குதூகல குடும்பம்!


                                                                 மு.அ. அபுல் அமீன் (தினமணி ,12/06/2014)

குடும்பம் என்பது கணவன் மனைவியிலிருந்து துவங்குவதைத் தூய குர்ஆனின் 30-21 வது வசனம் ""நீங்கள் சேர்ந்து வாழக் கூடிய உங்கள் மனைவிகளை உங்களிடமிருந்தே உற்பத்தி செய்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டு பண்ணியிருப்பது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்று. சிந்திப்போருக்குச் சிறந்த சான்றுகள் இதில் உள்ளன'' என்று விளக்குகிறது.

குடும்ப வாழ்வில் நிம்மதி நிலவ வேண்டும். நிம்மதி திருப்தியிலிருந்து தோன்றுவது. திருப்தி நிறைவிலிருந்து நிலை பெறுவது. இதனாலேயே இறுதி நபி (ஸல்) அவர்கள், ""உலகம் இன்பமானது. அதில் தலை சிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி'' என்றார்கள். (நூல்: முஸ்லிம்)

முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அவர்களைத் திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்திடுமாறு பகர்ந்தார்கள் இகத்தைத் திருத்திய இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள். அப்படி பார்ப்பது நேசத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துரைத்தார்கள். ஏந்தல் நபி (ஸல்) அவர்கள்.

இந்த நேசமே இல்லறத்தை நல்லறமாக்கி குடும்ப வாழ்வில் சுமுகமாக, சுகமாக, சிரமங்களைச் சகித்து, உறவைப் பலப்படுத்தி உற்சாகமாக வாழ உதவும்.

இதனையே திருக்குர்ஆனின் 4-1 வது வசனம் வலியுறுத்துகிறது. ""மனிதர்களே! அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து ஆண்கள் பெண்கள் என பலரை இப்பூமியில் பரப்பினான்.

ஆகவே அத்தகைய அல்லாஹ்விற்கு நீங்கள் பயந்து நடந்திடுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக் கேட்டு கொள்கிறீர்கள். இன்னும் அல்லாஹ்விற்குப் பயந்து இரத்த கலப்பு உறவினர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.''

பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அப்துல்லாஹ் (ரலி) உஸ்மான் இப்னு மள்வூன் (ரலி) ஆகியோரை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கண்டித்து இஸ்லாத்தில் துறவறம் இல்லை என்றும் இல்லறத்தைப் பேணி மனைவி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைக் கட்டாயம் நிறைவேற்றி சுற்றி சூழ இருப்போருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் உரித்தான கடமைகளைச் சரியாக செய்யும்படி செப்பியதைப் புகாரி, முஸ்லிம் நூற்களில் காணலாம்.

""உங்களிலிருந்து உங்கள் மனைவிகளை அல்லாஹ் படைக்கிறான். உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன் பேத்திகளையும் உற்பத்தி செய்து உங்களுக்கு உணவுகளைப் புகட்டுகிறான்.'' என்ற இறைமறை குர்ஆனின் 16-72 வது வசனத்தை வாசித்தறிந்து உணவு தயாரிக்க தாமதமாவதற்கும் சுவை குறைவிற்கும் மனைவி மக்களைச் சுட்டெரிக்கும் சொற்களால் சாடக் கூடாது. அவர்கள் முகம் வாடக் கூடாது. வீட்டில் விருந்தினர்கள் முன்னிலையில் குடும்பத்தினரைக் குறை சொல்ல கூடாது. குறைகளைத் தனிமையில் தன்மையாக மென்மையாக எடுத்துரைத்துத் திருத்த வேண்டும். பொருத்தமான திருத்தம் நிச்சயம் நிகழும்.

பெற்றோர் நோகாது பற்றி பிடித்த மனைவியும் மனந்திரியாது பிள்ளைகளும் பேதுறாது இனியன இயம்பி கனிவாய் நடந்தால் குடும்பத்தில் குதூகலம் குறையவே குறையாது. கூட்டு குடும்பத்தால் நாட்டுக்கும் நன்மை விளையும்.

நிதியைக் கணவன் ஏற்றால் வீட்டு நிர்வாகத்தை விளக்கேற்ற வந்த மனைவி பளிச்சிட செய்ய வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் சொற் கேட்டு பணிந்து படித்து, அன்பு காட்டும் பெற்றோருக்கு உற்ற நேரத்தில் உதவ வேண்டும். எந்த நிலையிலும் முரண்டு பிடிப்பது குடும்பம் இருண்டிட செய்யும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு முரண்பாட்டை விரண்டோட செய்யும். குடும்ப தேவைக்கேற்ப செலவிடுவதில் கஞ்சத்தனம் கூடாது. மிஞ்சிடும் ஆடம்பரத்திற்காக வீண் செலவு செய்ய கூடாது.

""குடும்பத்தினருக்குச் செய்யும் செலவும் அறச் செயலே. பிற அறங்களை விட இந்த செலவிற்கு மேலான பலன் கிடைக்கும்'' என்ற நபிமொழியை அபூஹீரைரா (ரலி) அபூமஸ்வூதல் பத்ரி (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸôயீ நூற்களில் பதிவாகியுள்ளது.

குடும்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக முதிர்ச்சியுடன் நடக்க வேண்டும். அதிர்ச்சியில்லாது குழந்தைகளும் அரும் பண்புகளைப் பின்பற்றுவர்.

""தன் வருவாய் பெருக விரும்புகிறவர் இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ வேண்டும்'' என்ற நபி மொழியை புகாரி, முஸ்லிம் நூற்கள் நவில்கின்றன.

அதன் பலனை நன்மையை நவில்கிறது திர்மிதீ. ""ஏழைகளுக்குக் கொடுப்பது தர்மம். உறவினர்களுக்குக் கொடுப்பதில் இரு பலன்கள் உண்டு. (1) தர்மத்தின் நன்மை. (2) உறவினருக்கு உதவிய நன்மை.'' உறவினர்களுடன் உளமொன்றி நலம் பெற வாழ்வது குடும்ப எல்லையின் விரிவு.

பெற்றோர், கணவன், மனைவி, மக்கள், மருமக்கள், பேரக்குழந்தைகள் என பெருகிய கூட்டு குடும்பங்கள் சேர்ந்த தெருக்கள்; தெருக்களின் பெருக்கத்தால் உருவான ஊர், ஊர்கள் இணைந்த வட்டம், மாவட்டம், மாநிலம் என்று விரிந்து நாடுகளாயின. நாடுகளின் நல்லிணக்கத்திற்குக் குடும்ப வாழ்வே அடித்தளம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !