அரபுத்தமிழ் - உருவாகியதும் சருகாகியதும்!
அ. முஹம்மது அபூதாஹிர் , உதவிப் பேராசிரியர் , அரபித்துறை , ஜமால் முகமது கல்லூரி , திருச்சி-20 முன்னுரை: தமிழ் அமிழ்து , பல்லாயிரமாண்டுகால விழுது மிக நீண்ட நெடிய பாரம்பரியமும் நிறைய நீதி நெறி நூல்களையும் கொண்ட மொழி , கீழடி வரலாற்றாய்வின் படி கிமுவிற்கு முன்பு பிறந்த மொழி , திராவிடக் குடும்பத்தில் பிறந்து தென்னாட்டில் செழிப்போடும் இன்றும் இருக்கும் செம்மொழி. அரபு நிலம் என்பது புல் பூண்டற்ற வறண்ட திடல். ஆனால் அரபு மொழி ஓர் அரபிக்கடல். செமிட்டிக் குடும்பத்தில் பிறந்து இன்றும் நீண்ட காலம் நெடு வாழ்வு கொண்ட மொழி, இஸ்லாத்தின் வருகைக்கு முன் அம்பும் காதலும் மதுவும் கவிதைகளில் கரை புரண்டோடிய மொழி இஸ்லாத்தின் பின்பு அன்பும் , நீதியும் அறமும் அலைபாய்ந்து ஓடும் மொழி. த மிழகத்திற்கும் அரபுலகத்திற்க்கும் இடையே நீண்ட நெடிய தூரம் இருந்தாலும் அரபு தேசத்தின் கடலோடிகள் இந்த இரு பகுதிகளையும் இஸ்லாம் தமிழகம் வருவதற்கு முன்பே கடல் பயணத்தின் மூலம் ஒன்றிணைத்திருந்தார்கள்.இஸ்லாத்தின் வருகைக்குப் பின்பு ஏற்கனவே சமத்துவம் சமூக நீதியின் விழுமியங...