சிந்திக்க சில வரிகள்
முஸ்லிம்களின் சமய உரிமை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அவர்களின் கட்டாய கடமையான தொழுகைக்கு அலுவல் நேரத்தில் நேரம் தர வேண்டியது கம்பெனிகளின் பொறுப்பாளர்களின் கடமையாகும். அந்த நேரத்தை அவர்கள் விரும்பினால் ஆபிஸ் முடிந்தப் பின்போ அல்லது அதற்கு முன்போ சேர்த்து வேலை செய்யுமாறு பணிக்கலாம்.அல்லது விரும்பினால் சலுகையாக விட்டு விடலாம்.
அதே நேரத்தில் முஸ்லிம்களில் சிலர் வேலை நேரத்தில் தொழுவதற்கும், குர்ஆன் ஓதுவதற்கும் அவர்களாக அதிக நேரம் எடுத்துக் கொள்வது விரும்பத் தக்கதல்ல. அது பெரும் ஊதியத்திற்கு பேசப் பட்ட நேரத்தில் குறைவு செய்வதாகும். அவர்கள் குர்ஆனின் பின் வரும் வசனத்தை கவனித்து தங்கள் தவறை சரி செய்துக் கொள்ள வேண்டும்
“அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்”. (குர்ஆன் 83 :2,3) அறிஞர்களின் கருத்துப் படி இந்த வசனம் வியாபாரத்தில் மக்களிடம் குறைவு செய்யும் வியாபாரிகளை மட்டுமல்ல பணிகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு கணக்கிட்டு ஊதியம் பெற்றுக் கொண்டு அதை விட குறைவான நேரத்தில் பணி புரியும் அலுவலர்களையும் குறிக்கும்.
குடும்பத்திற்கு ஹலாலான முறையில் உழைப்பது.இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுக்கு அடுத்து ஆறாவது கடமையாகும். தன் கைகளால் உழைத்து உண்பதை விட சிறந்த உணவு ஏதுமில்லை, ஆகிய நபி மொழிகள் மக்கள் உழைப்பதை வலியுறுத்துகின்றன. மேலும் குர்ஆன் தொழுகை முடிந்து விட்டால் அல்லாஹ்வின் அருளை தேடி பூமியில் பரவிச் செல்லுங்கள் என்று சொல்வதன் மூலம் மனிதர்கள் உழைப்பதை பணி செய்வதை வரவேற்கிறது.
ஒரு நாளைக்கு ஐந்து வேளைக்கு ஒரு நிமிடத்திற்கு பத்து நிமிடம் வீதம் ஐம்பது நிமிடம் மட்டுமே மார்க்கத்தின் தொழுகையும் மீதி உள்ள அதிக நேரங்களில் உழைப்பதையும் மார்க்கம் கட்டளையிடுகிறது. எனவே முஸ்லிம் சகோதரர்களில் சிலர் பணி நேரங்களில் அதிக நேரம் எடுத்து வணக்கங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் அதை இரவு நேரங்களில் நிறை வேற்றலாம். அதை விட்டு விட்டு பணி நேரங்களில் ஓதுவதற்கு மற்றும் தொழ நேரம் எடுத்துக் கொண்டால் அது மற்ற மக்களிடம் இஸ்லாம் உழைப்பிற்கு சரியான முக்கித்துவம் கொடுக்க வில்லை என்றோ அல்லது அதிகம் தொழுபவர்கள் ஓதுபவர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற தவறான உண்டாக்கும்.
- முஹம்மது அபூதாஹிர்
கருத்துகள்
கருத்துரையிடுக