சிந்தனைப் பயணங்கள் - இராக்கின் இப்ராஹிம் நபியும், கிரேக்கத்தின் சாக்ரடீஸும்
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com
இன்று நாம் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழ்கிறோம்.நமது காலத்தை நாகரீகத்தில் மற்றும் நவீனத்தில் மேம்பட்ட
காலமாக கருதுகிறோம்.நமது காலத்தில் சிந்திப்பவர்கள்,வினா தொடுப்பவர்களை
முற்போக்குவாதிகள் என்று நினைக்கிறோம். நமது கருத்துக்கள் வித்தியாசமானவையாக
இருக்கும் போது அவற்றை எதிர்ப்பவர்கள் இருப்பார்கள் என்று நாம் சொல்லும் வேளையில்
அதனை ஆதரிப்பவர்கள் அல்லது நமக்கு நம் கருத்தால் நமக்கு பிறரால் ஆபத்து உண்டாகாமல் இருக்க பாதுகாப்பு
கொடுப்பவர்கள் ஆட்களோ அல்லது அமைப்புக்களோ இருக்கலாம்.இதுவெல்லாம் இன்று
சுதந்திரம்,கருத்துரிமை மற்றும் பேச்சுரிமை என்று பேசக் கூடிய, நடைமுறையில்
இருக்கக் கூடிய இக்காலத்தில் ஆச்சரியாமானதல்ல. நமது கருத்துக்களை மக்கள் ஆதரிப்பது
ஒரு புறமிருக்கட்டும்.நமது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் நிச்சயமாக ஆபத்து
என்பது இருக்காது.
ஆனால் இன்றிலிருந்து ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசர்களின் மூர்க்கத்தனமும், மதவாதிகளின்
மூடத்தனமும் கைகோர்த்து மனிதர்களை அடிமைப் படுத்தி இருந்த காலத்தில் கேள்வி கேட்க
அல்ல சிந்திக்கவே முடியாது. ஆம்! இதுவெல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது
.அந்தக்காலத்தில்தான் இராக் நாட்டின்
“உர்”நகரத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் காலங்காலமாக மக்கள் நம்பிக் கொண்டிருந்த
நம்பிக்கைகளை குறித்து வினா எழுப்பினார். மக்கள் தங்களை சுற்றி அதிகமான மக்கள் எதை
நம்புகிறார்களோ அதனையோ, அல்லது தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக எதை
நம்புகிறார்களோ அதனையோ. அல்லது சமூகத்தில் மத குருமார்களோ, முக்கிய பிரமுகர்களோ
எதை நம்புகிறார்களோ அதனையோ உண்மை என்று இன்று மட்டுமல்ல அன்றும் மக்கள் நம்பி
வந்திருக்கின்றனர்.ஆனால் இராக் நாட்டில் உர் நகரத்து இளைஞரான இப்ராஹிம் (அலை )
அவர்களோ அந்த வழக்கமாக சமூகம் போகும் சிந்தனைப் போக்கில் இருந்து வேறுபட்டு
வானத்தை பார்த்து அதில் இருக்கும் சூரியன் மற்றும் சந்திரனை பார்த்து
சிந்திக்கிறார், அவை இறைவனாக இருக்குமோ என வினாக்களை தமக்குள் தொடுக்கிறார்.ஆனால்
தோன்றி பின்னர் அவை மறைவதைக் கண்டு நிச்சயம் தோன்றி மறைவன தமது கடவுள்களாக ஆக முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்..மக்கள் தங்கள் கைகளால்
செய்து வழிப் படும் சிலைகளை பார்க்கிறார். நமது கைகளால் செய்யப் பட்டவை எப்படி
நமது தெய்வங்களாக இருக்க முடியும்.தம் மீது படும் ஈயை கூட விரட்ட இயலாதது எப்படி
நம்மை காப்பாற்ற முடியும். என்று சமூகத்திடம் கேட்கிறார்.அங்கு ஆட்சியாளனும் தம்மை
தெய்வமாக பிரகடனம் செய்திருந்த போது அவனிடம் அறிவுப்பூர்வமாக விவாதம்
செய்கிறார்.இந்த நிகழ்வுகள் குர்ஆனில் சூரா அன்பியா ,மர்யம் மற்றும் தாஹா போன்ற
அத்தியாயங்களில் குறிப்பிடப்படுள்ளது
வானங்கள் மற்றும் பூமியை படைத்து அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து
பரிபாலிக்கும் இறைவன் ஒருவனையே வணங்க
வேண்டும்.அவன் மனிதர்கள் தெய்வம் என்று கருதி வணங்கும் கற்பனையான தெய்வங்களின் பலகீனங்களை விட்டும்
பரிசுத்தமானவன்.வலிமைமிக்கவன். அவனை தவிர மற்ற எதனிடத்திலும்,எவரிடத்திலும் உதவி
தேடவோ மற்றும் வழிபாடு செய்யவோ கூடாது என்று தம் நேரிய கொள்கையை சமூகத்தில்
எடுத்து வைத்தார்.
வீரியம் கொண்டு முழு சமூகமும் அவர்களை
எதிர்த்த போதும் இப்ராஹிம் என்ற தனி மனிதருக்கு
சத்தியத்தை சற்றும் தளர்வின்றி பின்பற்றுவதிலும் பிரச்சாரம் செய்வதிலும் முழு
தைரியம் இருந்தது..கடைசியில் மக்கள் அனைவராலும் ஒதுக்கப் பட்டு மன்னனால்
நெருப்புக் குண்டத்தில் தூக்கி வீசப் பட்ட போதும் அவரது தவ்ஹீத் ஏகத்துவம் ,ஏக
இறைவன் ஒருவன்தான் என்ற நம்பிக்கை அவரது உள்ளத்தில் உறுதியாக இருந்தது. கடைசியில்
நெருப்பே அதன் சக்தி இழந்து குளிர்ந்தது. அல்லாஹ் நெருப்புக்கு கட்டளையிட்டான்,
நெருப்பே இப்ராஹிமுக்கு குளிர்ச்சியாக, சாந்தி அளிக்கக் கூடியதாக ஆகி விடு என்று ஆம்
நெருப்பு குண்டம் குளிர்ந்தது,அல்லாமா
இக்பால் கூறுகிறார் “இப்ராஹிம் நபியின் ஈமான் – நம்பிக்கை இன்று இருந்தால் கொழுந்து விட்டெறியும் நெருப்பும் பூஞ்சோலை
ஆகுமன்றோ “ என்று.
ஒவ்வொரு காலத்திலும் இப்படி முற்போக்கு சிந்தனைவாதிகள்
இருந்திருக்கிறார்கள்.இப்ராஹிம் (அலை) அவர்கள் பிறப்பதற்கு ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு
முன்பு கிரேக்க நாட்டின் சாக்ரடீஸ் அவரது காலத்தில் மக்கள் இயற்கை பொருட்களை
மற்றும் கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருந்ததுக் குறித்து வினாக்களை தொடுத்தார் . அப்போது
அவர் மீது . இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள்
வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு
புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார்.வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும்
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்.என அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது. ஏனென்றால் அக்காலக்கட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே
கடவுளாக வழிபட்டனர். .
நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் சொன்னார் “நான்
கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும்
அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை
ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்” என்றார்.
உர் நகரத்தின் இப்ராஹிம் என்ற இளைஞரும் ஏதென்ஸ் நகரத்தின் சாக்ரடீஸ் என்ற
முதியவரும் வேறுப் பட்ட காலங்களில் வாழ்ந்திருந்தாலும் இருவரும் தங்கள் காலத்தில்
தவறான நம்பிக்கைகள் குறித்து வினாக்கள் எழுப்பினர்.
பகுத்தறிவும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. மனிதன் அவனது
படைப்பாளன் குறித்த நம்பிக்கையில் உண்மையை அடைந்து அவனை ஏற்கும் போது அவன் அனைத்து மூட நம்பிக்கைகள், மற்றும்
படைப்புக்கள் மீதான அச்சங்கள் ஆகியவற்றை விட்டும் வெளியாகி சுதந்திர மனிதனாகிறான்.ஐரோப்பிய
வரலாற்று அறிஞரான லென்பூல் என்பவர் “இஸ்லாமின் தவ்ஹீத் என்ற ஏகத்துவம் அதாவது ஒரே
இறைவன் மீதான நம்பிக்கை அனைத்து விதமான அடிமைத்தனங்களில் இருந்தும் மனிதர்களை
விடுவிக்கிறது” என்கிறார்
சிலைகளின் சிற்பியான ஆசரின் மகனான
சிந்தனை சிற்பி இப்ராஹிம் (அலை )
அவர்கள், தாங்கள் அடைந்த நேர்வழியை மக்கள் அடைய ஒரே இறைவனான அல்லாஹ்வை மட்டுமே
வணங்கி வழிபட மக்கா நகரத்தில் நிர்மாணித்த காபா, காலங்கள் கடக்க அவர்களின்
கொள்கைகள் மறக்கப் பட்டு மனிதர்களால் சிலைகளால் நிரப்ப பட்டது. ஏன் அவருக்கே கூட சிலை அங்கு வடிக்கப்பட்டது. ஏழாம் நூற்றாண்டில் இறுதித்
தூதராக வந்த இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் இப்ராஹிம் (அலை)
அவர்களின் ஏகத்துவ நெறியை போதித்தார்கள்.காபாவில் இருந்த அனைத்து சிலைகளையும்
அகற்றினார்கள்.அவர்களுக்கு அருளப்பட்ட குர்ஆன் மனிதன் சிந்திக்க வேண்டாமா ? வானங்கள்,பூமி
மற்றும் படைப்பினங்கள் பற்றி ஆராய
வேண்டாமா என்ற சிந்தனை அழைப்பு விடுக்கிறது.. இறைவன் ஒருவன்தான், அவனுக்கு நிகர்
யாருமில்லை, அவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெற்றெடுக்கப் படவுமில்லை.
மனிதர்கள் இவ்வுலகில் படைப்புகள் குறித்து சிந்திப்பதன் மூலம் அவனது
உள்ளமை மற்றும் வல்லமை குறித்து அறிய
முடியும் என்று குர்ஆன் விளக்குகிறது. குர்ஆன்
இப்ராஹிம் (அலை) அவர்களின் சிந்தனை மற்றும் நேர்வழிப் பயணங்களை குறிப்பிட்டு அவர்களிடம்
அழகிய முன்மாதிரி மக்களுக்கு இருக்கிறது என்று மனித குலத்துக்கு சுட்டிக்
காட்டுகிறது .
********************************************************************************************************************
கருத்துகள்
கருத்துரையிடுக