இந்திய தூதரக பெண் அதிகாரி கைது . விமர்சனங்களும் ,வினாக்களும்
திருச்சி
A.முஹம்மது அபூதாஹிர்
thahiruae@gmail.com
இந்தியாவின் பெண் தூதரக அதிகாரி தேவயாணி அமெரிக்காவில்
கைது செய்யப் பட்டதற்கு இந்தியா
எடுத்துள்ள பதில் நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கது. இதற்கு முன் பல தடவை
இந்திய ஜனாதிபதி ,அமைச்சர்கள்,மற்றும் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் விமான
நிலையங்களில் சோதனையிடப்பட்டு அவமானப் படுத்தப் பட்ட போது அப்படியெல்லாம் செய்யக்
கூடாது என அன்பாக கண்டித்த இந்தியா முதல் முறையாக இப்போது தனது தூதர் கைது செய்யப்
பட்டதற்கு அதிரடி நடவடிக்கை எடுத்து அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.தேர்தல்
நெருங்கும் நேரமாக இருப்பதால் தேசத்
தலைவர்களும் நாட்டுப் பற்றுடன் ஓட்டுப் பற்றும் கொண்டு மிகவும் அடிக்காத குறையாக
அறிக்கையோடு நிறுத்தியுள்ளனர்.. இது பல வினாக்களையும்,சிந்தனைகளையும் தேச மக்கள் மனதில் எழுப்பியுள்ளது.
இந்திய தூதரக அதிகாரி அமெரிக்காவில் கை
விலங்கிடப் பட்டு அவமானப் படுத்தப் பட்டது ,கைது செய்யப் பட்டது தூதரக விதிமுறைகளை
மீறிய செயல் என பொங்கும் மத்திய அரசு ஏன் இதுவரை இலங்கை அரசு ஆயிரக்கணக்கான
அப்பாவி தமிழ் மீனவர்களை கொன்றுக் கொண்டிருக்கிறது,சிறையில் அடைத்து வைத்து
இருக்கிறது.அது மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வேலைக்குச் சென்று நாட்டிற்கு அந்நிய
செலாவணியை ஈட்டித் தரும் தொழிலாளர்கள் அங்கு வேலை இழந்து அல்லது விதி முறைகளை மீறி
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அரசு அவர்களை
மீட்க எத்தனை தடவை உடனே நடவடிக்கை
எடுத்துள்ளது .நாடு என்பது அதிகாரிகள் மட்டுமா ? குடி மக்களும் உட்படுவார்களா ? என்ற
வினாக்களை எழுப்பியுள்ளது.
இங்கு இந்தியாவில் சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள குற்றம் செய்யாத
அப்பாவி நாட்டு குடிமக்களை தீவிரவாதிகள் என்றோ அல்லது வேறு அரசியல்
காழ்ப்புணர்ச்சி ,அல்லது எந்த காரணமுமின்றி அடைக்கப்பட்ட மக்களுக்கு எத்தனயோ
ஆண்டுகள் அநியாயமாக சித்திரவதை
செய்யப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் அரசு கொடுத்துள்ளது.எத்தனை பேரை விடுதலை
செய்துள்ளது ? அவர்களுக்கு சமூக கண்ணியம்,சுதந்திரம்,உரிமைகள் என்பதெல்லாம்
இல்லையா ?
இந்திய பெண் தூதரக அதிகாரி இந்தியப்
பெண்ணுக்கு குறைந்த ஊதியம் கொடுத்துள்ளது தொடர்பாக கைது செய்யப்
பட்டுள்ளார்.இந்தியாவில் அரசு துறையை தவிர பல தனி நபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறைந்த ஊதியங்கள் கொடுத்து பணியாளர்களின்
உழைப்பை சுரண்டுகின்றன.அரசின் சட்டப்படி குறைந்தப் பட்ச ஊதியத்திற்கும் குறைவாக
ஊதியம் கொடுக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது அரசு எடுத்துள்ள
நடவடிக்கைகள் என்ன ?
