இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு தேவையா? சம்சுத்தீன் காசிமி சரியாகத்தான் சொல்கிறாரா ?


திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்
அண்மையில் சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் மவ்லானா சம்சுத்தீன் காசிமி அவர்கள் இஸ்லாமிய பார்வையில் இட ஒதுக்கீடு கிடையாது என்று பேசினார் .
திறமை மற்றும் தகுதி அடிப்படையில்தான் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட வேண்டுமே தவிர இனத்தின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு செய்யும் இட ஒதுக்கீடு அடுத்த இனத்துக்கு செய்யப் படும் அநீதி என்பது  இமாம் அவர்களின் கருத்து .இதன் மூலம் தகுதி அற்றவர்கள் பதவிக்கு வருகிறார்கள் அதனால் நிர்வாகம் சீரழிகிறது என்கிறார் அவர் .
அதற்க்கு அவர் ஆதாரமாக எடுத்து வைத்த ஹதீஸ் இதுதான் தகுதி அற்றவர்கள் பதவிக்கு தேர்ந்தேடுக்கப் படல் இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று
மவ்லவி பி ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எப்படி போராட்டத்தில் பெண்கள் பங்கேற்க செவிலியறாய் சஹாபி பெண்கள் பங்கேற்றதை கூறி பெண்கள் பங்கேற்கலாம் என முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகிறாரோ அவரின் போக்கும் முஸ்லிம் தலைமை பற்றி கூறப் படும் ஹதீஸை அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முஸ்லிம்கள் பெறுவதை சம்பந்தப் படுத்தி பேசுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை .
முதலில் இட ஒதுக்கீடு குறித்து ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் .
இட ஒதுக்கீடு  காலங்காலமாக பெரும் முன்னேற்றத்தில் இருக்கும் ஒரு சமூகத்திற்கும் மிகவும் பின்னடைவில் இருக்கும் சமூகத்திற்கும் இடையே சம நிலையை உண்டாக்குவதற்கு உதவும் ஒரு கருவியாகும் .
இட ஒதுக்கீட்டின் மூலம் சமூகத்தில் ஒடுக்கப் பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள், உடற் திறன் குறைவு அதாவது ஊனமுற்ற மக்கள் ,சமூகத்தின் சரிபாதியான பெண்கள் ,,மத சிறுபான்மையினர் என அனைத்து மக்களும் நாட்டின் வளர்ச்சியின் பகிர்வினை அடைய வழிவகுக்கப் படுகிறது .நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர்களும் உதவ முடிகிறது .
திறமையான மக்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் பின் தங்கி திறமை அற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் படுகிறது என்ற காசிமி அவர்கள் அதன் மறு கோணத்தைப் பற்றி  பேசாமல் இருப்பது வியப்பாக உள்ளது .
உண்மை என்னவென்றால் பிரபல எழுத்தாளர் குஸ்வந்த் சிங்கின் கருத்துப் படி நாட்டின் விடுதலைக்கு  தனது விகிதத்தை விட அதிகமாக தியாகம் செய்த முஸ்லிம் சமூகம் இன்று சுதந்திர இந்தியாவில் அதன் குறிப்பிட்ட விகிதம் நியாயமான எண்ணிக்கைக்கு கூட அரசு பணிகளில் இடமளிக்கப் படாதது மிகவும் வேதனையானது .அரசு பணிகளில் இந்த நிலை என்றால் தனியார் துறை நிறுவனங்களில் துவேசம் தலை விரித்து ஆடுகிறது .முஸ்லிம்களுக்கு வேலை கொடுக்கப் படக்கூடாது என்பது எழுதப் படாத விதியாக உள்ளது .
என் டி டிவி ,பி பி சி ,அல்ஜஸீரா போன்றவை எப்படி முஸ்லிம்கள் தனியார் துறைகளில் புறக்கணிக்கப் படுகிறார்கள் எனபதை அண்மை காலங்களில் படம் பிடித்து காட்டத் துவங்கி உள்ளன .மேற்கு வங்கத்தில் செவிலியறாய் பணி புரியும் ஒரு பெண் தன் பெயரை இந்துப் பெயராக வேலைக்காக மாற்றி உள்ளார் .அவர் வேலை செய்யும் இடத்தில் அவர் இந்து என்றே பதிவு செய்துள்ளார் .அப்படித்தான் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார் .தெரிந்தால் அவர் வேலை போய் விடும் பாருங்கள்! ,இதுவெயெல்லாம் ஒரு சிறு உதாரணம் .
இன்று மத துவேசம் அனைத்து அரசு துறைகளிலும் தலை விரித்தாடி கொண்டிருக்கும் தருணத்தில் திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைக்கு ஆள் தேர்ந்தெடுக்கப் படுவர் என்பதற்கு என்ன உத்திரவாதம் ?
திறமை எனபது தேர்வாளர் எண்ணத்தையும் பொறுத்தே இருக்கிறது .
அரசு அலுவலகங்களில் முஸ்லிம்கள் பணி புரிய அல்ல அவர்கள் அரசின் சேவைகள்  பெறுவதில் கூட புறக்கணிக்கப் படுகின்றனர் .முஸ்லிம் என்றால் தாமதப் படுத்துவது ,பதிவுகளில் குளறுபடி செய்வது ,எல்லாவற்றுக்கும் மேலாக மக்களை பாதுகாக்கும் காவல் ,இராணுவம் ஆகியன முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் கை கட்டி வேடிக்கை பார்த்தல் ,சில இடங்களில் காவிகளுடன் கைகோர்த்து முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றில் ஈடு படல் ஆகியன நம் கண்முன்னே நடக்கும் நிதர்சனமான நிகழ்வுகளாகும் .இத்தகைய நிலையில் இருக்கும் இந்தியாவில் இட ஒதுக்கீடு எனபது முஸ்லிம்களுக்கு நியாயமானது மட்டுமல்ல .பாதுகாப்பானதும் ஆகும்.அண்மையில் சில மாதங்களுக்கு முன்  முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள்  குறித்து ஆய்வறிக்கை உச்ச நீதி மன்றத்தில் அளிக்கப் பட்ட போது அரசின் பாதுகாப்பு அமைப்புகளான காவல்துறை மற்றும் இராணுவத்தில் முஸ்லிம்களின் விகிதம் குறித்து ஆராயுமாறும் முஸ்லிம்களை அவைகளில் தேவையான அளவுக்கு சேர்க்குமாறும் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.
நீதிபதி ராஜேந்திர சச்சார் முஸ்லிம்களின் நிலை குறித்து கூறும் போது முஸ்லிம்களின் பொருளாதார நிலை தாழ்த்தப் பட்ட மக்களை விட மோசமாக உள்ளதாக குறிப்பிடுகிறார் .அவருக்கு அடுத்து அரசால் நியமிக்கப் பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவும் அதை வழிமொழிந்து முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்குமாறு அரசை வலியுறித்தியுள்ளார் .
காசிமி அவர்கள் கூறுவது போல் முஸ்லிம்களில் திறமை அற்றவர்கலல்ல,திறமையான மக்களே இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி இருக்கிறார்கள் .அவர்கள் இதுவரை திறமையின் அடிபடையில் நேர்மையாக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தாலே .இன்று இட ஒதுக்கீடு கணக்கிட்டு இவ்வளவு கொடுங்கள் என்று கேட்க வேண்டிய நிலைமை வந்திருக்காது .ஆனால் துவேசம் ,பணம் ,செல்வாக்கு ஆகியன மேலோங்கி இருக்கும் தேசத்தில் அதற்க்கெல்லாம் இடமே இல்லாமல் போய் விட்டது .வேறு வழியே இல்லாமல் இட ஒதுக்கீடு ஒன்று இருந்தால்தான் அவர்களுக்காவது வேலை கிடைக்கும் .


