எம்மை வார்த்தப் பள்ளி, வடித்தச் சிற்பிகள்
Ø எனக்கு
அப்போது வயது பதினொன்று .
நான்
இங்கு சேர்ந்த வருடம் தொண்ணூற்று இரண்டு.
Ø ஜாமியுல் பிர்தவ்ஸ் என்ற
ஒரே வரி
அதுதான்
என் முதல் முகவரி!
Ø “மஜ்லிஸுல் உலமா” தொடக்கப்பள்ளியில்
வாசிக்கக் கற்றுக் கொண்டேன்!
“ஜாமியுல் பிர்தவ்ஸ்” மேனிலைப் பள்ளியில்தான்
நான் யோசிக்கக் கற்றுக் கொண்டேன்!
Ø ஜனாப் அப்துர்ரஹ்மான்
அப்போது தலைமை ஆசிரியர் !
அவர் எங்களுக்கு கிடைத்த,
தலைசிறந்த ஆசிரியர்!
Ø எனக்கு வேப்பங்கனியாய் இருந்த கணிதத்தை
வெல்லச் சர்க்கரையாய் போதித்தவர்.
ஆங்கிலப் பாடத்தை
மிகவும் அக்கறையாய் போதித்தவர்.
அவர் பின்னங்களோடு சேர்த்து
நல்லெண்ணங்களை போதித்தவர்!
ஆங்கில மொழியோடு சேர்த்து
அறவழியை கற்பித்தவர்!
Ø ரவ்னக் அலி ஹஜ்ரத்தின் குர்ஆன் கிராஅத்
அது ரம்மியமான ஒலி!
அவர் அழகாய் கற்றுத் தந்தார்
அரபி மொழி!
`
Ø தமிழில்
சங்க காலத்தை விட,
எங்களுக்கு ரொம்ப தெரிந்தது,
எங்க தமிழய்யா சிவ முரளி காலம்தான்!
Ø சிவ பெருமானிடம்
நக்கீரன் எதிர்த்து வாதம் செய்தார்,
சிவ முரளி அய்யாவிடம்
நாங்கள் வாதம் செய்துள்ளோம்
Ø அக்பரை
இரானா பிரதாப் தோற்கடித்தார்
வரலாற்றையே வகுப்பில்
ஆசிரியரே கதையாய் திரிக்கிறார்கள்!
தாஜ்மகால் கட்டியது யார் என்று,
வரலாறு வகுப்பில் கேட்ட போது,
நகைச்சுவையாய் நான் சொன்னேன் “கொத்தனார்” என்று,
திரு.லாரன்ஸ் ஸார் என் காதை திருகினார்கள்!
Ø ஆயிஷா மிஸ்
ஆறாம் வகுப்பில்
அறிவியலும் ஆங்கிலமும்,
தொண்டைத் தண்ணீர் போக சொல்லிக் கொடுத்தார்!.
தேர்வுத்தாளில்,
மதிப்பெண்களை கூட்டி,
மீண்டும் மீண்டும் நான் கேட்ட போதும்
சளைக்காமல் அள்ளி கொடுத்தார்!
Ø பிரம்புகளாலும் வரம்புகளாலும்
ஆசிரியர் அருகில் வராமல் மாணவர் ஒதுங்கி போவர் !
ஆனால்
கரும்பாய் கல்வியை போதிக்கும்
எமது ஆசிரியர்களிடம் எறும்பாய் விரும்பி வருவோம்!
Ø சலீம் சார்
அவர் ஆங்கிலம் வகுப்பில் கற்பிப்பார்
அழகிய சுருக்கமாக !
விடுதியில் மாணவர்களுடன் இருப்பார்
தோழன் போல நெருக்கமாக!
Ø அரபி,ஆங்கிலம்,கணக்கு என
எழுதி முடித்த எம் தேர்வுப் பாடங்கள்!
அப்துர்ரஹ்மான்,உபைதுல்லாஹ்,சாகுல்ஹமீது என
ஆசிரியர்கள் இன்றும் படிக்கும் எம் வாழ்வின் பாடங்கள்!
Ø நீயா நானா வருவதற்கு முன்
இங்கே பட்டி மன்றம்,
சூப்பர் சிங்கருக்கு முன்
இங்கே பாட்டுக்களின் மன்றம்.
இப்போது பள்ளிகளில்.
அரிதாய்தான் பார்க்க முடிகிறது.
Ø பேச்சுப் போட்டிகள், வினாடி
வினாக்கள்
நாங்கள் பங்கேற்றோம்!
ஒரு சொல் கேளீர், நீங்களும் வெல்லலாம்,
டி வி நிகழ்ச்சிகள்தான்
இப்போதெல்லாம் பெரிதாய் பேசப் படுகிறது!
விடுதி
Ø காலை வேளைகளில்
புட்டு வாங்க நோட்டு இல்லாத போது
நோட்டு புக்குககளை போட்டு .
புட்டு சாப்பிட்டோம்!
இன்றும் ஞாபகத்தில்
அது அருமையாய் இருக்கிறது!
Ø வெள்ளி கிழமைகளில்,
ஐஸு வாங்க காசு இல்லாத போது,
பெட்டியில் இருப்பதை போட்டு ,
ஐஸ் வாங்கி சாப்பிட்டோம்!.
இன்றும் நினைவுகளில்
அது இனிமையாய் இருக்கிறது!
Ø நள்ளிரவு ஒரு மணி,
நாங்கள் யாருக்கும் தெரியாமல் எழுந்து,
கேசரி செய்து சாப்பிட்டோம்,
அது கூட்டாஞ்சோறு!
Ø மின்சாரம் இல்லாத இரவுகள்
இரவு வெட்ட வெளியில் வெளிச்சத்தில்
உணவு சாப்பிட்டோம்
அது நிலாச் சோறு!
Ø பரிவு, பாசம்
விடுதி
குடும்பத்திற்கு அப்பால்,
ஒரு குடும்பமாய் இருந்தது!
Ø தன் சொந்தப் பிள்ளைகள் போல
அப்பா (தாளாளர்) வீட்டிற்கு அழைத்து
விருந்துக் கொடுப்பார்!
தன் சொந்தத் தம்பிகளாய் பாவித்து
இரவு நாங்கள் தூங்கி விட்டாலும் எழுப்பி
சேட் அண்ணன் (வார்டன் ) சாப்பிட வைப்பார்!
Ø கண்டிப்பு, கவனம்,
விடுதி
வீட்டிற்கு அப்பால்,
ஒரு வீடாய் இருந்தது!
Ø சிகரெட் குடித்தார்களா?
என சிலரை கடைவீதியில் இருந்து
வந்ததும் ஊத வைத்துப் பார்ப்பார் சேட் அண்ணன்!
காலையில் பல் துலக்கியாச்சா ?
என பல்லைக் காட்டச் சொல்லி
தேநீர் கொடுப்பார் பஷீர் அண்ணன்!.
Ø எம்மை செதுக்கிய நன்மக்களில்
வாழுபவர்கள்
நீண்ட ஆயுளுடன் பிரகாசிக்கவும்
அல்லாஹ்வின் பால்
மீண்டவர்கள்
சுவனத்து சோலையில் பிரவேசிக்கவும்
பிரார்த்திக்கிறேன்!
Aமுஹம்மது
அபூதாஹிர்
புலிவலம் ஜாமியுள் பிர்தவ்ஸ் மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன் .அதன் முதலாம் ஆண்டு முன்னால் மாணவர்கள் கலந்துக் கொண்ட நிகழ்ச்சி சமீபத்தில் பள்ளிக் கூடத்தில் நடைப் பெற்றது .அதில் வெளியிடப் பட்ட மலருக்காக இக்கவிதை எழுதப் பட்டது
****************************************************************************************
கருத்துகள்
கருத்துரையிடுக