அமெரிக்கா என்றுமே தனது சட்டங்களை யாராக
இருந்தாலும் நாடு கடந்து இருந்தாலும் அவர்களை தண்டிப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை.நாடு
கடந்து இன்னொரு நாட்டுக்குள் புகுந்து தன் எதிரியான பின்லேடனை கொன்றது.நமது
நாட்டின் முக்கிய பிரமுகர்கள் அப்துல் கலாம், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஆகியோரையும்
மற்றவர்களை பரிசோதனை செயவதுப் போல விமான நிலையத்தில் பரிசோதனை செய்தது.இன்றும்
அமெரிக்கா விசாப் பெற வேண்டுமெனில் குற்றப் பின்னணி, மற்றும் கைரேகைப் பதிவு ஆகியன
கருத்தில் கொள்ளப் படுகிறது. இப்படி அவர்கள் அவர்களின் சட்டத்திற்கு உட்பட்டு மற்ற
மக்களின்மீது வரம்பு மீறி அவமானம் மற்றும் அடக்குமுறை செய்தார்கள்..ஆனால்
இந்தியாவில் போபால் கார்பரேட் தொழிற்சாலையில் கதிரியக்க கசிவால் கொல்லப் பட்டதற்கு
காரணமான அதன் தலைவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்டர்சன் ஏன் இன்னும் இந்தியாவிற்கு
கொண்டு வரப் படவில்லை?.அமெரிக்காவின் குடிமக்கள் முதல் அதிகாரிகள் வரை அவர்களுக்கு
இலகுவாக விசா முதல் நாட்டில் அனைத்து சலுகைளும் தரப் படுகின்றன.நாட்டின்
குடிமக்கள் விமான நிலையத்தில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள்.ஆனால்
அந்நியர்களான இவர்களுக்கு இவற்றில் அந்த அளவுக்கு கடுமை காட்டப்
படுவதில்லை.அமெரிக்காவின் கம்பெனிகள்
உட்பட பல அந்நிய கம்பெனிகள் மிக இலகுவாக இங்கு கம்பெனிகள் தொடங்க முடியும்
.வரி விலக்குகள்,இலவச மின்சாரங்கள் ஆகியன பெற முடியும்.இங்குள்ள தண்ணீரை எடுத்து
அதில் தாங்கள் வைத்திருக்கும் பெப்சி கொகோலா கெமிக்கல்களை கலந்து அநியாய விலைக்கு
இங்கேயே விற்க முடியும்.நம்முடைய காந்தியடிகளை
பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டே நம்மிடம் ஒபாமா ஆயுதம் விற்க முடியும்.ஏன்
நம்முடைய சட்டங்கள்,நம் மக்களின் நலன், நமது கொள்கை ஆகியவற்றை புறக்கணித்து விட்டு
அமெரிக்காவிற்கு இந்த அளவிற்கு இந்தியா சலுகை காட்டுகிறது. நமது நாட்டின் சட்டம் (LAW
OF THE LAND) இங்கு வந்துள்ள அனைத்து மக்களும் அவர்களும் அந்நியர்களாக இருந்தாலும்
பின்பற்றித்தானே ஆக வேண்டும்.
இன்னொன்றையும் அமெரிக்க விசயத்தில்
கருத்தில் கொள்ளல் சிறந்தது.சில மாதங்களுக்கு முன்பு உலக வங்கியின் தலைவர் ஹோட்டல்
அறை ஒன்றில் பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது
செய்தது.அப்போதும் அவரை கைவிலங்கிட்டு கைது செய்தது.இந்திய பெண் தூதரக
அதிகாரியையும் கை விலங்கிட்டே கைது செய்தது .உலக வங்கி தலைவர் சார்ந்த பிரான்ஸ்
ஏன் கைவிலங்கிட்டீர் என கேட்க வில்லை.சட்டம் முன் அனைவரும் சமம்தான்.இதில் பதவியெல்லாம்
பார்க்கப் படக்கூடாது என்பதில் அவர்கள் கருத்து மோதல் கொள்ள வில்லை .இந்தியாவில்
சாதாரண மக்கள் தவறு செய்தால்,ஏன் குற்றம் மட்டும் சாட்டப் பட்டாலே நாய் போன்று விலங்கிட்டு காவல்துறை அடித்து அழைத்துச்
செல்வதும்..தலைவர்கள்,அதிகாரிகள் தவறு செய்தால் பத்து அடி தள்ளி நின்று பணிவாக அவர்களை
புடை சூழ அழைத்துச் செல்வதும் நிதர்சனமான நிகழ்வுகளாகும்.எனவே
சட்டம் முன் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்.
இந்திய இளம் தலைமுறையினரில் பலர் வேலை மற்றும் படிப்புக்கு அமெரிக்கா
செல்கிறார்கள்.அந்த நாட்டின் படிப்பு பட்டங்களை
இந்திய பட்டங்களை விட உயர்ந்ததாக கருதுகின்றனர்.தேசப் பற்றுள்ள நம்
நாட்டின் தலைவர்களின் பலரின் மக்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர் மற்றும் பணி
புரிகின்றனர்.நம்மை அவமதிக்கும் அமெரிக்காவின் மோகம் எதிர்காலத்தில் நம்மிடம்
அகன்று நாம் நம் நாட்டிலேயே படிப்பு பணி என இருந்தால் இந்தியா பொருளாதாரம்
உயரும்.இந்தியாவின் மதிப்பும் உயரும்.
செவ்விந்தியர்களை கொடுமைப்படுத்தினான் கொலம்பஸ்
.அமெரிக்காவின் வரலாறு இப்படித்தான் தொடங்குகிறது .இந்தியர்களை அமெரிக்கா
அவமானப்படுத்துகிறது .இப்படி அதன் வரலாறு தொடர்கிறது .சுதந்திர தேவி
அமெரிக்காவிற்கு மட்டும் சொந்தம் .சுதந்திரம் அனைவருக்கும் சொந்தம்.
கருத்துகள்
கருத்துரையிடுக