அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் கணக்கிட முடியாது !
திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com
அல்லாஹ் நமக்கு
மிகுந்த கிருபை செய்திருக்கிறான் .அருள் மழை பொழிந்திருக்கிறான்.அளவிட முடியா
அவனின் அருளுக்கு நன்றி பகர வேண்டியதிருக்க நாம் எப்போது பார்த்தாலும்
மற்றவர்களுடன் நம் வாழ்க்கையை ஒப்பிட்டு அல்லது நமக்கு வரும் சிற்சில
பிரச்சினைகளுக்கெல்லாம் அழுது ஓலமிட்டு நம் சுகமான வாழ்க்கையை சோகமாக்கி
கொள்கிறோம் .
நாம் இன்று உலகில்
உயிருடன் வாழ்கிறோம்.நம் வயதை உடைய எவ்வளவோ பேர் இவ்வுலகில் மறைந்து
விட்டார்கள்.நாம் பார்த்து பழகிய சிலர் சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். நாம்
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் அருளே.அவை நமக்கு நன்மைகள் செய்திட
அளிக்கப் பட்டுள்ள அவகாசமாகும்.
இன்று நாம் மூச்சு
விடுகிறோம்.மருத்துவமனைகளில் அவசர பிரிவுகளில் மூச்சு விட முடியாமல் கருவிகளின்
துணை கொண்டு மூச்சு விடக் கூடியவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.
நமது இதயம் நன்றாக
செயல் படுகிறது.பல இலட்சம் செலவில் பேஸ்மேக்கர் இதயத்தில் பொருத்தி ஒவ்வொரு
பொழுதும் மரண பயத்துடன் வாழ்பவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.
நாம் பெற்றோர்களுடன்
இருக்கிறோம்.பெற்றோரை இழந்து
மற்றவர்களாலும் ஒதுக்கப் பட்டு அனாதைகளாய் வாழ்பவர்களும் எவ்வளவோ பேர்
இருக்கின்றனர்.
நாம் பாதுகாப்பாக
நமது வீட்டில் இருக்கிறோம்.ஆனால் சொந்த நாடுகளிலேயே வீடுகளை விட்டு விரட்டப்பட்டு,
உறவுகள் படுகொலை செய்யப்பட்டு அகதி
முகாம்களில் நாளும் அவதிப்படும் மக்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.
நாம் மூன்று நேரம்
நன்றாக சாப்பிடுகிறோம்.சாப்பாட்டில் ருசி இல்லை என குறைப் படுகிறோம்.ஒரு நேர
உணவுக்காக நமது வீட்டின் வாயிலில் சிலர் கையேந்த பார்க்கிறோம்.நாட்டில் பல கோடி
மக்கள் மூன்று நேரம்,இரண்டு நேரம் ஏன் ஒரு நேரம் கூடம் உணவில்லாமல் பசியோடு
படுக்கைக்குப் போவதாக செய்தியும் படிக்கிறோம்.
நாம் திருமணமாகி இருக்கிறோம்.ஆனால்
திருமண வயதை கடந்தும் இன்னும் மணமாகாமல் தம்மை கைப்பிடிக்க வருபவரின் வருகை
எதிர்ப் பார்த்து பார்த்து முடியே நரைத்து முடிவில்லா சோகத்துடன் வாழ்பவர்களும்
இவ்வுலகில் இருக்கப் பார்க்கிறோம்.
நாம் நோய்
நொடியில்லாமல் இருக்கிறோம்.சிறு நீரக பாதிப்பு,இதய வியாதி,புற்றுநோய் நோய் என
மரணத்துக்கும் வாழ்வுக்கும் இடையே போராடும் மக்களும் இருக்க காண்கிறோம்.
நாம் புத்தி
சுவாதீனமாக இருக்கிறோம்,மன நிலை பாதிக்கப் பட்டு,அல்லது மன நலம் குன்றிய
நிலையிலேயே பிறந்து தெருக்களிலும்,கை விலங்கிடப்பட்டு
தர்ஹாக்களிலும்,மருத்துவமனைகளிலும் இருக்கும் மக்களையும் நாம் பார்க்கிறோம்.
நாம் நன்றாக
பார்க்கிறோம்.ஆனால் கண் தெரியாமல் வாழ்வே இருட்டாக அடுத்தவரின் கைப் பிடித்தே
வாழ்க்கையை நடத்தும் மக்களை பார்க்கிறோம்.
நாம்
நடக்கிறோம்,நடக்க முடியாமல் மூன்று சக்கர வண்டிகளில்,அடுத்தவர்களின் முதுகுகளில்
அவையும் அற்றவர்கள் தெருக்களில் கால்களை இழுத்துக்கொண்டு தோலெல்லாம் கிழிந்து
ரத்தம் போக காண்கிறோம்.
நாம் நமது வீடுகளில்
நன்றாக இருக்கிறோம்.பேச்சுக்கள் சில ஒரு மனிதர் மற்றவரை கோபப் படுத்தி
இருக்கலாம்.ஒருவர் மற்றவரை புரியாததால் தவறாக எண்ணம் கொண்டிருக்கலாம்.ஆனால்
எத்தனையோ வீடுகளில் வரதட்சிணை கொடுமைகள்,கடும் வேலைகள்,உணவு கொடுக்காமல்
சித்திரவதை, பேசினாலே அடி உதை ,ஆம் அந்த வீடுகளிலும் ஒரு நாள் அவை மாறும் என்ற
நம்பிக்கையுடன் மக்கள் வாழ்கிறார்கள்.
ஆம் அல்லாஹ்வின்
அருளை கணக்கிடவே முடியாது.ஆம் பரிசுத்தக் குர்ஆன் கூறுகிறது “அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள்
கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க
அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும்
இருக்கின்றான். (அல்குர்ஆன்: 14:34)
கருத்துகள்
கருத்துரையிடுக