இந்திய முஸ்லிம்களும் குடியரசு தினமும்
திருச்சி - A.முஹம்மது அபூதாஹிர்
+918675881880
ஒவ்வோரு இந்தியனுக்கும்
இரண்டு தினங்கள் முக்கியமானவை. இந்திய முஸ்லிமுக்கு இவை மிகவும்
முக்கியமானவை.அவற்றின் மூலம் அவனது தேசப் பற்றை அவன் வெளிப்படுத்துகிறான்.மேலும்
அவன் வெளிப் படுத்த வேண்டும் என்று எதிர்ப் பார்க்கப்படுகிறான்.ஒன்று சுதந்திர தினம் (ஆகஸ்டு 15 ) மற்றொன்று
குடியரசு தினம் (ஜனவரி 26).
சுதந்திர தினம் அன்று
முஸ்லிம்கள் தங்கள் முன்னோர்கள் இந்த
நாட்டிற்கு செய்த தியாகங்களை உணர்த்த வேண்டியது அவசியமாகும்.
முஸ்லிம்களின்
முன்னோர்களான முகலாயர்கள், சுல்தான்கள், நவாப்கள், சூரிகள், இந்த நாட்டை
ஒருங்கிணைக்க பாடு பட்டுள்ளார்கள். சமூக சீர்திருத்தம் செய்துள்ளார்கள்.மக்களுக்கு
நல்லாட்சியை வழங்கி உள்ளார்கள்.இந்த நாடு அந்நிய ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட
போது பல முஸ்லிம் மன்னர்கள் தங்களின்
இன்னுயிர்களையும் அளித்துள்ளார்கள்.
ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப்போர்
செய்வதை உலமாக்கள் ஜிஹாத்- புனிதப் போர் என்று பத்வா
கொடுத்தார்கள்.அவர்களும் நேரடியாக களத்தில் நின்று பரங்கியரை எதிர்த்துப் போராடி வீரமரணம்
அடைந்தார்கள். முஸ்லிம் செல்வந்தர்களில் இருந்து தெருவில் பாடி யாசகம் கேட்கும் பக்கீர்கள் வரை நாட்டின்
சுதந்திரத்திற்கு பொருளைக் கொண்டும்
உயிரைக் கொண்டும் பங்களிப்பு செய்தார்கள்.ஆங்கில அரசின் கீழ் பணியாற்றிய
முஸ்லிம்கள் பணியை விட்டு வெளியேறினார்கள்.. ஆங்கில கல்வி கற்றுக் கொண்டிருந்த
முஸ்லிம்கள் படிப்பை பாதியில் விட்டார்கள்.
நாட்டின்
சுதந்திரத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய பணியை சொல்ல வேண்டியது மற்றவர்கள் முஸ்லிம்
சமூகத்தை தியாகப் பரம்பரை என்று புகழா விட்டாலும் துரோகப் பரம்பரை என்று புழுதியை வாரி வீசாமல் இருக்கவாவது வழி
வகுக்கும். இது சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்த சுருக்கமாகும்.
குடியரசு தினம் இந்தியாவின்
அரசியல் சாசனம் அமுலுக்கு வந்த தினமாகும். தற்போது இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள்
அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள சுதந்திரம்
மற்றும் உரிமைகளை பெற்றுள்ளார்களா? என்பதை அவர்கள் உணர வேண்டியதும் தேசத்திற்கு உரைக்க வேண்டியதும் அவசியமாகும்.
அரசியல் சாசனம் அனைத்து
இந்தியர்களுக்கான உரிமைகள்,சுதந்திரம், சமூக நீதி,அரசு மற்றும் அதிகாரிகளின் கடமைகள்
ஆகியனவற்றை தெளிவாக குறிப்பிடுகிறது. அந்நியர்களான ஆங்கிலேயர்களால் அவர்களுக்கு
சாதகமானவர்களுக்கு சலுகைகள் காட்டும் மற்றும் பாரபட்சமான சட்டங்கள் கொண்ட நீதி
மற்றும் நிர்வாக அமைப்பிலிருந்து இருந்து மாறி அனைவருக்கும் சமமான சமூக நீதியின்
அடிப்படையிலான உரிமைகள் மற்றும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய
மண்ணில் வாழும் பல்வேறு மத கலாச்சார இன மக்களை கருத்தில் கொண்டு எழுதப் பட்டது.
நாட்டின் விடுதலைக்காக
மற்ற சமூகத்துடன் சேர்ந்து முஸ்லிம்களும் மாபெரும் பங்களிப்பை செய்துள்ளனர். எனவே
விடுதலைக்குப் பின் நாட்டின் வளங்களில் மற்றும் முன்னேற்றத்தில் பகிர்வில்
அனுபவிக்கவும் , அமைதியான சுதந்திரமான வாழ்வு வாழவும் மற்ற மக்களுடன் சேர்ந்து
முஸ்லிம்களுக்கும் எல்லா விதமான
உரிமைகளும் சுதந்திரமும் உண்டு. நாட்டின் அரசியல் சாசனம் அதற்கு உறுதி
அளித்துள்ளது.
இந்தியாவின் அரசியல்
சாசனத்தின் முகப்புரை “சமூக பொருளாதார
மற்றும் அரசியல் நீதி, சிந்தனை,கருத்து நம்பிக்கை ,வழிபாடு ,மதம் ஆகியவற்றில்
சுதந்திரம் அனைவருக்கும் கொடுக்கப் பட வேண்டும் என்று கூறுகிறது
இந்தியத் திருநாட்டின்
அரசியல் சாசனத்தின் மூன்றாவது பகுதியின் அடிப்படை உரிமைகள் பிரிவுகள் 15, குடிமக்கள்
யாரையும் மதம், இனம், மொழி ,வட்டாரம் ஆகியவற்றின் மூலம் வேலை கொடுப்பதிலோ,வீடு
கொடுப்பதிலோ, கல்விக் கூடங்களில் சேர்ப்பதிலோ
யாரையும் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது என்றுக் கூறுகிறது.
மேலும் அடிப்படை உரிமைகள்
பிரிவுகள் பிரிவு (25 மற்றும் 26) ஒவ்வோருவரும் அவரவர் விரும்பும் சமயத்தை
பின்பற்றவும், பிரச்சாரம் செய்யவும் உரிமையுண்டு என்றுக் கூறுகிறது. மேலும்
சிறுபான்மையினர் (மொழி மற்றும் மதத்தால் ) கல்விக் கூடங்கள் நடத்தவும் உரிமை உண்டு
என்றுக் கூறுகிறது. இவை அனைத்தும் பொதுவாக முஸ்லிம்களும் மற்ற மக்களைப் போல சமமாக
சமூக நீதியுடன் நடத்தப் படவேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கி உள்ளது. அது மட்டுமின்றி
அடிப்படை உரிமை பிரிவின் உட்பிரிவுகள் 19 முதல் 22 வரை பேச்சு மற்றும்
கருத்துக்களை வெளியிடும்உரிமை, இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்லும் உரிமை,இந்தியாவின்
எந்தப் பகுதியிலும் வாழும் உரிமை,ஒருவர் எந்தத் தொழிலையும் அல்லது எந்தப்
பணியையும் மேற்கொள்ளும் உரிமை, ஒருவரைத் தகுந்த காரணமின்றி கைது செய்யப் படுவதில்
இருந்து சட்டப் பாதுகாப்பு,சுரண்டலுக்கு எதிரான உரிமை,கல்வி உரிமை ஆகிய அனைத்து
மக்களுக்கும் பொதுவான உரிமைகளும் இந்திய
முஸ்லிம் குடிமக்களையும் உள்ளடக்கியதே.
ஏட்டில் எல்லாம்
உள்ளது. ஆனால் நாட்டில் நடப்பது என்ன?
இந்திய முஸ்லிம்கள்
நடத்தப் படக் கூடிய விதத்தை பார்க்கும் போது அரசியல் சாசனத்தை ஆசனத்தில்
உள்ளவர்கள் பொருட்படுத்தவே இல்லை என்பதையே அது காட்டுகிறது. அது மட்டுமின்றி
தங்களுக்கு தோதுவாக விளக்கங்களை எடுத்துக் கொண்டு அரசியல் சாசனத்தின் மூலமே முஸ்லிம்களை
சட்டப் பூர்வமாக புறந்தள்ளக் கூடிய நிலையைத்தான் அரசின் பொது சிவில் சட்ட முயற்சி,
இட ஒதுக்கீட்டிற்கு முட்டுக் கட்டை,சில மாநிலங்களில் கொண்டுவரப் பட்ட மதமாற்ற
சட்டங்கள் ஆகியன காட்டுகின்றன.
முஸ்லிம்களுக்கு இன்று
அரசு மற்றும் தனியார் பணிகளில் பாரபட்சம் காட்டப் படுகிறது. நேர்முகத் தேர்விலேயே
முஸ்லிம் என்று அறிய வந்தால் புறக்கணிக்கப் படுகிறார்கள்
பொது இடங்களில்
முஸ்லிம்களை அச்சுறுத்தலாக பார்க்கிறார்கள்.
செய்தி நிறுவனங்கள்
குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தால் உடனடியாக முஸ்லிம்களை குற்றம் சுமத்துகின்றன.
அப்பாவி முஸ்லிம்களை
காவல் துறை கைது செய்கிறது. பல வருடங்கள் எந்த விசாரணையும் இன்றி சிறைகளில்
முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் குற்றம் சுமத்தப்
பட்டபோது முதல் பக்கம் செய்தி வெளியிட்டு அவர்களை இழிவுப் படுத்தி அவர்களின்
குடும்பத்தை சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்தும் பத்திரிக்கைகள் அவர்கள்
நிரபராதிகள் என்று நிரூபிக்கப் பட்டால் அந்த செய்தியை பத்திரிக்கையின் கடைசிப்
பகுதியில் குறுஞ்செய்தியாக வெளியிட்டு அமைதியாக இருந்து விடுகின்றன. சிறையில்
பாதிக்கப் பட்டு வெளி வரும் மக்களுக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்குவதில்லை.
காஷ்மீரில் அரசின் காவல்
துறை மற்றும் ராணுவத்தால் சில பகுதிகளில் தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில்
முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப் பட்டார்கள். பலர் காணமல் போனார்கள்.அதனால் பலர்
விதவைகள் மற்றும் அனாதைகள் ஆனார்கள்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும்
பகுதிகளில் அரசுப் பள்ளிகூடங்கள், வங்கிகள்
மற்றும் பெரும்பாலும் அலுவலகங்கள் இல்லை.ஆனால் போலிஸ் நிலையங்கள்
இருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு வீடுகள்
கொடுக்கப் படுவதில்லை. முஸ்லிம்களுக்கு சில பகுதிகளில் வங்கிகளில் கடன் கூட
கொடுக்கப் படுவதில்லை.
முஸ்லிம் சமூக
சட்டங்களில் அரசும் நீதிமன்றங்களும் தலையிடுகின்றன. ஷாபானு ஜீவனாம்ச பிரச்சினை, பெரம்பலூர் இளம் முஸ்லிம்
பெண் திருமணம் அரசால் தடுக்கப் பட்டு கோர்ட்டும் அதை நியாயப் படுத்தியது, உபி யில்
ஒரு முஸ்லிம் அரசு ஊழியர் இரண்டாம் திருமணம் செய்தது கோர்ட்டு செல்லாது என
அறிவித்தது, முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய பள்ளிகளில் தடுக்கப் படுவது,அரசுத்
தேர்வுகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை கட்டாயப் படுத்தி நீக்குவது, அண்மையில்
கோர்ட்டு முத்தலாக் பிரச்சினையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்கி அரசு கொண்டு
வந்த மசோதா ஆகியவற்றை உதாரணமாக சொல்லலாம்.
முஸ்லிம்களுக்கு எதிரான
கலவரங்கள் கோவை, மும்பை, பகவல்பூர், முஜப்பராபாத்,குஜராத் என இந்தியாவில் பல
இடங்களில் நடை பெற்றன.ஏற்கனவே அனைத்து முன்னேற்றத் திட்டங்களிலும் புறக்கணிக்கப்
பட்ட முஸ்லிம்கள் இக்கலவரங்களின் மூலம் மேலும் நலிவடைந்தார்கள். முஸ்லிம் ஆண்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகள் படுகொலை செய்யப் பட்டார்கள்,அவர்களின் பொருள்கள்
சூறையாடப்பட்டன. பெண்கள் கற்பழிக்கப் பட்டார்கள்.சொந்த நாட்டிலேயே அகதி
முகாம்களில் தள்ளப் பட்டார்கள். கலவரங்களுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப் பட வில்லை. பாதிக்கப் பட்ட முஸ்லிம்களே பயங்கரவாத குற்றம் சாட்டப் பட்டு சமூகத்தை
விட்டும் ஒதுக்கப் பட்டார்கள்.
அறுபத்து ஒன்பதாவது
குடியரசு தினம் இந்தியா கொண்டாடும் இத்தருணத்தில் இந்திய முஸ்லிம்கள்
அனைவருக்கும் அரசியல் சாசனத்தின்
அடிப்படையில் சுதந்திரம் மற்றும் உரிமைகள் முழுவதும் கிடைக்கப் பெற அரசுகள் ஆவன
செய்ய வேண்டும்.
எழுத்தாளர் குஷ்வந்த்சிங் இன்றைய
முஸ்லிம்களின் முன்னோர்களின் தியாகங்கள் குறித்து
குறிப்பிடும்போது “இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் முஸ்லிம்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள்தொகை
விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம்
அதிகமாகவே இருந்தது”. (இல்லஸ்டிரேட்டட்
வீக்லி, 29-12-1975) என்று குறிப்பிடுகிறார்.
சுதந்திரத்திற்கு தியாகம்
செய்த முஸ்லிம்களின் வழிதோன்றல்களான
இன்றைய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலை நிலை
குறித்து ஆய்வு செய்த அறிக்கை சமர்ப்பித்த நீதிபதி ராஜேந்திர சச்சார் குழு பல
மாநிலங்களில் கல்வி, பொருளாதார
நிலைகளில் தலித் மக்களை விடவும், துப்புரவுத்
தொழிலாளர்களை விடவும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பின் தங்கியிருப்பதாகவும் , கல்வி, வேலை வாய்ப்பு போன்றவை முஸ்லிம் சமூகத்திற்கு
மறுக்கப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சியான உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இன்று பொருளாதாரம் கல்வி
மற்றும் வேலை வாய்ப்புகள் இன்றி திண்டாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் இந்திய
அரசியல் சாசனம் தங்களுக்கு அளித்துள்ள உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எதிர்வரும்
காலத்திலாவது அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அறுபத்து ஒன்பதாவது குடியரசு தினத்தை கொண்டாடி
வருகிறார்கள்.
சுதந்திரத்திற்கு உயிர்
பொருள் கொடுத்த முஸ்லிம்களின் வழிதோன்றல்களான இன்றைய முஸ்லிம்களின் உயிரையும்
பொருளையும் கலவரங்கள் மற்றும் வன்முறைகள் நிகழாவண்ணம் பாதுகாப்பது ஆசனத்தில்
உள்ளவர்களின் அரசியல் சாசன கடமையாகும்.
தனது
விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் சுதந்திரத்திற்கு
பங்களிப்பு செய்துள்ள முஸ்லிம் சமூகத்திற்கு, அரசு அவர்கள் கேட்கும் பதினைந்து
சதவீதத்திற்காவது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பது
அவர்களின் கோரிக்கை மட்டுமல்ல, அது சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட
முஸ்லிம்களின் வழிதோன்றல்களுக்கு இந்த நாடும் அரசும் செய்யும் நன்றி கடனுமாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக