இன்று தாத்தா (தாதா )உலகத்தில் இல்லை


திருச்சி A.முஹம்மது அபூ தாஹிர் 
thahriuae@gmail.com



Ø  இன்று தாதா
இல்லை !
Ø  அவரின் நினைவுகள்
என்னிடம் இருக்கிறது !

Ø  அவருடன்
வீட்டில் அமர்ந்திருந்தது!
அவருடன்
கடை வீதியில் நடந்துச் சென்றது!
அவருடன் பள்ளிவாசலில்
படுத்துத் தூங்கியது !
அவருடன் கடைசியாக
நான் சேர்ந்து நோன்பு திறந்தது !
நினைவுகள் அப்படியே
நிகழ் காலத்திலிருந்து
பின்னோக்கி நகர்கிறது !
கடந்தக் காலம் அவரோடு சேர்ந்து வந்து
என் கண் முன்னே வருகிறது !


Ø  அவர் பிறந்தது
இலங்காகுறிச்சி!
வாழ்ந்து மறைந்தது
திருச்சி !
Ø  காதர் மஸ்தான் பெற்ற
கல்விமான் அவர் !
பாட்சாயி ராவுத்தர் பெற்ற
செல்வ மகள் ஆபிதா பீ
அவரது துணைவியார்!
Ø  அவருக்குப் பிறந்த பிள்ளைகள்
ஐந்து பேர் !
அவருக்கு முன்னே இறந்துப் போனது
அதில் மூன்று பேர் !
Ø  அவர் வாழ்வின் கடைசி வரை
அவருடன் இருந்தது இரு பிள்ளைகள் !
அவருக்கு
பதினான்குப் பேரப்பிள்ளைகள்!
Ø  தாதா !
நீர் இறந்த நாள்
என் கண்களில்
கண்ணீர் வழிந்தோடியது !
உலகை விட்டு
உன்னுடன் வரவே
என் மனம் நாடியது !


Ø  ஆம்
கவலையாய் இருந்தது !
கண்ணில் நீர் திவலையாய் வந்தது !
Ø  உமக்கு ஒரு சட்டை
அனுப்ப வேண்டும்
ஒரு சக்கர நாற்காலி வாங்கி
அதில் அமர வைக்க வேண்டும்!
அன்பானவரே !
சீக்கிரம் விடுமறை எடுத்து வந்து உன்னுடன்
அளவளாவ வேண்டும்
என்றெல்லாம் ஆசைகள் இருந்தது என் மனதில் !
ஆனால்
அவையெல்லாம் நிறைவேறாக் கனவுகளாய்
அவைகளும் உம்முடன் சேர்ந்து இறந்து விட்டது !
Ø  கண்ணுக்குள் இருப்பவரே !
பாலை வனத்தில் கானல் நீர் கூட
நான் பார்த்ததுக் கிடையாது !
ஆனால் உன்னுடன்
என் சந்திப்பே கானல் நீராகிவிட்டது !
எம் கண்களில் நீராகி விட்டது !
                                                         
Ø  உமது கடைசி நாட்களில்
உமதுப் பேரன்
ஊரில் இருக்க வில்லை !
உம்முடன் இருக்க அவனுக்கு
பேரு கிடைக்கவில்லை!
எதுகை மோனைப் பார்த்து
எதிலெல்லாம் என்னை நீ கவர்ந்தாய் என்பதை
விட்டு விடுவேனோ என பயம் எனக்கு!
வார்த்தைகளை அழகுப்படுத்தி
நீர் வாழ்ந்ததை வரிகளில்
விட்டு விடுவேனோ என அச்சம் எனக்கு !
எனவே
எண்ணத்தில் உதித்ததை
எளிமையாகவே சொல்லப் போகிறேன்!

Ø  நீர் கணக்குப் பிள்ளை !
எம் தந்தை உமக்குப் பிள்ளை !

Ø  செல்வக் குடும்பத்தில்
பிறந்தீர்!
வறுமையே செல்வமாக
வாழ்ந்தீர் ! 

Ø  பொய்யான உலகத்தில் வாழ்ந்த
மெய்யான மனிதர் நீர் !
ஏமாற்றும் உலகத்தில்
ஏமாந்துப் போனவர் நீர் !

Ø  நீர் புகையிலைப் போடுவீர் !
ஆனால் யாருடனும் 
உமக்குப் பகை இருந்ததுக் கிடையாது !

Ø  சுருட்டு உமக்குப் பிடிக்கும்
ஆனால் நீர்
யாருடையதையும் சுருட்டியதுக் கிடையாது !

Ø  அரசியல் நீர்
நன்றாக பேசுவீர்!
அரசியல் அதிகாரத்தில் நீர் இருந்திருந்தால்
மக்களுக்கு நன்மைகள் கிடைத்திருக்கும் !

Ø  நேர்மையாக
கணக்கு எழுதிய நீ
அலுவலகத்தில் அதிகாரியாக இருந்திருந்தால்
உண்மையான  நிர்வாகம் கிடைத்திருக்கும் !

Ø  நீர்
பேராசைப் பட்டதுக் கிடையாது !
பெற்றால்
நீர் ஆனந்தப்படுவீர் !

Ø  கிடைத்ததற்கு
அல்லாஹ்விற்கு நன்றி பகர்வீர் !
அருகில் இருக்கும் அனைவருக்கும் 
அதை உடன் பகிர்ந்து விடுவீர் !

Ø  நீர் யாரையும்
பழி வாங்கியதுக் கிடையாது !
பழித்ததும் கிடையாது !

Ø  எவ்வளவுப் புத்தகங்கள்
நீர் படித்தீர் !
எமக்கு
நீர் வாங்கிக் கொடுத்தீர் !

Ø  நபி (ஸல்) அவர்கள் வரலாறு!
அன்னை ஆயிஷா வரலாறு !
முஸ்லிம் ஸ்பெயின் வரலாறு !
நபிமார்கள் சரிதை !
என மார்க்கப் புத்தகங்கள் !

Ø  சிரியுங்கள் சிந்தியுங்கள்
முல்லாவின் சிரிப்புகள்
முன்னேறுவது எப்படி?
தமிழ் நாட்டு கீரை வகைகள்
என பொதுப் புத்தகங்கள் !
எழுத பட்டியல்கள் நீளும் !

Ø  அட்டைப் போட்டு
           அழகாய் அலமாரியில் அடுக்கி வைத்தீர் !
           அன்பாய் எம்மை
           ஒவ்வொன்றாய் படிக்க வைத்தீர் !
       


Ø  முத்தாரம், கல்கண்டு முதற்கொண்டு
தினத்தந்தி,தினகரன் ,தினமணி, ஹிந்துவையும் கொண்டு வந்து
மணிச்சுடர் ,மறுமலர்ச்சி,முக்குல முரசு ,புனிதப் போராளி
உணர்வு ஆகியவற்றை வாங்கி வந்து
வீட்டில் போடுவீர் !

Ø  படிக்க ஆர்வம் கொண்டு
யார் முதலில் வாங்குவது என
அதைப் பிடிக்க உன்னிடம் ஓடி வருவோம் !

Ø  சமரசம் ,நர்கீஸ், குர்ஆனின் குரல்,
என எத்தனையோ  இஸ்லாமிய பத்திரிக்கைகள்
வாங்கி தந்தீர் !

Ø  சித்த மருத்தவம் ,தெய்வீக மருத்துவம் ,கருவூலம்
என பொது அறிவு மாத இதழ்கள்ஏராளம்
நீ வாங்கி வந்தீர் !

Ø  உம் ஆங்கில எழுத்துக்கள்
அழகானது !
நீ ஆங்கிலம் வாசிக்க
எமக்கு கற்றுக் கொடுத்தது அன்பானது !

Ø  உன் எழுத்துக்கள் அனைத்தும்
முத்துக்கள் !
நீ வாங்கிக் கொடுத்த
புத்தகங்கள் அனைத்தும்
எமக்கு சொத்துக்கள் !

Ø  எத்தனை எத்தனை
வாய்ப்பாடுகள்
வாங்கிக் கொடுத்தீர் !
எத்தனை பேனாக்கள்
பென்சில்கள், ஸ்கேள்கள்
வாங்கிக் கொடுத்தீர் !

Ø  முதல் ரேங்க் எடுத்தால்
அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பீர் !
பரிசு பொருள் ஏதாவது
நீர் வாங்கிக் கொடுப்பீர் !

Ø  நீர்  கணக்குப் பிள்ளை
இளங்கலை கணிதம் முடித்து விட்டாள்
உமதுப்  பேத்தி ஆயிஷா !

Ø  எவ்வளவு அழகாகப் பாடுவாய்
உம் பேரன் ஸாலிஹ் பாடும் போது
உம் ஞாபகம் எனக்கு வருகிறது !

Ø  உமது  அரபி எழுத்துக்கள்
அற்புதம்
நீர் ஓதிக் கொடுக்கும் விதமே
கேட்க அற்புதம் !

உமதுப் பேரன் ஜமால் ஓதும் போதும்
எழுதும் போதும்
உம்மைத்தான்  இங்குப் பார்க்கிறேன் !

Ø  புத்தகப் பூச்சி நீர்
உன் பேரன் அப்துல் காதர்எழுதிய
புத்தகம் பார்த்து நீர்
புளகாங்கிதம் அடைந்தீர் நீர் !

Ø  உமது நேர்மையான பேச்சு
உன் பேத்தி ஹமீதாவின்
நேர்மறையான பேச்சில் தெரிகிறது!

Ø  ஆழ்ந்துக் கூறும் உனது கருத்துக்கள்
உன் பேத்தி ஆபிதா பேசும் போது
அப்படியே வெளிவருகிறது!

Ø  உனது சகிப்புத்தன்மை
உன்னதப் பொறுமை
மூத்தப் பேரன்
முஹம்மது காசிமிடம் இருக்கிறது !

Ø  எத்தனையோ
பத்திரிக்கை முதல் நாளிதழ் வரை 
படிக்க வைத்து யோசிக்க வைத்தவரே !
உமது பேத்தி சுல்தானா இன்று
பத்திரிக்கையில் எழுதியிருக்கிறாள்
வாசிக்க நீர் இல்லை !

Ø  இந்தக் கவிதை உன் பேரன்
தாஹிர் எழுதியது !
இது நீதான்
எழுதக் கற்றுக் கொடுத்தது!

Ø  அன்பானவரே
உன் கடைசி நாட்கள்
உன்னுடன் நான் இல்லை !

Ø  எங்களுடன் வாழ்ந்தவரே
கனவில்தான்
உன்னைப் பார்க்க முடிகிறது !

Ø  சுகர் ,பிரஷர்
எந்த வியாதியும்
உனக்கு இருந்ததில்லை !
சுற்றி இருந்த யாரிடமும்
உனக்கு விரோதமும் இருந்ததில்லை !

Ø  நீ கடைசியாக
வாழ்ந்த உன்வீடு
நீ இல்லாத உன்னறை
மண்ணறை போன்று இருந்தது !

Ø  உன் வாழ்க்கையின்
கடைசி நாள்
நீ இருந்த உலகில்
நான் வாழ்ந்த கடைசி நாள் !

Ø  உன்னை
பிரியா விடை கொடுத்து 
அனுப்பி வைத்த வீட்டில்தான்
நீ நான் இவ்வுலகத்தில்
பிறந்த போது
பிரியமுடன் வரவேற்றாய் !

Ø  எனக்கு பெயரிட்ட தினமன்று
முதலில்
நீதான் என் பெயரை
டைரியில் எழுதி வைத்தாய் !

Ø  தாஹிர் அல்லாஹ்வின் மீது
தவக்குல் வை என்றது !
போனில் எனக்காக
துஆ செய் என்றது என்றதும்
வருகிறது என் நினைவுகளில் !

Ø  எவ்வளவோ அறிவுரை
அன்புடன்
நீ கூறிய போது
அலட்சியம் நான் செய்தேன் !

Ø  தவறுகள் பலவற்றை
நீ கனிவாக கண்டித்த பொது
கண்டுக் கொள்ளாமல் இருந்தேன் !

Ø  நினைத்து பார்க்கிறேன்
நிச்சயம் காலங்கள்
திரும்பபோவதில்லை!
காலமானவர்களும்
திரும்பியதில்லை !

Ø  கவிதை எழுத
கற்றுக் கொடுத்தாய் !
கவிதையே நீதான் !
என் கவிதைக்கு விதையே
நீதான் !

Ø  ஒவ்வொரு தடவையும்
வாழ்த்தியவரே
ஒரே தடவை கண்ணீரில்
ஆழ்த்தி விட்டுச் சென்று விட்டீர் !

Ø  பால்யப் பருவத்தில்
பெத்தவர்களை இழந்தீர் !
வாலிபப் பருவத்தில்
சொத்துக்களை இழந்தீர் !

Ø  வாசித்தீர் !
வாசிக்க கற்றுக் கொடுத்தீர் !
வாசிக்க புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தீர் !
நாம்
உன்னை வாசிக்கிறோம் !

Ø  நீ வாசித்ததை
வாசிக்கிறோம் !
நீ வாசிக்க தூண்டியதால்
நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறோம் !

Ø  நேசித்தாய் !
நீ பெற்றவர்களை
நேசித்தாய் !
உன்னை சுற்றி இருந்த
அனைவரையும் நேசித்தாய் !

Ø  வெறுக்கிறவர்களையும்
வேரறுக்கிறவர்களையும்
நேசிக்க கற்றுக் கொடுத்தாய் !
உம்மை நேசிக்கிறோம் !
நீ பெற்றவர்களையும் நேசிக்கிறோம் !
நீ நேசிக்க கற்றுக் கொடுத்ததால்
மற்றவர்களையும் நேசிக்கிறோம் !

Ø  யோசித்தாய்
நேர்மையாக !
உன் புத்தி இருந்தது
கூர்மையாக !

Ø  யோசிக்கிறோம் !
மாற்றுக் கருத்துக்கள்
ஏற்றமாய் இருந்தால்
ஏற்கிறோம் !

Ø  கஞ்சத்தனம் கொண்டவராக
நீர் இருந்ததில்லை !
கல்நெஞ்சத்தனம் கொண்டவராகவும்
நீர் இருந்ததில்லை !

Ø  யாருக்கும்
அஞ்சியதில்லை !
எவருடனும்
நயவஞ்சகமாகவும்
இருந்ததில்லை !

Ø  உமது வரலாறு
        உமது பேரனால் நினைவுக் கூறப்படும் !
        உமது அழகிய பண்பாடுகள்
        உமக்குப் பின்னர் பின்தொடரப்படும் !
  பின் பற்றப் படும் !

Ø  கடையில் வாங்கியப் பொருள்
குறையிருந்தால்
தூக்கி வீசுவீர் !
திருப்பி கடைக்காரனிடம்
கொடுத்தால்
பாவம் அவன் என்ன செய்வானென பரிதாபப் படுவீர் !

Ø  சூட மிட்டாய்
கடலை மிட்டாய்
தேன் மிட்டாய்
தேங்காய் மிட்டாய்
எத்தனையோ மிட்டாய்
நீ வாங்கி தந்து விட்டாய் !
இன்னும் இவையெல்லாம்
இருக்கிறது நினைவுகளில் இனிப்பாக !
இப்போது வாங்கித்தர
நீ இல்லாமல் போய் விட்டாய் !

Ø  வடை ,அப்பம்,போட்டி அப்பளம்
காரா பூந்தி ,மிச்சர் ,ஓமப்பொடி
என வாங்கி கொடுத்தவரே
நாங்களாக அவற்றை வாங்கி சாப்பிட்டாலும்
அப்படி ஒன்றும் இப்போது சுவையில்லை !

Ø  தெருவில் கூவி விற்பதை பார்க்கிறோம்
“பொறி உருண்டை ,பொறி பொட்டுக் கடலை “
உம் கையால் வாங்கிச் சாப்பிட முடிய வில்லை என கவலை!

Ø  பால் கோவா ,ஹல்வா இனிப்பு பதார்த்தம்
பலகாரக் கடையில் பார்க்கும் போது
வாங்கிக் கொடுக்க நீ இல்லை என  வருத்தம் !

Ø  வாழைப்பழம்
வாங்கி வந்து வீட்டு வாசலில் நீ  நிற்ப்பாய் !
கொடுப்பாய்
ஒவ்வொருவருக்கும் பொறுப்பாய் !

Ø  பிஸ்கட் வாங்கி
அனைவருக்கும் கொடுப்பாய் !
குறைவாக இருந்தால்
பிட்டு பிட்டுக் கொடுப்பாய் !

Ø  உன் துணியை
நீரே துவைத்துக் கொள்வீர் !
கிழிந்து விட்டால்
நீரே தைத்துக் கொள்வீர் !
   

Ø  பாசமிக்கவரே
உன் பேரப் பிள்ளைகள்
கெட்டு விடக் கூடாது என்பதற்காக
பத்திரிக்கைகளில் வரும்
ஆபாசப் பத்திகளை கிழித்து தீயில் எறிவீர் !

Ø  நீர்
எம்முடன் வாழ்ந்தக் காலம்
எமக்குப் கொடுப்பினை !
உம்மால்
எமக்குக் கிடைத்தது
வாழ்வில் பல படிப்பினை !

Ø  புதுக் கைலியைக் கிழித்து
அழகாக பல கைக்குட்டைகள்  தைப்பீர் !
புது பேப்பரை கிழித்து
அழகாக எமக்கு அட்டைப் போட்டுக் கொடுப்பீர் !

Ø  நபியின் மீது
உமக்கு
அலாதிப் பிரியம்
உமது நாவுகள்
எப்போதும் நபி மீது
பாடல்கள் சொரியும் !

Ø  உஸ்மானியப் பேரரசு
உலகப் போர்கள்
நீ பேசிய உலக வரலாறு
காந்தி ,ஜின்னா
காமராஜர் ,அண்ணா என
நீ பேசிய இந்திய வரலாறு !
நீயே ஆகிவிட்டாய்  வரலாறு !

Ø  அன்றாடம்
நான் நோக்கும் பிரச்சினைகளில்
உன் நினைவுகள் வரும் !

Ø  உன் அறிவுரைகளை
அலட்சியம் செய்ததே
எமக்குப் பிரச்சினை!.

Ø  முஸ்லிம் லீக்
உமக்குப் பிடித்தக் கட்சி !
காயிதே மில்லத்
நீ படித்த தலைவர் !

Ø  உன்னுடைய மகன்
தாதா ஆகி விட்டார் !
அவருக்கு இப்போது
நான்கு  பேத்திகள் !
ஆதிஃபா,அஸ்மா ,ஸமீஹா,தய்யிபா
ஒரு பேரன்
முஹம்மது அனஸ் .

Ø  அவர்கள் தாதா
என்று வாயசைக்கும் தருணம்
தாதா உங்கள்
ஞாபகம் எனக்கு வருகிறது !

Ø  இம்மையில் நீர்
குடிசையில்தான் வாழ்ந்தீர் !
இன்ஷா அல்லாஹ் மறுமையில் நீர்
சுவன மாளிகையில் இருப்பீர்!

Ø  நல்லவரே !
நம்புகிறோம் !
நாயனிடம்
பிரார்த்திகிறோம் !

Ø  என் கண் முன்னே வாழ்ந்தவரே
மண்ணில்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீரே !

Ø  உம்மை நினைத்தால்
என் மனம்
உருக்கமாக இருக்கிறது !
கழிகின்ற வாழ்வின் நாட்கள்
எம்மையும் மண்ணறையை சந்திக்க
நெருக்கமாக ஆக்குகிறது !

Ø  இறுதியாக உம்மிடம்
நான் விடை பெற்ற தருணம்
என் கண் முன்னே நீரோடு நிற்கிறது !
இறுதித்தீர்ப்பு நாள் அன்று
உம்மை நான் சந்திப்பேன் என்ற
நம்பிக்கையோடு என் நாட்கள் நகர்கிறது !

Ø  அல்லாஹ்வே
பிரியா விடைப் பெற்று விட்டஎங்கள் தாதாவை
பிர்தவ்ஸ் சுவனத்தில் புகுத்துவாயாக !
உம்மிடமே
இருக்கிறது எமது மீளுமிடம் !
ஆக்கிடுவாய் சுவனத்தின் தங்குமிடமாய் !

**********************************************************************************************************




கருத்துகள்



  1. கவிதை அருமை - மாஷா அல்லாஹ். உங்கள் கவிதை உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
    உங்கள் படைப்புகள் மேலும் சிறக்க
    வாழ்த்துக்கள் !

    அல்லாஹ்வே !
    பிரியா விடைப் பெற்று விட்ட
    எங்கள் தாதாவை பிர்தவ்ஸ் சுவனத்தில் புகுத்துவாயாக !
    உம்மிடமே இருக்கிறது எமது மீளுமிடம் !
    ஆக்கிடுவாய் சுவனத்தின் தங்குமிடமாய் !

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !