சுதந்திரப் போராட்டம் - ஜிஹாத்


திருச்சி A .முஹம்மது அபூதாஹிர்
 தோஹா - கத்தர்
thahiruae@gmail.com


 தாடியும்,தொப்பியும்
தீவிரவாத சின்னங்களாகவே
தெரியும் சிலருக்கு !
தெரியுமா ?
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்
தங்கள் இன்னுயிர்களையே தந்தார்கள்
சுதந்திரத்திற்கு!

 மத வழிப்பாட்டுத் தளங்கள் எல்லாம்
மந்திரம் ஓதவே
பயன் படுத்தப்பட்டது !
மசூதிகளில்
குத்பாக்களில்தான்
சுதந்திரத்திற்காக முதலில் குரல் கொடுக்கப் பட்டது !

 “ஜிஹாத்“ என்றாலே
பயங்கரவாதம் என
பிரச்சாரம் செய்யப்படுகிறது !
நாட்டின் சுதந்திரபோராட்டம்
“ஜிஹாத்” - புனிதப் போர் என்றுதானே
முஸ்லிம்களால் பிரகடனப் படுத்தப்பட்டது !

 அவரோடு சேர்ந்து
சாப்பிடக்கூடாது,
அவர் நம் தெருவில்
நடக்கக் கூடாது ,
ஆச்சாரியங்கள் இப்படித்தான் !
ஆங்கிலேயர் கீழ் பணியில் இருக்கக் கூடாது !
ஆங்கிலம் கற்கக் கூடாது!,
உலமாக்கள் “பத்வா” மதக் கட்டளையிட்டார்கள்
முஸ்லிம்களுக்கு,
ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம் அப்படித்தான் !

 ஸாரே ஜஹான்ஸே அச்சா
ஹிந்துஸ்தான் ஹமாரா
முதல் தேசிய கீதம் எழுதியது நாங்கள் !
யாரோ சொல்கிறார்கள்
வந்தே மாதரம் பாடாவிட்டால்
எங்களுக்கு நாட்டுப் பற்று இல்லையாம்,
இது சரியா ?
சொல்லுங்கள் நீங்கள் !

 தேசத்தில் உள்ள மதரஸாக்கள்
தீவிரவாதத்தை ஆதரிக்கின்றன என
சிலர் அவதூறை பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
தேவ்பந்த் மதரஸாவின்  ஆயிரக்கணக்கான மாணவர்கள்
தேச சுதந்திரத்திற்கு இன்னுயிர்களை தந்ததை
பேச அவர்கள் மறுக்கிறார்கள்!

 சுதந்திரம் இன்றேல் வீரமரணம்
வட்டமேஜை மாநாட்டில் முழங்கிய
மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர்
இலண்டனிலேயே  உயிரிழந்தார் !
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய
முகலாயப் பேரரசர் பகதூர்ஷா ஜாஃபர்
நாடுக் கடத்தப் பட்டு
இரங்கூனில் உயிர் துறந்தார் !

 நாட்டிற்கு உயிர்கொடுத்த ஜோதி
ஆலிம் அஹ்மது ஷா
புகழ்ந்தார்  இந்து மகா சபையின் வீர சவர்க்கார் !
சுதந்திரத்திற்கு திப்பு சுல்தான் உயிர்க் கொடுத்ததும்
இந்தியாவே எங்கள் கைக்கு வந்து விட்டது
கொக்கரித்தது கிழக்கிந்திய கம்பெனியான ஆங்கிலேய சர்க்கார் !

 கப்பல் ஓட்டியது  வ .உ. சி
வரலாற்றுப் புத்தகங்களில்
சொல்லித்தருகிறார்கள் !
கப்பல் கட்ட இரண்டு  இலட்சம்
பக்கீர் முஹம்மது ராவுத்தர் கொடுத்தாரே
அதை ஏன் சொல்லித் தர மறுக்கிறார்கள் ?

 மருது பாண்டியர்
சுதந்திரத்திற்கு உயிரைக் கொடுத்தார்கள் !
மறுக்க வில்லை நாம் ?
ஏன்
மருத நாயகம் யூசுப்கான்
சுதந்திரத்திற்காக உயிர் தந்ததை
மறந்து விட்டோம் ?

 பூரண சுதந்திரமே
எங்கள் முதல் பிறப்புரிமை
முதலில் முழங்கினார்
அறிஞர் ஹஜ்ரத் மொஹானி.
திலகர் நினைவு
சுயராஜ்ஜிய நிதிக்கு
காந்தியிடம் ஒரு கோடி வழங்கினார்
தொழிலதிபர் உமர் சுபஹாணி


காசோலைக் கொடுத்து
காந்திஜியிடம் வேண்டிய பணம்
எடுத்துக் கொள்ள சொன்னார்
வள்ளல் ஜமால்  முஹம்மது !
ஒரு கோடி
நேதாஜியின் தேசிய இராணுவத்திற்கு
நிதிக் கொடுத்தார்
வள்ளல் ஹபீப் முஹம்மது !

 சுதந்திரப் போரின் போது
பருத்தி ஆடைக்கு
“கதர் “ என்று பெயர் வைத்தார்
அலி சகோதர்களின் அன்னை பீ அம்மா!
 ஆங்கிலேயரை எதிர்த்து
பல போர்களில்
படை நடத்தி கதற வைத்தார்
 அயோத்தி ராணி பேகம் மஹல்!

 “தங்களின் விகிதத்தை விட அதிகமாக
   சுதந்திரத்திற்கு தியாகம் செய்தவர்கள் “முஸ்லிம்கள் “     என்கிறார்  குஷ்வந்த்  சிங் என்ற எழுத்தாளர்!
  நாங்கள் இருக்கும் விகிதத்திற்குத்தான்
   இட ஒதுக்கீடு கேட்கிறோம்
      கொடுப்பாரா இன்றைய ஆட்சியாளர்!

*********************************************************************************கதர்” என்றால் அரபி வார்த்தைக்கு கண்ணியம் என்று பொருள். ரமளானின் புனித இரவான லைலத்துல் கத்ர் – கண்ணியமான இரவு என்ற சொல்லப் படுவது குறிப்பிடத்தக்கது.
சாரே ஜஹான்ஸா அச்சா என்னும் சுதந்திர கீதத்தை எழுதியவர் அல்லாமா இக்பால்.

(இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு குறித்து சுருக்கம் கருதி சில குறிப்புகள் மட்டுமே இங்கு தரப் பட்டுள்ளன )
****************************************************************************

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !