல், நகல், பாக்கி, சவால், ஜவாப், தரப்பு, அமானத், அமீனா, ரசீது, ஆஜர், சர்பத் ஆகியன பொது சமூகம் பேசுகின்ற தமிழில் கலந்து விட்ட அரபி சொற்களுக்கு சில உதாரணங்களாகும்.

அரபு மொழியின் ஆயிரத்து ஓர் கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மேலும் அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகிய சினிமா படங்கள், அரபு பாத்திரங்களின் பெயர்கள் கூட மாற்றம் செய்யப்படாமல் அப்படியே வெளிவந்துள்ளன.

தமிழகத்திற்கும் அரபுகத்திற்கும் ஆன உறவானது வணிகர்கள் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரர்களின் பயணங்களின் மூலம் உருவானதாகும். இந்தப் பயணங்கள் தமிழகத்தில் அரபு தேசத்தின் பொருட்களை கொண்டு வந்ததோடு இல்லாமல், தமிழகத்தில் அரபு வார்த்தைகளையும் தமிழ் மொழியிலே கொண்டு வந்துள்ளது. அவை இஸ்லாமிய மார்க்க அளவிலும் மேலும் பொதுவாக மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் தற்காலத்தில் அரபு நாடுகளுக்கு வேலை நிமித்தம் பயணம் கொள்ளும் தமிழ் மக்கள் பல அரபு வார்த்தைகளை தமிழ் மொழியில் நேரடியாக பயன்படுத்துகின்றனர். அவை:

விசா, வக்காலா, கபீல், முதீர், தஸீரா, சபர், ஜவாஸ், மத்தார், ஹுரூஜ், துஹூல், தத்கிறா ஆகிய வார்த்தைகளாகும்.

நீங்கள் அரபி மொழியால் தினமும் ஒரு வகையில் பயன் பெறுகிறீர்கள். உலகம் அரபு மொழியை புறக்கணித்து விட முடியாது. நீங்கள் அரபி மொழி பேசாமல் இருக்கலாம்; அரபி உங்கள் தாய் மொழியாக கூட இல்லாமல் இருக்கலாம். எனினும், நீங்கள் ஒருவகையில் அரபி மொழியுடைய ஒரு வார்த்தை பேசக் கூடியவராகவோ, அல்லது அரபி மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களில் பயனடைந்தவராகவோ, அல்லது அரபு மொழி வழக்கு உள்ள வார்த்தைகளை உங்கள் மொழியில் பயன்படுத்தக் கூடியவராகவோ இருப்பீர்கள்.

அரபி இல்லாமல் உலகம் இல்லை.
டிசம்பர் பதினெட்டு – உலக அரபி தினம்.
உலக மக்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தினமும் அரபி தினம்தான்.


 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !