நான் புரிந்துக் கொண்ட என் அம்மா


திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் 
thahiruae@gmail.com
                   
என் அம்மாவின் தியாகம் பரிசுத்தமானது.மிகவும் விஷேசமானது .
அம்மா  ஒன்பது பிள்ளைகளை தனது வயிற்றில் சுமந்து அத்தனை பேருக்கும் தனது இரத்தத்தை பாலாக தந்திருக்கிறார்கள்.
அம்மா பிள்ளைகள் தூங்க எத்தனையோ இரவுகள் விழித்திருகிறார்கள் .
அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து எவ்வளவோ ஆண்டுகள் ஒரு நேரம் உணவு ,அதிகம் நீர் மட்டுமே அருந்தி இருக்கிறார்கள் .பிள்ளைகளுக்காக அடுப்பங்கரையில் விறகு அடுப்பில் ஊதி ஊதி அவர்களின் கண்கள் எரிந்து இருக்கிறது.கால் வலிக்க அடுப்பங்கரையில் நின்று இருக்கிறார்கள்.ஆனால் கடைசியில் சமைத்தப் பின் பிள்ளைகளுக்கு உணவைப் பகிர்ந்து விட்டு தாம் பசியோடு போய் படுத்துக் கொள்வார்கள் .
நான் சொல்வேன் எங்கள்  அம்மாவின் வயிறு நிரம்பி இருந்தது நாங்கள் அவர்களின் வயிற்றில் இருந்தக் காலம் மட்டும்தான் .
பசியோடு எத்தனையோ நாட்கள் இருந்த அம்மா ஒரு நேரம் கூட தம் பிள்ளைகளை பசியுடன் விட்டு விட வில்லை .சமைத்து கொடுத்தார்கள் .அத்தனை பிள்ளைகளுக்கும் சமமாக கொடுத்தார்கள் .
அம்மா மிகவும் எளிமையாகவே இருப்பார்கள் .எப்போதும் காட்டன் சேலைதான் அணிவார்கள் .அதனையும் கிழிய கிழிய ஓட்டுப் போட்டு அணிந்து கொள்வார்கள்.அவர்களிடம் பாலியஸ்டர் சேலைகளும் இருந்தது.அதனை ஒரு தடவை அணிந்து இருப்ப்பார்கள் அவர்களது புதிய சேலைகளை தனது அன்பு மகள்களுக்கு ஆடை தைத்துக் கொடுத்தார்கள்.
அம்மா  படித்தது நான்காம் வகுப்பு வரைதான் .ஆனால் தனது  அனைத்துப் பிள்ளைகளும் கல்லூரி வரை சென்று படிக்க அம்மாவின் தியாகம் மிகவும் அபரிதமானது.சேர்த்து வைத்த காசில் பிள்ளைகள் படிக்க பரீட்சை பணம் கட்டக் கொடுத்தார்கள்.பிள்ளைகள் நாங்கள் பள்ளிகூடத்தில் பரிசு ,மற்றும் ரேங்க் சீட் ,மற்றும் கல்லூரியில் டிகிரி சர்டிபிகேட் வாங்கி வந்து அம்மாவிடம் கொடுக்கும் போது அம்மா அதனை வாங்கி பார்க்கும் போது  அம்மாவின் முகம் நான் பார்ப்பேன்.அம்மா அதனை தானே வாங்கியதுப் போல சந்தோசமாக பார்ப்பார்கள்.பள்ளியில் பாராட்டியதை சொல்லும்போது அம்மா உன்னிப்பாக  என்னை கவனிப்பார்கள். அவர்களின் கண்கள் மகிழ்ச்சியால் மின்னும் .தம் பிள்ளைகள் மீது கண்ணேறு ஏற்ப்பட்டு விடுமோ என்று அவர்கள் மனம் எண்ணும்.
அம்மா  கல்யாணம் காட்சிகள் என்று எதற்கும் வெளியே சென்றதில்லை.
அம்மாவே ஒரு தடவை காரணமும் சொன்னார்கள்  கல்யாணங்களில் பெரும்பாலும் பெண்கள் நகைகள் மற்றும் பட்டு புடவை என அணிந்து வருவார்கள் .ஒருவர் மற்றவரிடமும் அதைதான் நோக்குவார்கள்.கடைசியில் நாம் அவர்களை பார்த்து நம்முடைய பொருளாதரத்தில் குறை இருக்க பார்த்து அல்லாஹ்வின் அருளில் குறைவாக எண்ணுவோம்.வீட்டில் உங்கள் அத்தாவிடமும் அது இது என்று ஊரில் பார்ப்பதெல்லாம் வாங்கித் தர வேண்டும் என்றுக் கேட்டால் உங்கள் படிப்பு மற்றும் பராமரிப்பு என்னாவது ?என்று .
இரண்டு அறைகள் கொண்ட அந்த சிறிய வீட்டில் தமக்குத்தாமே சிறையாக தேர்ந்தெடுத்துக் கொண்டதுப் போல அதில்தான்  இருந்தார்கள் அம்மா  எத்தனையோ ஆண்டுகள் அந்த வீட்டுக்குள்ளேயே பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடந்து இருக்கிறார்கள்.அமர்ந்து இருக்கிறார்கள்.அம்மா ஒரு செருப்பு வைத்து இருந்தார்கள் அந்த செருப்பு மூன்று வருஷம் அல்லது நான்கு வருஷமிருக்கும்.வேறு செருப்பு வாங்க வில்லை .அம்மா வெளியில் போவதே இல்லை என்பதால் அவர்களின் துப்பட்டியைக் கூட  ஒரு தடவை பெரியம்மா அல்லது நன்னிமாவிடம் கொடுத்து விட்டார்கள்.ஒரு தடவை யாரோ மவுத் என நினைக்கிறேன் .அப்போது அவசரத்துக்கு பிறரிடம் அம்மா புர்கா இரவல் வாங்க நேர்ந்தது .
அம்மா மனதில் பட்டதை பேசி விடுவார்கள் .ஆனால் எதையும் மனதில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். சொந்தங்களில் யாரும் சண்டைப் போட்டு பேசாமல் போனால் கூட அவர்களின் வீட்டின் இன்ப துன்பங்களில் அம்மா போய் கலந்து கொள்வார்கள்.மார்க்கத்தில் இல்லாத கிறுக்குத்தனமான நீ என்னை மதிக்க வில்லையா நான் உன்னிடம் பேச மாட்டேன் என்றெல்லாம் அம்மா இருக்க மாட்டார்கள் .
தாம் கஷ்டப் பட்ட காலத்திலும் இன்றும் கூட அம்மா தமது சொந்தங்கள் மற்றும் பிள்ளைகளின் வகுப்புத் தோழர்கள் மற்றும் தோழிகள் கஷ்டம் பட்டு கூறக் கேட்டால் கண்கள் கசிந்து விடுவார்கள் .அவர்கள் இம்மி இம்மியாய் சேர்த்த பணத்தில் இருந்து எடுத்துக் கொடுப்பார்கள் .
அம்மாவிடம்  ஒளிவுமறைவு என்பதெல்லாம் கிடையாது,அடுப்பங்கரையில், துணிக்கு நடுவே என்று பணம் சேமித்து வைத்த அம்மா அவை எங்கே இருக்கிறது என பிள்ளைகளிடமும் தனது அன்பு கணவரிடமும் சொல்லி விடுவார்கள் .காரணமும் சொல்லுவார்கள் நான் சேமித்து வைப்பதே உங்களுக்குத்தான் கடைசியில் திடீரென மரணம் வந்து (அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும் )நான் எங்கு பணம் வைத்து இருக்கிறேன் என்பதை மறைத்து விட்டு சென்றேன் என்றால் அது உங்களுக்கு பயனில்லாமல் போய் விடும் என்று .
அம்மா நாங்கள் மார்க்க்கப் புத்தகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் படிக்க பொறுமையோடு கேட்பார்கள்.அத்தா பள்ளிவாசலில் பயான் பேச  அம்மா அதனை வீட்டில் இருந்து முழுமையாக கேட்பார்கள்.கேட்டப் பின் நாமும் அப்படி இருக்க வேண்டும் எங்களிடம் கூறுவார்கள் .சில தடவை நபி அவர்களின் வரலாறு கூற கேட்க அம்மா கண்ணீர் வடித்து இருக்கிறார்கள் .
அம்மா பித்அத் அனாச்சாரங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை அவை மார்க்கத்தில் இல்லை என்று தெரிந்தப் பின் நியாயப்படுத்த மாட்டார்கள்.அதை ஏற்றுக் கொள்வார்கள் .வீட்டுக்கு பாத்திஹா மற்றும் மவ்லித் என்று வரும் பெண்களிடம் அவை மார்க்கத்தில் இல்லை அதை விட சிறந்தது ஐந்து நேரம் தொழுங்கள் அது சிறந்து என வலியுறுத்தி வந்தார்கள் .
அம்மா பிள்ளைகளுக்கு துணி துவைத்து இருக்கிறார்கள் .ஆனால் தம் துணியை தானே துவைத்துக் கொள்வார்கள்.இன்றும் கூட சில நேரங்களில் தம் மகள்களிடம் துணியை துவைக்க கொடுப்பார்கள்.ஆனால் ஒரு போதும் மருமகள்களை துவைக்க பணித்ததில்லை .
அம்மா .அவர்களும் மனிதர்தானே .சில நேரங்களில் கோபப்பட்டு பேசி இருக்கிறார்கள்.வார்த்தைகள் வருத்தப் பட்டு பேசி இருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் அன்புதான் நிலையானது.அவர்கள் பிள்ளைகள் மீதான் அனுதாபமும் அன்பும் என்றும் நிரந்தரமானது.அவர்களின் சினங்கள் சில மணி நேரங்களில் நீர்த்துப் போகக் கூடியது
எங்கள் அம்மாவின் ரத்தம்,
எங்கள் அம்மாவின் கண்ணீர்
எங்கள் அம்மாவின் வியர்வை
எங்களை உறங்க வைத்து விட்டு எங்கள் அம்மா விழித்திருந்த இரவுகள்
எங்களுக்கு பகிர்ந்து விட்டு பசித்திருந்த அம்மாவின் வயிறு
எங்களை படிக்க அனுப்பி ,பள்ளிவாசலுக்கு தொழுக அனுப்பி,அம்மா மட்டும் தனிமை சிறை போல் வீட்டின் அறைகளில் தன்னந்தனியாக இருந்தது.
தனது புதிய ஆடையை பிள்ளைகளுக்கு துணி தைக்க கொடுத்து விட்டு பழைய காட்டன் ஆடைகளை கிழிந்தாலும் ஓட்டுப் போட்டு அணிந்தது .
இவைதான் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை உருவாக்கி இருக்கிறது .
எமது புன்னகை  எம் அம்மாவின் கண்ணீரில் இருந்து வந்தது
எமது நிம்மதி அம்மாவின் அவதி மிக்க வாழ்க்கையில் இருந்து வந்தது .
அம்மாவின் வயிறுதான் ஒன்பது மாதங்கள் நாங்கள் கருவாகியதில் இருந்து குழந்தையாய் உருவாகியது வரை தங்குமிடமாக இருந்தது .
அம்மாவின் மடி தூங்கவும் அமரவும் ,விளையாடவும் பயன்பட்டது
அம்மாவின் கைகளை சில நேரம் நான் தொட்டுப் பார்ப்பேன் .
அந்த மென்மையான கை எத்தனை கடுமையாக எங்களுக்காக கஷ்டப் பட்டு இருக்கிறது .
அந்த கைகள்தான் நாங்கள் தவழ்ந்து கொண்டிருந்த எங்களை அமர வைத்தது.அந்த கைகள் பிடித்துதான் இவ்வுலகில் முதலில் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம் .
அம்மாவின் திருகைகள்  அருவருப்பு பார்க்காமல் எமது மலஜலங்களை சுத்தப் படுத்தி இருக்கிறது .
அம்மாவின் அருமையான கைகள் எங்களுக்கு உணவு ஊட்டி விட்டிருக்கிறது .ஆம் அம்மா தனது கைகளால் நாங்கள் எத்தனையோ தடவை கீழே விழாமல் தடுத்து இருக்கிறார்கள் .
அம்மா எத்தனையோ தடவை நாங்கள் கீழே விழுந்து வந்த போது தமது கைகளால் ஒத்தடம் கொடுத்து இருக்கிறார்கள்.
அம்மா எங்களுக்கு துணி துவைத்து இருக்கிறார்கள் .
நாங்கள் தூங்கும் போது கொசு மற்றும் ஈ நெருங்காமல் கைகளால் தமது  கைகளால் தடுத்து இருக்கிறார்கள்.
அம்மா அழுகை எங்களுக்கு வந்த போது தமது கைகளால் கண்ணீரை துடைத்து இருக்கிறார்கள்.
காலையில் தூக்கத்தை விட்டு எம்மை தம் கைகளால் எழுப்பி இருக்கிறார்கள் .தூங்கும் போது போர்வை போர்த்தி இருக்கிறார்கள் .

அம்மாவின் கால்கள் எங்களுக்காக அடுப்பங்கரைக்கு நடந்து இருக்கிறது.கீழே நாங்கள் விழும் தருணம் அவர்கள் ஓடி வந்திருக்கிறார்கள்.ஒவ்வொரு தருணமும் அழைக்கும் போதெல்லாம் சோம்பல் பார்க்காமல் எழுந்து வந்திருக்கிறார்கள்.இப்போதெல்லாம் அம்மாவின் கை கால் விரல் நகங்களெல்லாம் வெளிர்ந்து இருக்கிறது.அவை அம்மாவின் ரத்த சோகையை அல்ல தாம் பெத்த பிள்ளைகளுக்கு இரத்தத்தை பாலாக அளித்து பிள்ளைகளுக்காக அடுப்பங்கரையில் தாம் வாழ் நாளின் மிகுதியான நாட்கள் உணவு சமைத்த உடலெல்லாம் வியர்த்து கடைசியில் பகிர்ந்து விட்டு பசியோடு இருந்து உடல் பலஹீனமானதை காட்டுகிறது.
முதன் முதலில் எங்களுக்கு இவ்வுலகில் முத்தம் கொடுத்தது எங்கள் அம்மாவின் உதடுகள்தான்.
நாங்கள் கருப்பாக இருந்தாலும் என் பிள்ளை களையாக  இருக்கிறான் என்று கூறியது அம்மாவின் உதடுகள்தான்
எங்களை யார் திட்டினாலும் முதலில் பரிந்து பேசுவது அம்மாவின் உதடுகள்தான்.
அழுதால் ஆதரவு கூறுவது அம்மாவின் உதடுகள்தான் .
நாங்கள் சிரித்தால் அந்த சிரிப்பை ரசித்து சிரிப்பது அம்மாவின் உதடுகள்தான்.
பிள்ளைகள் பற்றியே பெருமை பேசுவது அம்மாவின் உதடுகள்தான் .
அல்லாஹ்விடம்  எங்கள் நீண்ட ஆயுளுக்கும்,சுகத்துக்கும் எப்போதும் பிரார்த்தனை செய்வது அம்மாவின் உதடுகள்தான் .
எங்கள் பெயரை அதிகமாக உச்சரிப்பது அம்மாவின் உதடுகள்தான்.
எங்கள் அம்மாவின் சேலை தலைப்பு எங்கள் கண்ணீரை துடைத்து இருக்கிறது.
எங்கள் அம்மாவின் சேலைத் தலைப்பு எமது சளியை துடைத்து  இருக்கிறது.
.எமது இரவுகளில் போர்வையாக அம்மாவின் சேலை இருந்து இருக்கிறது.

அல்லாஹ் பரிசுத்தக் குர்ஆனில் கூறுகிறான் எனக்கும் நன்றி செலுத்து ,உன்னுடைய தாய் தந்தையருக்கும் நன்றி செலுத்து என்று .அவனுடய அன்னை அவனை கஷ்டத்தின் மீது கஷ்டப்பட்டு பெற்றெடுத்தாள் .
நபி ஈஸா ( அலை ) கூறியதை குர்ஆன் பதிவு செய்திருக்கிறது.நான் உயிரோடு இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும்,என் தாயாருக்கு நன்மை செய்யுமாறும் ஏவப் பட்டுள்ளேன் என்று .
அதிகமாக ஒருவன் யாரை நேசிக்க வேண்டும் என்று ஒரு தடவை நபி முஹம்மது (ஸல் )அவர்களிடம் கேட்கப் பட்ட போது அவர்கள் கூறினார்கள்.முதல் மூன்று தடவையும் தாய் என்றே சொன்னார்கள்.நான்காம் தடவையே தந்தை என்றார்கள்.
தாய்மை என்ற அம்மாவின்  தூய்மையான உறவு இவ்வுலகில் அவரின் வயிற்றில் இருந்த போது  தொடங்கியது .
இவ்வுலகில் அவர்களின் மடியில் தொடர்ந்தது
மாநபி (ஸல்) அவர்களின் பொன்னுரைப் படி நாளை மறுமையில்அவர்களின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது. ஆம்  தொடரும் இந்த  பரிசுத்த உறவு என்றென்றும்.
சுவனத்தின் படிகளை கூட நான் பார்த்ததில்லை.ஆனால் எனக்குத் தெரியும் என் அம்மாவின் காலடியில்தான் எனக்கு சொர்க்கமே இருக்கிறது என்றது .

அம்மாவின் தியாகங்களுக்கு என்னால் எதை திருப்பித் தர முடியும்.
என் அம்மாவின் ஆசையெல்லாம் அவர்களை ஹஜ்ஜுக்கு  நான் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே ..அல்லாஹ்விடம் எனக்கு அந்த கொடுப்பினையை தருமாறு பிரார்த்திக்கிறேன் .அப்படியே நான் அழைத்துச் செல்வது அவர்களுக்கு மன நிறைவை தரும் ,இன்ஷா அல்லாஹ் .ஆனால் அதன் மூலம் அவர்களுக்கு முழுவதும் அவர்களின் தியாகத்திற்கு நான் முழுமையாக நன்றி பகர்ந்ததாக ஆகுமா என்றால் நிச்சயம் ஆகி விடாது .தம் அம்மாவை முதுகில் சுமந்து வந்து அவர்களின் ஹஜ் கடமை நிறைவேற்றியதை ஒரு நபி தோழர் நபி அவர்களிடம் கூறி இது என் தாய்க்கு நன்றி பகர்ந்ததாக ஆகுமா என்றுக் கேட்ட போது நபி அவர்களின் இது உன் அம்மா உன்னை பெற்ற போது பிரசவ வலி பட்டாரே அதற்க்கு இது ஈடாகாது என்றார்கள் .
ரப்பிர்ஹம் ஹுமா கமா ரப்பயானி சகீரா !
என் இரட்சகனே சிறுவயதில் எங்கள் மீது அவர்கள் கருணை காட்டி வளர்த்ததுப் போல  நீ அவர்கள் மீது கருணை புரிவாயாக !

************************************************************************************************************









கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !