ஈதுல் பித்ர் - ஈகைத் திருநாள் உரை
திருச்சி மவ்லவி M.அப்துன் நாஸிர் - மன்பயீ
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம்
செய்கிறேன்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது.சாந்தியும் சமாதானமும் அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும்,அவர்களின் தோழர்கள்,குடும்பத்தார்கள் மற்றும்
இறுதி நாள் வரை அவர்களை பின் பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக.
ரமலான் மாதம் நேற்றுடன் விடைப் பெற்று
சென்று விட்டது.எனினும் அது பல வினாக்களை நமக்கு விட்டு சென்றுள்ளது.நமது
எதிர்காலம்தான் அதற்க்கு பதில் சொல்லும்.வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் நாம்தான் நமது வாழ்வின் நடைமுறைகளை கொண்டு அதற்க்கு
பதில் சொல்லியாக வேண்டும்.
மனித குலம் தோன்றியது முதல் உயிர் வாழ
நீர்,நிலம் காற்று மட்டுமல்ல. அவன் மனிதனாக வாழ
வேதமும் ,இறைத்தூதரும் ஆம் இஸ்லாம்
என்னும் மார்க்கமும் வழங்கப் பட்டு அவன் வழி காட்டப் பட்டே வந்திருக்கிறான். உலகம்
முழுவதும் எல்லா பகுதிகளிலும் இப்படி நேர்வழிப் பெற அல்லாஹ் தூதர்களை அனுப்பி வேதங்களை இறக்கி அருள் புரிந்து இருக்கிறான்.அவற்றில்
கடைசியாக முழு உலகும் நேர்வழிப் பெற இறுதி வேதமாக குர்ஆனை இறக்கியும்,அவற்றை
விளக்கி வழிகாட்ட இறுதி தூதராக முஹம்மது (ஸல்) அவர்களை அனுப்பியும் அல்லாஹு
சுப்ஹானஹூ வ த ஆலா கிருபை செய்தான் .ஆம் ரமலான் ,பரிசுத்தக் குர்ஆன் அருளப்பட்ட மாதம். முஹம்மது (ஸல்) அவர்கள் உலகுக்கு நபியாக
அனுப்பப் பட்ட மாதம். இஸ்லாம் மார்க்கம் இவ்வுலகிற்கு மீண்டும் இறுதியாக அறிமுகப்
படுத்தப் பட்ட மாதம்.
இஸ்லாம் என்பதற்கு இரண்டு பொருள்கள் கொள்ளப் படுகிறது. மனிதன்
படைப்பாளனாகிய அல்லாஹ்விற்கு முற்றிலும்
அடிப்பணிவது, மற்றொன்று சாந்தி ,அமைதி நிம்மதி என்று பொருள்,அதாவது அல்லாஹ்விற்கு
அடிப்பணிவதன் மூலம் இவற்றையெல்லாம் பெற முடியும் என்பது கருத்தாகும்.
இவ்வுலகில் ஏறத்தாழ பதினான்கு நூற்றாண்டிற்கு முன்பு முழு உலகும் நேர்வழியைப்
புறக்கணித்து வழி கேட்டின் பக்கம் போய் கொண்டிருந்த தருணத்தில்தான், மனிதர்கள்
படைத்தவனுக்கு அடிபணிய வேண்டியதிருக்க அதைப் புறக்கணித்து விட்டு மனோ
இச்சைகளுக்கும், மனிதர்களுக்கும் அடிப் பணிந்து கொண்டிருந்த சமயத்தில்தான்,மனித
குலம் தங்களுக்குள் அன்பும் ,இரக்கமும், சகிப்புத்தன்மையும் மன்னிப்பு போன்றவை
கொண்டு வாழ வேண்டியதிருக்க வெறுப்பு என்னும் நெருப்பால் பேரரசுகள் தங்களுக்குள்
போரிட்டுக் கொண்டும்,சாமான்ய மனிதர்கள்
தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் இருந்த நேரத்தில்தான் இஸ்லாம் தோன்றியது .இறுதியாக
இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. அடிப் பணிதல் ஒரே ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கே என்பதன் மூலம் மனிதர்களை
ஒரே நேர்க் கோட்டில் கொண்டு வந்தது. அமைதி, சாந்தி, சமாதானம் ஆகியவற்றினைக்
கொண்டு கொண்டு அனைவர்களையும் ஒன்றே குலம்
ஒரே சமுதாயமாக நடைமுறையில் ஆக்கியது.
சகோதரர்களே! ரமளானில் தொழுகை,நோன்பு,மற்றும் உம்ரா ஆகிய வணக்க வழிபாடுகள்
மட்டுமல்ல, ஈகை ,அன்பு ,விட்டுக் கொடுத்தல் ,சகிப்புத்தன்மை ஆகிய அழகிய நற்காரியங்களையும்,நடைமுறைகளையும் நாம் மேற்கொண்டோம். இவையெல்லாம் குறிப்பிட்ட
காலத்திற்கு மட்டும் பின் பற்றப் பட வேண்டிய சீசன்கால பேஷன்கள் அல்ல. நம் வாழ்வின்
ஒவ்வொரு தருணமும் பின்பற்ற வேண்டிய விஷயங்களாகும். நமது அன்பு,ஈகை, பொறுமை,
விட்டுக் கொடுத்தல்,சகிப்புத்தன்மை என்பது நம்மை சார்ந்து இருப்பவர்கள் மீது
மட்டுமல்ல,அல்லது நமக்கு வேண்டியப் பட்டவர்களுக்கு மட்டுமல்ல அவை மனித
பிரபஞ்சத்தின் அனைத்து மக்களுக்கும் நமக்கு தெரிந்தவர்கள் , தெரியாதவர்கள்,
வெறுப்பவர்கள், நம் மீது அன்பு காட்ட மறுப்பவர்கள் என அனைவர் மீதும் அன்புக் காட்ட
வேண்டியது, அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாக இருக்கிறது, எந்த வேறுபாடும் இன்றி
மனித குலத்தில் அனைத்து மக்களுக்கும் நமது அன்பில், ஈகையில் அவர்களுக்கு உரிமை
இருக்கிறது.
பரிசுத்தக் குர்ஆன் இப்படித்தான் தொடங்குகிறது. “அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்பாளனுமாகிய
அல்லாஹ்வின் பெயரால்” என்று. நபி (ஸல்) அவர்கள் பற்றி குர்ஆன் இப்படி அறிமுகப்
படுத்துகிறது இவ்வுலகம் முழுவதற்கும் உம்மை அருளாக அனுப்பி இருக்கிறோம் என்று.
மேலும் விசுவாசிகள் எப்படி இருப்பார்கள்
என்றால் கருணை உடையவர்களாக இருப்பார்கள்
என்று குர்ஆன் கூறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் “மனிதர்கள் மீது அன்பு செலுத்தாதவர்கள் மீது அல்லாஹ்வும்
அன்பு செலுத்த மாட்டான் என்று சொன்னார்கள்.அன்பு என்பது வார்த்தைகளால் அல்ல அவை
நடை முறையில் பின் பற்றப் பட வேண்டியதாகும்.
கருணை காட்டுதல் ,உதவுதல், மன்னித்தல், ஈதல், என்று பண்புகளை உள்ளடக்கியதுதான்
அன்பு அதுதான் இரக்கம்.
பல நூற்றாண்டுகளாக பகையாக
இருந்தவர்களை நபி அவர்கள் சரியாக இருபத்து
மூன்றே ஆண்டுகளில் அன்பிற்குரிய சகோதரர்களாக மாற்றினார்கள். இவ்வுலகில் உள்ள
செல்வங்கள் அனைத்தையும் செலவிட்டாலும் இந்த அன்பை ஏற்ப் படுத்தி விட முடியாது என்று
குர்ஆன் சொல்கிறது.
பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர்கள் பிள்ளைகளிடமும், மனைவி கணவனிடமும் கணவன்
மனைவியிடமும் , நண்பன் தனது சக நண்பனிடமும், ஆதரவை இழந்தவர்கள் சமூகத்திடமும்,
இப்படி உலகம் அன்பினை அடுத்தவர்களிடம் எதிர்ப் பார்க்கிறது. ஏன் பிறரை
வெறுப்பவர்கள் கூட மற்றவர்களிடம் அன்பை எதிர்ப் பார்க்கிறார்கள். இஸ்லாம் அன்பு
மார்க்கம் என்று வார்த்தை பூச்சுக்களால் வர்ணனை செய்யும் மார்க்கம் அல்ல. அது நடை முறை செயல் பாட்டின்
மூலம் மனித சமூகத்தில் அன்பு,கருணை கொண்டு திகழ அறிவுரை பகர்ந்து இருக்கிறது.அது
நபி (ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் தோழர்கள் மூலம் நடைமுறையும் படுத்தப் பட்டு
இருக்கிறது.
பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அன்புக் காட்ட வேண்டும்.பிள்ளைகளை வறுமைக்கு
பயந்து கொல்லக் கூடாது என்று சொல்கிறது .அவர்களுக்கு அழகிய நற்குணங்கள் கற்றுத்
தருவது தர்மத்திற்கு ஒப்பானது. முக்கியமாக பெண் குழந்தைகளை கொலை செய்வதை குர்ஆன்
கண்டிக்கிறது .நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் பெண் குழந்தை பெறுவது பரக்கத்,
பாக்கியம் ,யார் பெண் குழந்தைப் பெற்று,அதற்கு கல்வி மற்றும் ஒழுக்கத்தை கற்றுக்
கொடுத்து திருமணம் செய்து வைப்பாரோ அவரும் நானும் ஒன்றாக சுவனத்தில் இருப்போம்
என்றார்கள் நபியவர்கள் .
குர்ஆனில் அல்லாஹ் எனக்கும் நன்றி செலுத்து உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து
என்றுக் கூறுகிறான் . பெற்றோருக்கு பணிவு என்னும் இறக்கையை தாழ்த்துங்கள் என்றும்
அவர்களுக்காக என் இறைவா சிறுவயதில் என் பெற்றோர் என் மீது கருணை காட்டியது போல
நீயும் அவர்கள் மீது கருணை காட்டுவாயாக என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.தாயின்
பாதத்தின் கீழ் சுவனம் உண்டு, தந்தையின் பொருத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தம்
இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி உள்ளார்கள். இன்று சுமந்தவர்களே
சுமையாக கருதப் பட்டு ஒதுக்கப் பட்டு முதியோர் இல்லங்களில் தள்ளும் பிள்ளைகள்,
வீடுகளில் கூட எப்போது வீட்டை விட்டு போவார்கள் என கேட்காமல் வெறுப்பை மனதில்
வைத்துக் கொண்டு மிகவும் இழிவாக பெற்றோரை நடத்தும் பிள்ளைகள் கொண்ட அன்பே இல்லாத
புதிய தலை முறை வளர்ந்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமான விஷயமாகும்.
குர்ஆன் சொல்வதுப் போல கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையாக இருக்க வேண்டும்.
அதாவது அவ்விருவரும் ஒருவருக்கொருவர் அரவணைப்பாக,அன்பாக ஆதரவாக, விட்டுக் கொடுத்து
வாழ வேண்டும்.
நான் ,எனது பெற்றோர், பிள்ளைகள், உறவினர் மட்டுமல்ல.இது அல்லாத பொதுவான
சமூகமும் இருக்கிறது.அதில் நமக்கு கிடைத்த வசதி, ஆதரவு மற்றும் அன்பு கிடைக்காத
மக்கள் இவ்வுலகில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். நமக்கு கிடைத்தது அவர்களுக்கு
கிடைக்க வில்லை. அவற்றை கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.அல்லாஹ் கூறுகிறான்
அல்லாஹ் உனக்கு உதவியது போல நீ பிறருக்கு உதவு. நபியவர்கள் மறுமையில்
அல்லாஹ்விற்கும் மனிதனுக்கும் நடக்கும் இடையே நடக்கும் ஒரு சம்பாசனையை
குறிப்பிட்டார்கள் அதாவது ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை
உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?" என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ
அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான்
எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?" என்று கேட்பான்.
அதற்கு அல்லாஹ், "உனக்குத்
தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன்
நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்:
அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்"
என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை" என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை" என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க,உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?" என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்" என்று கூறுவான்.
இஸ்லாம் அன்பின் மார்க்கம். மனித பிரபஞ்சத்தில் ஒவ்வொருவரும் எந்தக்
காரணத்தைக் கொண்டும் பாதிக்கப் படக்கூடாது. பரிதவிக்க கூடாது. அநியாயமாக கொல்லப்
படக் கூடாது என்பதில் மிகவும் அக்கறை கொண்ட மார்க்கம். எனவேதான் பரிசுத்தக்
குர்ஆன் கூறுகிறது. யார் ஒரு ஆத்மாவை அநியாயமாக கொலை செய்வாரோ அவர் உலகில்
அனைவரையும் கொலை செய்தவரைப் போலாவர். யார் ஒரு ஆத்மாவை வாழ வைப்பாரோ உலகில் உள்ள
அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்.
உறவுகள் உயிரோடு இருந்தும் உதவாமல்
ஆதரிக்காமல் நிராதரவாக விடப் பட்டவர்கள் நிலை மிகவும் சமூகத்தில் பரிதாபமாக உள்ளது
.இவர்கள் நிலையே இப்படி என்றால் இன்று சமூகத்தில் விதவைகள்,அனாதைகள்,
ஆதரவற்றவர்கள் நிலை? சொல்ல வேண்டியதே இல்லை.
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் உறவை துண்டிப்பவன் சுவனம் புக மாட்டான் என்று.
உன்னை வெட்டி வாழ்பவரிடமும் ஒட்டி வாழ் என்றார்கள்.சொந்தத்திற்கு உதவுதல்தான்
மற்றவர்க்கு உதவுவதை விட சிறப்பிற்குரியது என்று நன்மை அதிகம் உள்ளது என்று
அதிகமான நபி மொழிகளில் வந்துள்ளது.
அதேப் போன்று சமூகத்தில் அனாதைகள் மற்றும் விதவைகளுக்கு உதவுவது அவர்கள்
வாழ்வினை ஒளிரச் செய்வது தனி மனிதன் முதல் மற்றும் சமூகம் வரை கடமையாகும். நபி
(ஸல்) அவர்கள் சொன்னார்கள் யார் விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் உதவுவாரோ அவர் பகல்
முழுவதும் நோன்பு நோற்றவர் போன்றும் இரவெல்லாம் நின்று வணங்கியவர் போன்றும் ஆவார்
என்றார்கள். பெருநாளன்று தெருவோரத்தில் அழுதுக் கொண்டிருந்த அனாதை சிறுவனை
நபியவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று இன்றிலிருந்து ஆயிஷாவே உனக்குத் தாய்
என்று அரவணைத்ததை வரலாறு பதிவு செய்துள்ளது.
அன்பின் அழகிய பண்புதான் உதவுதல் .அதன் மற்றொரு பண்பு மன்னித்தல் அல்லாஹ்
குர்ஆனில் கேட்கிறான்,நீங்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பை எதிர்ப்
பார்க்கிறீர்கள்.ஆனால் நீங்கள் மக்களை மன்னிக்க மாட்டீர்களா என்று. நபியவர்கள்
தங்களது சிறிய தந்தையை படுகொலை செய்த வஹ்ஷி என்பவரை நபியவர்கள் மன்னித்தார்கள்.தமது
மகள் ஆயிஷா (ரலி) அவர்கள் மீது விபச்சார குற்றம் சாட்டியவர்களுடன் சேர்ந்துக்
கொண்ட மிஸ்தஹ் என்ற தனது உதவியால்
வாழ்க்கையை நடத்திய உறவினரை அபூபக்கர் (ரலி) அவர்கள் மன்னித்து பின்னரும் கூட உதவினார்கள்.
தமக்கு உணவில் விஷம் கலந்துக் கொடுத்த வேலைக் காரப் பெண்மணியை இஸ்லாமிய குடியரசின்
ஐந்தாம் ஆட்சி தலைவரான உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் மன்னித்தார்கள் .அந்த விஷத்தின் காரணமாகவே இவ்வுலகை விட்டு அவர்கள்
விடைப் பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும். இன்று இதை
விடவெல்லாம் அநீதியோ,தொந்தரவோ யாரும் நமக்கு அளிக்க வில்லை.எனினும் வார்த்தைகளை
மனதில் வைத்து சில சில்லறை விசயங்களை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை பழி வாங்க
துடிக்கிறோம். முடியா விட்டாலும் அவர்கள் வாழ்வில் எதுவும் துன்பம் நடந்தால் அதில்
நாம் இன்பம் காண்கிறோம்.
ரமலானின் முக்கிய நோக்கம் குறித்து பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது.மனிதர்கள்
இறையச்சம் உடையவர்களாக ஆக வேண்டும்.இறையச்சம் என்றால் மனிதர்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்சி தீமைகளில் இருந்து தவிர்ந்து, நன்மையான விசயங்களை செய்ய வேண்டும் என்பதே .
யார் பொய்யான பேச்சுக்களையும் ,நடவடிக்கைளையும் விட்டு விலக வில்லையோ அவர்
காலையிலிருந்து மாலை வரை பசித்திருப்பதன் மூலமோ அல்லது தாகித்திருப்பதன் மூலமோ
எவ்வித பயனும் கிடையாது.’ அதாவது அவர்
நோன்பு நோற்பதால் எந்த நன்மையும் கிடையாது .(புகாரி)
இன்று எங்கும் தீமைகள் ஆல மர
விருட்சம் போன்று பரவிக் கிடக்கிறது. இன்று சமூகத்தில் வரதட்சிணை
தலைவிரித்தாடுகிறது.இதனால் நிறைய சகோதரிகள் வாழ்க்கை திருமண கனவுகள் கானல் நீராக
இருக்கிறது. திருமணத்திற்கு பின்னர் பெண்களின் வாழ்க்கை கண்ணில் நீராக
இருக்கிறது.எனவே குர்ஆன் சொல்லுவது போல பெண்களுக்கு மஹர் அள்ளிக் கொடுத்து
திருமணம் செய்ய வேண்டும். இளைஞர்கள், பெற்றோர்கள், சமூகம் என அனைவருக்கும் இதில்
பொறுப்புணர்வு அடங்கி இருக்கிறது.
அதே போன்று இளைஞர்கள் மதுவின் பக்கம் போய்
கொண்டிருக்கிறார்கள். மதுவை சுவைப்பவன் சுவனத்தின் வாடையைக் கூட அடைய முடியாது.
இது அல்லாஹ்வுக்கு இணை வைத்தலுக்கு அடுத்த நிலையில் உள்ள மிகப் பெரிய
பாவமாகும்.மது மட்டுமல்ல போதைத் தரக் கூடிய எதுவாக இருந்தாலும் அவை ஹராம் –
விலக்கப் பட்டது எனவே அது பான் போன்று
பாக்கெட்டுக்களில் இருந்தாலும், ஒயினாக பாட்டில்களில் இருந்தாலும் அவற்றினை
விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் .
உங்களை நீங்களே அழிவின் பக்கம் கொண்டு போகாதீர்கள் என்ற குர்ஆனின் வசன
அடிப்படையில் புகைப் பிடித்தலை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.
கந்து வட்டியாக இருந்தாலும் அவை எந்த வட்டியாக இருந்தாலும் அவற்றை விட்டும்
விலகிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் தர்மத்தில் அபிவிருத்தி வைத்துள்ளான். வட்டியில்
அழிவை வைத்துள்ளான் என்கிறது குர்ஆன். வசதியானவர்கள் அல்லது சமூக அமைப்புகள்
ஏழைகளுக்கு வட்டியில்லா கடனுக்கு ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
விபச்சாரத்தில் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று குர்ஆன் சொல்கிறது.எனவே
அவற்றுக்கு அழைத்துச் செல்லும் ஆபாசமான பேச்சுக்கள் மற்றும் செயல்களை விட்டும்
நாம் விலகி இருக்க வேண்டும்.
இன்றைய விளம்பரங்கள், சினிமா மற்றும் ஓபன் கலாச்சாரங்கள் இளைய தலைமுறையின்
பெண்களையும் ஆண்களையும் பெற்று, பேச வைத்து நடக்க வைத்து பாலூட்டி பராமரித்து
படிக்க வைத்த பெற்றோர்களையும் காதல் என்ற பெயரில் கதற விட்டு உதறித் தள்ளி செல்லக்
காரணமாக்கி விட்டது. தன்னை ஆசைக்கு அழைத்த மிஸ்ரின் மந்திரி மனைவியிடம் இருந்து
தன்னை காத்து சிறை வாழ்க்கையையே
தேர்ந்தெடுத்துக் கொண்ட யூசுப் (அலை) அவர்களின் வாழ்க்கை இளைஞர்கள் படிக்க
வேண்டிய படிப்பினை பெற வேண்டிய விஷயமாகும். அற்புதத்தால் தந்தை இன்றி குழந்தை
பெற்ற மர்யம் (அலை ) அவர்கள் அப்போதும் கூட சமூகம் தன்னை தவறாக பேசுமோ என்று
வருத்தப் பட்ட விஷயமும் இங்கு கவனிக்கத் தக்க விஷயமாகும். தனிமையில் அந்நிய பெண்
அந்நிய ஆணுடன் சந்திப்பு, தேவையற்ற தொலைப் பேசி உரையாடல்கள், திரைப் படங்களை நிஜ
வாழ்க்கைக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்வது ஆகியன மூலம் காதல் என்ற பெயரில்
ஆண்களும் பெண்களும் நெறிதவறிப் போதல், வழி தவறிப் போதல் நிதர்சனமான அன்றாட நிகழ்வுகளாகும். நாம்
கைப்பிடிக்கும் ஒரு உறவின் மூலம் நமக்கு கைகொடுத்த உறவுகள் அறுந்துப் போய் விடக்
கூடாது.நமது நலனில் உலகில் அக்கறை கொண்டவர்களில் பெற்றோர்கள்தான் முதன்மையானவர்
என்பதை மறுக்க முடியாது. தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் பிள்ளைகள் நினைவிலேயே
கழிக்கும் பெற்றோர், தங்கள் வாழ்வின் உழைப்பின் வியர்வை சிந்தி தம்
பிள்ளைகளுக்காகவே உழைக்கும் பெற்றோர்
தங்கள் பிள்ளைகளின் துணைகளையும் தேர்ந்தெடுத்து கொடுக்க உரிமை அல்ல,
.கடமைப் பட்டவர்கள்.அப்போது பிள்ளைகள் அவர்களுக்கு விருப்பம் தெரிவிக்கவோ மறுக்கவோ
உரிமை அளித்துள்ளது.அதே நேரத்தில் தனியாக பெற்றோரை விட்டு விட்டு தாங்களே
விருப்பப் பட்டோரை தேர்ந்தெடுத்து போவேன் என்பது குடும்பத்தின் நிம்மதிக்கு
குந்தகம் விளைவிப்பதாக அமையும்.இதற்கு
போகக் கூடாது என்பதை விட அதன் பக்கம் செல்லும் காரணங்கள் பக்கமே நெருங்கக்
கூடாது என்பதன் மூலம்தான் இதனை தடுக்க முடியும் .
இன்றைய தினம் மகிழ்ச்சியான தினம். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிக் காட்டியதற்காக
அவனை நீங்கள் நினைவு கூறுங்கள் என்று
குர்ஆன் கூறுகிறது. இன்று நாம் அடையும் உண்மையான மகிழ்ச்சி என்னவென்றால் நாம்
சேர்த்துள்ள பணமோ,இன்று உடுத்தும் புது உடையோ அல்லது சாப்பிடும் சுவையான உணவோ அல்ல
நாம் பெற்ற நேர்வழிதான். குர்ஆன் சொல்கிறது . “அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை)
விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர்
கூறும்.(சூரா யூனுஸ் :58)
எனவே இந்த நேர்வழியில் என்றும் நிலைத்திருக்கவும், இந்த செய்தியை மனித
குலத்துக்கு எத்தி வைக்கவும் நாம் இன்று உறுதி பூணுவோமாக. இந்த நேர்வழி ரப்புக்கும்
வாஹிதா உங்கள் இறைவன் ஒருவனே என்று வணங்கி வழிப் பட மட்டுமல்ல.மனித குலம்
அனைத்தும் நிறம், மொழி ,கோத்திரம் பதவி பட்டம் ஆகிய அனைத்தையும் கடந்து உம்மத்தன்
வாஹிதா- ஒரே சமுதாயம் அந்த சமூகத்தில்
மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப்
போன்று சமமானவர்கள் என்றார்கள் நபியவர்கள்.
அல்லாஹ்வின் மீது பயபக்திக் கொண்டு
அழகிய நற்காரியங்களைச் செய்தவர்களே அந்த சமுதாயத்தில் அல்லாஹ்வின் முன்
உயர்ந்தவர்களாக இருப்பார்கள். மனித சமூகத்திலும் அவர்களே சிறந்த மக்களாக
இருப்பார்கள்.
கடைசியாக நபித்தோழர்கள் வாழ்த்தியதுப் போல “தகப்பலல்லாஹு மின்னா வ
மின்கும்.உங்களையும் நம்மையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக என்று என்று நான் வாழ்த்துகிறேன்.
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
கருத்துகள்
கருத்துரையிடுக