அடுத்து மோடி ஆட்சிக்கு வந்தால் காசிமி அவர்களின் கருத்துப்படி முஸ்லிம்கள் யாருக்கும் திறமையில்லை .எனவே முஸ்லிம் அல்லாத மக்களையே அரசு பணிகளில் சேர்க்கிறோம் என அரசு அறிவிப்பே வரலாம் ஆச்சரியப் படுவதற்க்கில்லை ..
இன்று தேர்வர்களை மட்டுமல்ல தேர்வாளர்களையும் பார்க்க வேண்டி உள்ளது .அவர்களின் யாரை திறமையாளர் என்று தீர்மானிக்கிறார்களோ அவர்களே தேர்ந்தெடுக்கப் படுவர்.அவர்கள் இனம் மதம் ஆகியவற்றையும் மனதில் வைத்து புறக்கணிக்கும் போது காரணம் திறமை இல்லாதவர் என்று சொல்லி விடலாம் .இந்த நாட்டில் முஸ்லிம்களாக பிறந்து விட்டார்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் அவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்பதுதான் உண்மை .
இன்று அரசின் உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற எத்தனையோ  நீதிபதிகள் .போலிஸ் அதிகாரிகள்,இராணுவ மேஜர்கள் முஸ்லிம்களை கருவறுக்கும் ஆர் எஸ் எஸ் ,பஜ்ரங்தள் போன்றவற்றில் ஈடு படுவதை பார்க்கும்போது இவர்கள் பணிகளில் இருந்த காலம் எப்படி முஸ்லிம்களை அழிக்க அவர்களுக்கு தொல்லை கொடுக்க தங்கள் பணிகளை பயன் படுத்தி இருப்பார்கள் என்பதை அதிர்ச்சியோடு நோக்க வேண்டி உள்ளது .
அது மட்டுமல்ல மறைமுகமாகவே அரசு மற்றும் தனியார்துறை பணிகளில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுதல் நாட்டில் நவீன தீண்டாண்மையாக நடந்துக் கொண்டிருக்கிறது .
அரசு துறையில் மட்டுமல்ல ,தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொடுக்கப்ப பட வேண்டும் என்ற கருத்தும்  அண்மை காலங்களில் மேலோங்கி வருவது குறிப்பிடத்தக்கது .
இட ஒதுக்கீடு இல்லாத காரணத்தினாலேயே இன்று முஸ்லிம்கள் மிகுந்த தொகுதிகளில் கூட முஸ்லிம்களை நிறுத்த முன் வருவதில்லை.
முஸ்லிம்கள் அதை முறியடித்து இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைக்கு நுழையும் தருணம் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப் படக்கூடாது என் பி ஜே பி முதலியன கூக்குரலிடுகின்றன .
காசிமி அவர்களின் கருத்தோ அவர்களுக்கு வழிய சென்று ஆதரவு தருவதாக உள்ளது .
காசிமி நடத்தும் ஐ ஏ எஸ் அகாடமி மூலம் வருடத்திற்கு சிலர் வேலை வாய்ப்பு பெறலாம் .அவரின் முயற்சி பாராட்டிற்குரியது. அதில் தேர்ச்சி அடைபவர்கள் கூட  .வருடத்திற்கு விரல் விடும் எண்ணிக்கைக்குதான்  அதில் வேலை வாய்ப்பு பெறலாம் .ஆனால் இட ஒதுக்கீட்டின் மூலம் அதை விட அதிக எண்ணிக்கைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுவர் .
இட ஒதுக்கீடு என்பதும் நிரந்தரமானதல்ல .அரசியல் நிர்ணய சட்டங்களை வகுத்தவர்கள் அவை ஒவ்வொரு சமூகமும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னேறும் வரை வைத்திருக்கலாம் என்றே யோசனை தெரிவித்துள்ளனர் .
இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பின் தங்கிய எல்லா மத சாதி மக்களுக்கும் அளிக்கப் பட்டுள்ளது .இது அனைத்து சமூக தலைவர்களும் இதில் ஏகோபித்துள்ளனர்.சில மாநிலங்களில் பிராமணர்களுக்கு கூட அளிக்கப் பட்டுள்ளது .

தகுதி அற்றவர்கள் இட ஒதுக்கீட்டின் மூலம் வருவதால் நிர்வாகம் சீரழிகிறது என்ற இமாம் அவர்களின் கருத்து இங்கு பணியிடங்களில் பொருந்தாது .தகுதி என்பதில் திறமையை விட நேர்மை மிக முக்கியமாக நோக்கப் பட வேண்டும்.நேரடி பொது தேர்வு மூலம் வந்த அனைவரும் நேர்மையாக இருக்கிறார்களா ? நாட்டில் ஊழலே இல்லையா ? அநியாயங்கள் நடைபெறவே இல்லையா ?
ஈமானை விட உயர்வாக இட ஒதுக்கீட்டை சிலர் கருதுகின்றனர் என்கிற இமாம் அவர்களின் கருத்து வருந்த தக்கது.தவ்ஹீத் ஜமாஅத் உட்பட அனைத்து அமைப்புகளையும் அவர் சாடுவதாக உள்ளது
அவர்கள் ஈமான் கொண்டு இருக்கிறார்கள் என்ற காரணத்தினால்தான் புறக்கணிக்கப் படுகிறார்கள் .அவர்கள் முஸ்லிம் என்ற வட்டத்தில் நின்றுதான் ஒதுக்கீடு கேட்கிறார்களே தவிர வேலை இல்லை என்பதால் மார்க்கத்தை விட்டு விட்டு வேலை மட்டும் கேட்க வில்லை .
கிறிஸ்தவர்கள்  இட ஒதுக்கீட்டை திருப்பிக் கொடுத்து விட்டார்களாம் .கல்லூரிகள் பள்ளிகள் அமைத்து உள்ளார்கள் அதன் மூலம்  படித்து திறமையாக வெளி வருகிறார்கள் .என்கிறார் காசிமி .
முதலில் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இன்று உள்ள அவர்களின் கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆங்கில அரசால் ஆரம்பிக்கப் பட்டவை ,அல்லது அரசால்  நிதி உதவி அளிக்கப் பட்டவை .அன்றைய  காலத்தில் ஆங்கில அரசால் ஆதரிக்கப்பட்ட  கிறிஸ்தவ மிசினரிகளால் தொடங்கப்பட்டவை.அரசால் ஆதரிக்கப் படும் நிறுவனங்களின்  வளர்ச்சி  .தனிமனித மற்றும் சமூக நிறுவனங்களின் வளர்ச்சியை விட பிரமிப்பாகத்தான் இருக்கும் .அதனை இவர் ஒப்பிடுவது தவறு .

சுதந்திரம் அடையும் முன் ஆங்கில கல்வி கற்பது ஹராம் என ஆங்கிலேயரை  எதிர்த்து வெளியேறிய சமூகம் முஸ்லிம் சமூகம் .அலிகர் ,மற்றும் ஜாமியா மில்லியாவை தவிர வேறு எந்த நிறுவனங்களும் இந்தியாவில் இல்லை .அவையும் சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயரால் அதன் வளர்ச்சி முடக்கப் பட்டது .
இன்று முஸ்லிம்கள் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று அறிவுரை கூறும் காசிமி அவர்கள் இன்று எண்ணிக்கை குறைவாக இருக்கும் எவ்வளவோ  பரப்பளவு  உள்ள அரபி கல்லூரிகளை பொது கல்வியையும் சேர்த்து போதிக்கும் கல்வி முறைக்கு மாற்றினால் அதிக மக்கள் பயன் பெறுவார்கள் .இன்று மேற்கு வங்கத்தில் இப்படித்தான்  பல அரபி கல்லூரிகள் நடை பெற்று வருகிறது .இதன் மூலம் புதிதாக தொடங்கும் கல்லூரிகளுக்கு நிலம் மற்றும் கட்டிட செலவுகள்  மிச்சமாகும் .
மற்ற அமைப்புகள் போராட்டம் நடத்தும் போது அவை கபுறு வணங்கி கூட்டம் ,முஷ்ரிக்குகள் என புறம் தள்ளும் டி என் டி ஜே தாங்கள் போராட்டம் நடத்தும் போது எல்லா மக்களையும் தங்கள் அமைப்பில் இல்லாத மக்களை அழைப்பது ஏன் என்ற அவர் கருத்து நியாயமானது.
அவர் பி ஜே யை மார்க்க கருத்து வேறுபாடுகளில் எதிர்க்கலாம் .ஆனால் தேவையே இல்லாமல் இட ஒதுக்கீடு கூடாது எனபது பி ஜே பிக்கு ஆதரவு தருவது போலாகும் .
காஸிமி அவர்களின் வீடு தாக்கப் பட்டது வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியது .தாக்கியவர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் .குர்ஆன் அழகிய முறையில் விவாதம் செய்வீராக என சொல்லி இருக்க அதை விட்டு விட்டு அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு திட்ட உரிமை உண்டு என்று தான்தோன்றித்தனமாக விளக்கம் கொடுத்து விவாதிக்க வேண்டியதை விட்டு விட்டு தங்களையும் அறியாமல் விரோதிக்க தூண்டும் தவ்ஹீத் ஜமாத்தின் சகோதரர்கள் புரிவது எந்நாளோ? .
அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிய தவ்ஹீத் ஜமா அத் அரசியல்வாதிகளையும் மிஞ்சி போராட்டம் நடத்துவது,ஆதரவு தெரிவிப்பது ,ம ம க வை ஆதரிப்பதை மகா பெரிய பாவமாக காட்டும் வேளையில் தி மு க மற்றும் அ தி மு க வை மாறி மாறி ஆதரிப்பதேல்லாம் எதில் சேரும் என தெரிய வில்லை.சரி அதை விடுவோம் அது தனி தலைப்பு .
டி என் டி ஜெவின் அல்தாபி பத்து சதவீதம் ஆதரவு கொடுத்தால் பி ஜே பி யையும் ஆதரிப்போம் என்பது  வெளிப்படையான பி ஜே பி யின் ஆதரவு காசிமி அவர்கள் இட ஒதுக்கீடே முஸ்லிம்களுக்கு தேவையில்லை என சொல்வது மறைமுக ஆதரவு என்ற தவறான எண்ணங்கள்  மக்கள் மனத்தில் ஏற்பட்டு விடக் கூடாது .இதோ சங்கபரிவார் கூட்டங்கள் சத்தமில்லாமல் வேடிக்கை பார்க்கின்றன .அவர்கள் கொலை செய்ய நினைத்தார்கள் அதற்க்கு முன் இவர்களோ தற்கொலைக்கு முயல்கிறார்கள் .

இட ஒதுக்கீடு மற்ற சமூகத்திற்கு செய்யும் அநீதி அல்ல .இந்த முஸ்லிம் சமூகத்தின் முன்னோர்கள் தங்கள்  உயிர்,பொருள் ,பதவி என அனைத்தையும் நாட்டிற்கு தியாகம் செய்துள்ளார்கள் .ஆம் காசிமி அவர்கள் படித்த தேவ்பந்த் காசிமியா பலகலைகழக உலமாக்களும்  இந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தங்களின் உயிர்களை அர்ப்பணம் செய்தனர்  அவர்களின் வாரிசுகள் இப்போது அவற்றை எல்லாம் திருப்பி கேட்க வில்லை இட ஒதுக்கீடு  மட்டும்தான் கேட்கிறார்கள். இவை சலுகைகள் அல்ல .உரிமைகள் . 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாய்த்தமிழே

எங்களுக்கு சொந்தமானது

பயங்கரவாதம் - சிலுவை முதல் துப்பாக்கி வரை !